தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

பெருமிதம்: தேசியக்கொடிதான் எங்களுக்கு சாப்பாடு போடுது!

பெருமிதம்: தேசியக்கொடிதான் எங்களுக்கு சாப்பாடு போடுது!
பிரீமியம் ஸ்டோரி
News
பெருமிதம்: தேசியக்கொடிதான் எங்களுக்கு சாப்பாடு போடுது!

பெருமிதம்: தேசியக்கொடிதான் எங்களுக்கு சாப்பாடு போடுது!

திருப்பூர் நகரம் எப்படி டி- ஷர்ட்டு களுக்குப்  பிரபலமோ அதேபோல் ஹூப்ளி நகரம், தேசியக்கொடி தயாரிப்புக்கு! சென்னை கோட்டையிலிருந்து டெல்லி நாடாளுமன்றம் வரை பறக்கும் பிரமாண்ட தேசியக்கொடிகள் அனைத்தும்  இங்கேதான் தயாராகின்றன.  தேசியக்கொடி தயாரிப்பில் முற்றிலும் ஈடுபடுவது பெண்களே என்பதுதான் சுவாரஸ்யம்! 

பெருமிதம்: தேசியக்கொடிதான் எங்களுக்கு சாப்பாடு போடுது!

கர்நாடக மாநிலம் தார்வாட்  மாவட்டத்தில்  ஹூப்ளி நகரம் உள்ளது.  இங்கே,  பெங்கேரி என்ற இடத்தில்  கர்நாடக  காதி கிராமோதயா அமைந்துள்ளது. 1957-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் வளாகத்தில்தான் தேசியக்கொடிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற தேசியக்கொடி தயாரிக்கும் ஒரே நிறுவனம் இதுதான் என்பதை அறிந்தவுடன் விசிட் செய்தோம். இந்த  வளாகம், 17 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. வாசலில் வெங்கடேஷ் மகடி என்பவரின் சிலை வரவேற்கிறது. இவர்தான், இந்த அமைப்பை உருவாக்கியவர்.

தேசியக்கொடிகள் தயாரிக்கும் இடத்துக்குச் சென்றோம். `செருப்பைக் கழட்டிடுங்க...’ என உள்ளேயிருந்து குரல் ஒலித்தது. காவி, வெள்ளை, பச்சை நிறத் துணிகள் அறை முழுவதும் காணப்பட்டன. ஏராளமான  பெண்கள் தேசியக்கொடிகள் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். உள்ளே நுழையும்போதே ஒருவித மரியாதை கலந்த உணர்வுக்குள் ஆட்பட்டுவிடுகிறோம்.   பெரியதும் சிறியதுமாக தேசியக்கொடிகளைப் பார்க்கும்போது, நம்மை அறியாமலேயே சிலிர்ப்பு ஏற்படுகிறது.

பெருமிதம்: தேசியக்கொடிதான் எங்களுக்கு சாப்பாடு போடுது!

எப்படி ஒரு டி-ஷர்ட் தயாராகிறதோ, அதே பாணியில்தான் தேசியக்கொடியும் தயாராகிறது.  தேசியக்கொடி தயாரிக்க ஆறு முக்கியக் கட்டங்கள் உள்ளன.  நூல் நூற்பது, கைகளால் துணி நெசவு செய்வது, சாயம் அடிப்பது, பிளீச்சிங் செய்வது, துணியில் அசோகச்சக்கரம் பதிப்பது, கடைசியாக பச்சை, வெள்ளை, காவி நிறத் துணிகளைச் சேர்த்துத் தைப்பது வரை பெண்களே ஈடுபடுகிறார்கள். ஒன்பது அளவுகளில் தேசியக்கொடிகள் தயாரிக்கப்படுகின்றன. பிரதமர் போன்ற முக்கிய வி.ஐ.பி-க்களின் கார்களில் பயன்படுத்தப்படும் கொடி ஓர் அளவுகொண்டிருக்கும். முக்கியப் பிரமுகர்களின் விமானங்களில் பயன்படுத்தப்படுவது இன்னோர் அளவில் இருக்கும். மேஜையில் வைக்கப்படும் சிறிய ரகக்  கொடிகள் வேறு அளவுகொண்டவை. இப்படிப் பல அளவுகளில் தயாரிக்கப்படும் கொடிகளுக்கு அவற்றின் அளவுக்கு ஏற்றார்ப்போல விலை நிர்ணயிக்கப்படுகிறது.  6 X 4  இன்ச் அளவுகொண்ட கொடி சிறியது. 21 X 14 அடி அளவில் தயாரிக்கப்படுவது பெரியது. 15 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை விலையுள்ள கொடிகள் இங்கே விற்பனை செய்யப்படுகின்றன.

பெருமிதம்: தேசியக்கொடிதான் எங்களுக்கு சாப்பாடு போடுது!

இந்திய தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் வகுத்துள்ள விதிகளுக்கு உட்பட்டே  தேசியக் கொடிகளைத் தயாரிக்க வேண்டும். தேசியக்கொடி தயாரிப்பதற்கான சிறப்பு விதிகள்  2002-ம் ஆண்டில் உருவாக்கப் பட்டுள்ளன. அதன்படி அளவு, வண்ணங்கள், நூல்கள்  பயன்படுத்தப்பட  வேண்டும்.  தேசியக்கொடி தயாரிப்பில் குறைகள் இருந்தால், அதைத் தயாரிப்பவர்கள் சிறைக்குச் செல்லும் வகையில் சட்டம் உள்ளது. அதனால்தான் வேறு எந்தத் தனியார் நிறுவனத்துக்கும் தேசியக்கொடியைத் தயாரிக்க அனுமதி வழங்கப்படவில்லை. இந்தியாவிலேயே தேசியக்கொடிகள் தயாரிக்க உரிமை பெற்ற ஒரே நிறுவனம் என்கிற பெருமையும் இந்த அமைப்புக்கே உள்ளது.

பெருமிதம்: தேசியக்கொடிதான் எங்களுக்கு சாப்பாடு போடுது!

``பார்க்க சாதாரணமாகத் தோன்றினாலும், இந்த வேலையில் நாங்கள் மிகுந்த துல்லியம் காட்ட வேண்டும். இல்லையென்றால், இந்திய தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் ஒப்புதல் கிடைக்காது. ஒரு செட் கொடியில் ஒரு கொடியின் அளவு தவறாக இருந்தால்கூட அந்த செட் கொடிகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுவிடும். இதற்காக 18 விதங்களில் தரப் பரிசோதனைகள் செய்யப்படும். இதுவரை ஒரு கோடிக்கும்  அதிகமான கொடிகளை நாங்கள் தயாரித்திருக்கிறோம்.

பாகல்கோட் என்ற இடத்தில் இதற்கான நெசவு மையம் உள்ளது. ஜீன்ஸைவிட வலுவான துணிகளைத் தேர்ந்தெடுத்து,  அங்கே நெய்து இங்கே அனுப்புவார்கள்.  அந்தத் துணிகளைக் கொண்டுதான் நாங்கள் தேசியக்கொடிகள் தயாரிக்கிறோம்'' என்கிற நிர்மலா, இந்த அமைப்பின் மேலாளர். 10 ஆண்டுகளாக இந்தப் பணியில் ஈடுபடுகிறார்.

பெருமிதம்: தேசியக்கொடிதான் எங்களுக்கு சாப்பாடு போடுது!

``வாழ்க்கை முழுக்க தேசியக்கொடிகளோடு தான்  புழங்குகிறோம். ராணுவம், போலீஸ், மத்திய, மாநில அரசுகள் எல்லாமே எங்களிடம்தான் தேசியக்கொடிகள் வாங்க வேண்டும். எங்களுக்கு வருமானம் குறைவுதான். ஆனால், இந்த வேலையில் இருக்கும் மனநிறைவு, வேறெந்த வேலையிலும் கிடைக்காது’’ என்கிற நிர்மலாவின் கண்களில் பளிச்சிடுகிறது பெருமிதம்.

``10 வருஷத்துக்கு முன்னாடி எதுவுமே தெரியாமத்தான் வேலைக்கு வந்தேன். இங்கே வந்து எல்லாத்தையும் கத்துக்கிட்டேன். எனக்கு மட்டுமல்ல, கிட்டத்தட்ட 100 குடும்பங்களுக்கு தேசியக்கொடிதான் சாப்பாடு போடுது. இங்கே வேலைபார்த்துதான் என் பொண்ணைக் கட்டிக்கொடுத்தேன். பையனையும் படிக்கவெச்சேன். என் குடும்பம் இன்னிக்கு தலைநிமிர்ந்து நிற்குதுனா, அதுக்கு கம்பீரமா பறக்கும் தேசியக்கொடிதான் காரணம்’’ என்று நெகிழ்கிறார், குவிந்துகிடந்த தேசியக்கொடிகளுக்கிடையே   அமர்ந்திருந்த பூர்ணா.

ராயல் சல்யூட்!

- எம்.குமரேசன், படங்கள்: வ.யஷ்வந்த்