விரல் நுனியில் துள்ளும் லாபம் !நிதி ஆலோசகர் அனிதா பட் பணத்தைப் பெருக்கும் மந்திரத் தொடர்
##~## |
தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அனைத்துத் துறைகளிலும் வந்துவிட்டது. சமீபத்திய சர்வே முடிவுகூட, கழிப்பறை வசதியைவிட, இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் மொபைல் போன் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. அந்தளவுக்கு செல்போனின் அபரிதமான வளர்ச்சி, அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைந்து இருக்கிறது. இந்த தொழில்நுட்ப வளர்ச்சியை, நமது முதலீடுகளுக்கு எப்படி பயன்படுத்துவது?
வங்கியில் ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனை செய்வதுபோல், இப்போது... மொபைல் போன் மூலமே மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவதற்கும் வசதிகள் வந்துவிட்டன. ஐ.டி.எஃப்.சி. (மிஞிதிசி) மணி மார்க்கெட் ஃபண்ட், இதற்காகவே பிரத்யேகமாக அறிமுக மாகியிருக்கிறது. நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து ஒரு எஸ்.எம்.எஸ். தட்டினால் போதும். இதற்கு உங்களது மொபைல் போனில் எஸ்.எம்.எஸ். மூலம் பணப் பரிவர்த்தனை செய்ய முதலில் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். எஸ்.ஐ.பி. முறையில், அதாவது சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் மூலம், மாதா மாதம் எப்படி ஃபண்ட் வாங்குகிறோமோ அது போன்ற முறையில், மொபைல் மூலமும் வாங்கலாம். ஐ.டி.எஃப்.சி. (IDFC) மணி மார்க்கெட் ஃபண்டை, எப்படி வாங்கலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.

உங்களது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை தானியங்கி (ஆட்டோ டெபிட் முறை) மூலம் எடுத்துக்கொள்ள முதலில் நீங்கள் அந்த ஃபண்ட் நிறுவனத்துக்கு விண்ணப்பப் படி வத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்தோ அல்லது உங்கள் நிதி ஆலோசகர் மூலமாகவோ சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு அனுப்ப வேண்டும். நீங்கள் அனுப்பும் படிவம், ஒப்புதல் ஆகி வருவதற்கு இரண்டு வாரங்கள் ஆகும்.
வங்கியில் சேமிப்புக் கணக்கில் பணம் போட எப்படி வங்கிக் கணக்கு தேவையோ, அதேபோல் ஃபண்ட் வாங்குவதற்கு என ஒரு ஃபோலியோ எண்ணை, ஃபண்ட் நிறுவனம் நமக்கு ஒதுக்கும். இந்த ஃபோலியோ நம்பர்தான் நீங்கள் வாங்கும் ஃபண்டை வாங்கவும், விற்கவும் பயன்படுத்தும் கருவி. அதாவது, வங்கிக் கணக்கு போன்றது. இந்த ஃபோலியோ எண் கிடைத்துவிட்டால்... இனி, உங்கள் மொபைலில் இருந்து ஐ.டி.எஃப்.சி. ஃபண்ட்டில் முதலீடு செய்யத் துவங்கி விடலாம்.

ஐ.டி.எஃப்.சி. மணி மார்க்கெட் ஃபண்டை வாங்க நினைக்கிறீர்கள் எனில்... INV என டைப் செய்து நீங்கள் முதலீடு செய்யும் தொகை எவ்வளவோ அதனையும் டைப் செய்து 56767267 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். உங்கள் எஸ்.எம்.எஸ். கிடைத்தவுடன் அதற்கான அடையாளமாக ஃபண்ட் நிறுவனத்திலிருந்து உங்களுக்கு எஸ்.எம்.எஸ். வரும். மறுநாள் உங்களுக்கு எவ்வளவு யூனிட் ஒதுக்கப்பட்டுள்ளது என்கிற தகவலும் தெரிவித்து எஸ்.எம்.எஸ். வரும்.
பொதுவாக... மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது, பங்குச்சந்தை முதலீடாக மட்டும் அல்லாமல், பலவிதங்களிலும் நடத்தப்படுகிறது. 'ஈக்விட்டி' என்பது, நாம் முதலீடு செய்யும் பணத்தை அப்படியே பங்குச் சந்தையில் முதலீடு செய்வது. 'பேலன்ஸ்டு ஃபண்ட்' என்பது பாதி பணத்தை பங்குச் சந்தையிலும், மீதியை அரசு கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்வது. தற்போது, எஸ்.எம்.எஸ். மூலம் முதலீடு செய்யப்படும் 'மணிமார்க்கெட் ஃபண்ட்', நிதிச்சந்தை டிரஷரி பிளானில் (Money Market Treasury Plan) மட்டுமே முதலீடு செய்யப் பட்டுள்ளது. அதாவது, அரசு கடன் பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்யப்படும். அதனால், இதில் ரிஸ்க் மிகமிகக் குறைவு.
இன்ஷூரன்ஸ் என்பது உங்கள் குடும்பத்தின் பொருளாதாரப் பாது காப்புக்காக. அதுபோல மியூச்சுவல் ஃபண்ட் முதலீடும் ஒரு குடும்பத்துக்கு மிக முக்கியம். குழந்தையின் படிப்பு, திருமணம், உங்களின் ஓய்வுக் காலம் என ஒவ்வொரு விஷயத்துக்கும் மியூச்சுவல் ஃபண்ட் மூலம் முதலீடு செய்து கொண்டால்... தேவையான நேரத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பெரும்பாலானவர்கள் இன்ஷூரன்ஸ் என்பதை முதலீட்டு அடிப்படையிலேயே பார்க்கிறார்கள். இன்ஷூரன்ஸ் என்பது பாதுகாப்புக்கானது மட்டுமே. மியூச்சுவல் ஃபண்ட் போன்ற முதலீடுதான் வரு மானத்தை கொடுக்கும். எனவே, உங்கள் வருமானத் தில் சிறிதளவு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பேலன்ஸ்ட் மியூச்சுவல் ஃபண்டில் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்வது தான்... உங்களின் எதிர்காலத் தேவைக்கு கைகொடுக்கும். குறுகிய கால தேவை என்றால்... மணி மார்க்கெட் ஃபண்ட் முறையைப் பின்பற்றுவதுதான் புத்தி சாலித்தனம்!
- பணம் பெருகும்...