ஆர்.ஷஃபி முன்னாபடங்கள்: அப்தாஃப் ஆலம் சித்திக்கீ
##~## |
வீட்டு வாசல் தாண்டாமல், முகத்தில் முக்காடு விலகாமல் பீகாரின் கிராமங்களில் வாழும் பெண்களிடையே, புரட்சிப் பெண்ணாக உருவெடுத்திருக்கிறார் 58 வயதான ராஜ்குமாரி தேவி சௌத்திரி!
விவசாயத்தில் இவர் செய்துள்ள சாதனைகள், சேவைகளுக்காக முதலமைச்சரே வீடு தேடி வந்து தந்த பாராட்டு; மத்திய, மாநில அரசுகள் தந்த விருதுகள்; 'சரய்யா விவசாயிகள் வளர்ச்சி மையத்தின்’ பிராண்ட் அம்பாஸிடர் பொறுப்பு; 'கிசான் சாச்சி ஃபுட் புராடக்ட்ஸ்’-ன் உரிமையாளர் என... கிராமத்துப் பெண்மணியான இவர் தொட்டிருக்கும் சிகரங்கள் பல!
'கிசான் சாச்சி' (விவசாய சித்தி) என தன் பகுதி மக்களால் அன்பாக அழைக்கப்படும் ராஜ்குமாரியை, முசாபர்பூர் மாவட்டத்தின் சரய்யா தாலுகாவின் அனந்த்பூர் கிராமத்தில் சந்தித்தோம்...
''சுமார் 23 வருடங்களுக்கு முன் என் கணவர் அவ்தேஷ் குமார் சௌத்திரி, எங்கள் நிலத்தில் புகையிலையைப் பயிரிட்டிருந்தார். சரய்யாவில் புகையிலை கடை தொடங்கியிருந்தார். அவர் கடைக்குப் போகும் சமயங்களில் நான்... வயலுக்குப் போய் விவசாயத்தைப் பார்ப்பேன். ஆனால், அவரும்... குடும்பத்தினரும் இதை விரும்ப வில்லை.

இந்நிலையில், மாநிலத்தில் புகையிலைக்கு எதிரான விழிப்பு உணர்வு கிளம்பவே... எங்களுடைய விவசாயமும் வியாபாரமும் பாதித்தது. இதையடுத்து, சரய்யாவிலுள்ள பீகார் விவசாயிகள் வளர்ச்சி மையத்தில், பெண்கள் சுயஉதவிக் குழுக்களுக்கான பயிற்சி பெற்றேன். அதில் கிடைத்த ஆலோசனைகளின் பலனாக எங்கள் நிலத்தில் இருந்த புகையிலையை அகற்றி, காய்கறி மற்றும் பழங்களை பயிரிட்டதில் நல்ல பலன் கிடைத்தது. கணவரும் குடும்பத்தினரும் என்னைப் பாராட்ட ஆரம்பித்தனர்.
இந்தப் பகுதி விவசாயிகள் அனைவரும் அக்காலத்தில் புகையிலை மட்டுமே பயிரிட்டு வந்தனர். அதனால் ஏற்படும் கேன்சருக்கு நாம் காரணமாகக் கூடாது என விழிப்பு உணர்வு தரும் விதமாக நான் பேச, அதை ஏற்றுக் கொண்டவர்கள், வேறு பயிர்களுக்கு மாறி... குறைந்த நாட்களில் நிறைய லாபம் பார்த்தனர். சுற்றுவட்டாரத்தின் சுமார் 50 கிராமங்களுக்கும் சென்று இதை நான் எடுத்துக் கூறியது... நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியது. இதற்காக நாள்தோறும் வெகுதூரம் நடக்க வேண்டி இருந்ததால் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டு, ஊர் ஊராகச் சுற்றினேன்'' எனும் ராஜ்குமாரியை... 'கிசான் சாச்சி’, 'சைக்கிள் சாச்சி’ என மக்கள் பெயர் சூட்டி அழைக்க ஆரம்பித்துள்ளனர்.

''காய்கறி மற்றும் பழங்களின் பயிர்களுக்கான விதை மற்றும் உரம் இடுவதிலும் எனக்கு நல்ல அனுபவம் உண்டு. 80 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தலைநகர் பாட்னாவில் இருக்கும் பூசாவின் புகழ் பெற்ற ராஜேந்திரா வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கு அவ்வப்போது சென்று, புதுப்புது வேளாண் யுக்திகளை கற்றுக்கொள்வதுடன், பல கிராமங்களுக்கும் சென்று ஆலோசனைகள் தருவேன். கூடவே, ஆலோசனை வேண்டி என் வீடு தேடி வரும் விவசாயிகளும் அதிகம். குறிப்பாக, ஒரு மண்ணைப் பார்த்தவுடன் அது எந்த வகையான பயிர் செய்ய உகந்தது எனக் கண்டறிவதில் நான் கில்லாடி'' என்று பெருமிதம் கொள்ளும் ராஜ்குமாரிக்கு, விவசாயத்தில் அவர் காட்டிய இந்த வேகத்துக்காகத்தான் மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் அமைப்புகளின் பல விருதுகளும், பரிசுகளும் 2002-ம் ஆண்டு முதல் கிடைக்கத் துவங்கியிருக்கின்றன!
''இதற்கிடையே ஊறுகாய், முரபா, வத்தல் போன்றவற்றை தயாரித்து எங்கள் பகுதிகளில் நடக்கும் கோயில் திருவிழாக்களில் விற்பனை செய்யத் துவங்கியதுடன்... விவசாய கண்காட்சிகளிலும் பங்கேற்க, நல்ல லாபம் கிடைத்தது. இப்போது டெல்லியில் வருடந்தோறும் நடக்கும் பன்னாட்டு கண்காட்சியில் 'கிசான் சாச்சி ஃபுட் புராடக்ட்ஸ்’ என்ற பெயரில் என் தயாரிப்புகளை விற்பனை செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன். தற்போதைய ஒரு வருட பிஸினஸ் டர்ன் ஓவர், ரூபாய் ஆறு லட்சம்!'' என்று சிரிக்கும் ராஜ்குமாரி, தான் பெற்ற பலனை அந்தப் பகுதியின் பெண்களும் அடையும் பொருட்டு, அவர்களுக்கும் விவசாய பயிற்சிகள் அளித்து வருவது பாராட்டுக்குரியது.

''பீகாரின் கிராமங்களில் இன்றும் பெண் என்றாலே... முகத்தின் முக்காடை விலக்காமல், வீட்டிலேயே அடைந்து கிடக்க வேண்டிய ஜீவன்களாகவே கருதுகின்றனர். இதை முதல் ஆளாக உடைத்து நான் வெளியேற, மற்ற பெண்களும் வெளியில் கிளம்பி புரட்சியை ஏற்படுத்த என்னை அணுகினார்கள். அவர்களுக்காக பெண்கள் சுயஉதவிக் குழுக்களை உருவாக்கி, வீட்டிலேயே உணவுப் பொருட்களை தயாரிப்பதற்கான பயிற்சி அளித்தேன். அவற்றை விற்பனை செய்ய விவசாயிகள் வளர்ச்சி மையம் வழி ஏற்படுத்தி தந்தது. இப்படி என்னால், இந்த பகுதி கிராமப் பெண்கள் சுமார் 350 பேர் பலன்

பெற்றுள்ளார்கள்!'' எனப் பூரிப்புடன் பேசுகிறார் ராஜ்குமாரி.
சரய்யா விவசாயிகள் வளர்ச்சி மையத்தின் பயிற்சி அதிகாரியான டாக்டர் ஷோபா ராணி, ''எங்கள் அமைப்பைப் பற்றி பொதுமக்களிடம் எடுத்துக் கூறும் பிராண்ட் அம்பாஸிடராக இருக்கிறார் கிசான் சாச்சி. இதனால், சரய்யாவின் விவசாயிகள் வளர்ச்சி மையத்தின் ஆலோசனைக் குழுவிலும் அவரை உறுப்பினராக்கி இருக்கிறோம்.
இவரைப் பற்றி கேள்விப்பட்ட மாநில முதல் அமைச்சர் நித்திஷ்குமார், கிசான் சாச்சியின் வீட்டுக்கே நேரில் சென்று பாராட்டினார். மேலும், பீகார் மாநிலத்தில் சிறந்த விவசாயிகளுக்காக அரசு தரும் 'கிசான்ஸ்ரீ’ என்ற பட்டத்தையும் அளித்து ராஜ்குமாரியை கௌரவித்துள்ளார். இந்த விருதைப் பெற்ற முதல் மற்றும் ஒரே பெண் கிசான் சாச்சி மட்டுமே!'' எனப் பெருமைப்படுகிறார்.
மூன்று குழந்தைகளின் தாயான ராஜ்குமாரியின் வாழ்க்கையைப் பற்றிய டாக்குமென்ட்ரி படம் எடுத்து வரும் மத்திய, மாநில அரசுகளின் வேளாண்மைத் துறைகள், அதை விவசாயிகளிடம் திரையிட்டுக் காட்டி விழிப்பு உணர்வு ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளன.
சல்யூட் சாச்சி!