வாசகிகள் பக்கம் ஓவியங்கள்: ஹரன்
ஒவ்வொன்றுக்கும் பரிசு:

150
ஈ... எறும்பு... கரடி!

##~## |
என் அண்ணன் மகன் யு.கே.ஜி. படிக்கிறான். தன் நண்பன் வைத்து இருக்கும் கரடி பொம்மைபோல தனக்கும் வாங்கி வரச் சொல்லி, என் அண்ணனிடம் கேட்டு அடம் பிடித்தான். ''சரிடா... ஆபீஸ் விட்டு வரும்போது வாங்கிட்டு வர்றேன்'' என்று உறுதி கூறினார். ஆனால், வேலைச் சுமை காரணமாக இரவு 11 மணிக்கு வீடு திரும்பிய அண்ணன், கரடி பொம்மை வாங்கி வர மறந்திருந்தார். ''ஸாரிடா... நாளைக்கு வாங்கிட்டு வர்றேன்'' என்றாலும், சமாதானமாகாமல் அழுது ஆர்ப்பாட்டம் செய்தது அந்த நேரத் திலும் விழித்திருந்த வாண்டு. ''டேய்... ஈ, எறும்புகூட ரோட்டுல இல்லாத இந்த நேரத்துல... எங்க போய்டா கரடி பொம்மை வாங்குறது..?'' என்றார் கடுப்பாகி அண்ணன். ''நாம என்ன ஈ, எறும்பாப்பா வாங்கப் போறோம்..? கரடி பொம்மைதானே வாங்கப் போறோம்..! அது கடையில இருக் கும்!'' என்று வாண்டு அழுதுகொண்டே விளக்கம் சொல்ல, டென்ஷனாக இருந்த என் அண்ணன்... அடக்க முடியாமல் சிரிக்க, வீடே கலகலப்பானது!
- ஹெச்.மெர்லின் ரேச்சல், சேலம்
கவலை வந்தது!

என் பேத்திக்கு மூன்றரை வயதாகிறது. அவள், தன்னுடைய அக்கா மற்றும் நண்பர்களுடன் விளையாடும்போது, ''ஜாக்கிரதையா விளையாடு... எங்கயாவது வேகமா ஓடி விழுந்து உனக்கு அடிபட்டா, எனக்கு கவலை வந்துவிடும்'' என்று எச்சரிக்கை கொடுப்பாள் அவளுடைய அம்மா. ஒருநாள் வெளியே சென்றிருந்த அம்மா, ஆட்டோ கிடைக்காததால் தாமதமாக வீடு திரும்பினாள். உடனே அவளிடம் ஓடிய என் பேத்தி, ''அம்மா... இவ்வளவு நேரம் நீ வீட்டுக்கு வரலைனதும் எனக்குக் கவலை வந்துடுச்சு!'' என்றாள் கண்களில் அன்பு வழிய. ரசித்துச் சிரித்தோம் நாங்கள் அனைவரும்!
- ஸ்வர்ணா பரத்வாஜ், நாக்பூர்
'உம்மாச்சி தலை வெள்ளையாகிடும்!’

என் மூன்று வயதுப் பேத்தியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, ''ஏன் தாத்தா உங்க முடியெல்லாம் வெள்ளையா இருக்கு?'' என்றாள். அந்த நேரம் பால்காரர் வரவே, அவரைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, ''இந்த பால்காரர்தான் என் தலையில் பாலைக் கொட்டிட்டார்... அதான் வெள்ளையாயிடுச்சு'' என்றேன்.
மறுநாள் அருகிலிருந்த அம்மன் கோயிலுக்குச் சென்றபோது, பாலாபிஷேகம் நடந்தது. அதைப் பார்த்ததும் என் பேத்தி, 'தாத்தா... தாத்தா... உம்மாச்சி (அம்மன்) தலை வெள்ளையாயிடப் போகுது...'' என்று பதற்றமாகிக் கத்த, கூடியிருந்தவர்கள் அனைவரும் அவளை நோக்கித் திரும்பினர். நான் நடந்ததைச் சொல்ல, அனைவரும் சிரித்தோம். அர்ச்சகர் பின் அம்மன் மீது தண்ணீர் விட, ''ஓகே... ஓகே... இப்போ எல்லாம் சரியாகிடும் உம்மாச்சி!'' என்று அம்மனுக்கு பேத்தி சமாதானம் சொல்ல, எங்கள் சிரிப்பு இன்னும் பெரிதானது!
- வி.சிவராமகிருஷ்ணன், பல்லாவரம்