Published:Updated:

குடிசைகளை கோபுரமாக்கும் 'கதா'!

'பத்மஸ்ரீ’ கீதாவின் சாதனை பயணம் சரோஜ் கண்பத் படங்கள்: சுரேஷ் பரோலியா

##~##

''கதைகள்தான் நமக்கு அனைத் தையும் கற்றுத் தருகின்றன. இவ்வுல    கில் மனிதன் தோன்றிய அறிவியலில் ஆரம்பித்து...  நம்பிக்கை சார்ந்த மதங்கள் வரை அனைத்தையும் வரலாறுகள், புராணங்கள் என்று கதை வடிவத்திலேயே நாம் அறிகிறோம். எனவேதான்  கதை யைக் களமாக்கி குழந்தைகளுக்கு அறிவூட்ட முனைந்தேன். இன்று நான் பெற்றிருக்கும் இந்த 'பத்மஸ்ரீ’ விருது, அந்த என் முயற்சிக்கான பெரிய அங்கீகாரம்!''

- பளிச்சென சிரிக்கிறார் 'கதா' தொண்டு நிறுவனத்தின் கீதா தர்மராஜன்!

இரண்டு லட்சம் குழந்தைகளுக்குக் கல்விக் கண், சுமார் 98 பள்ளிகள், 145 நூலகங்களில் பயன்பெறும் 12 ஆயிரம் குழந்தைகள், 350 பேருக்கு ஆசிரியர் பயிற்சி, வீட்டைவிட்டு வெளிவராத பெண்களுக்கு சுயவேலை வாய்ப்புப் பயிற்சியுடன் சுகாதாரம், சட்டம், சத்துணவுகளில் விழிப்பு உணர்வு, ஊர் சுற்றிக் கொண்டு இருந்த தெருவோர இளம் தலைமுறைக்கு ஆங்கில மொழிப் பயிற்சி முதல் கம்ப்யூட்டர் கல்வி வரை... இதற்கெல்லாம் உறுதுணையாக எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், ஆசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள் என 1,600 பேர்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் குடிசைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள இந்த நன்மாற்றங்களுக்குக் காரணம்... அங்கு செயல்பட்டுக் கொண்டிருக்கும் 'கதா’ தொண்டு நிறுவனம்தான்! இதன் முகம், மூளை, விலாசமாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதற்காகத்தான்... இன்று 'பத்மஸ்ரீ’ கீதா தர்மராஜன் ஆகியிருக்கிறார் இந்த சென்னைப் பெண்!

குடிசைகளை கோபுரமாக்கும் 'கதா'!

''அப்பா என்.கிருஷ்ணசுவாமி, ஒரு டாக்டர். மேற்கு மாம்பலத்தில் வீடு. ஸ்டெல்லா மேரீஸில் எம்.ஏ, ஆங்கிலம் படித்தேன். என் கணவர் தர்மராஜன், ஐ.ஏ.எஸ். அதிகாரி. திருமணத்துக்குப் பின் ஊட்டி, சென்னை, அமெரிக்கா என்று அவரின் பணியிட மாற்றங்களால் உலகம் சுற்றி, 1988-ல் துளசி, குகா என இரண்டு குழந்தைகளுடன் டெல்லியின் நிரந்தரவாசிகளானோம்'' என்பவருக்கு, அதன் பின்தான் சேவையே வாழ்க்கையாகியிருக்கிறது.

''இந்த சமூகத்துக்குப் பயனுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் என்று மனதில் ஓர் விருப்பம், வெறி. என்ன செய்யலாம், என்னவெல்லாம் செய்யலாம்? என்று தேடியபோது... முனிசிபல் பள்ளிகளும், அதைச் சுற்றியுள்ள குடிசைப் பகுதிகளும் மிகவும் மோசமான நிலையில் இருப்பதை அறிந்தேன். தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவர்கள் குடிசையில் இருந்தாலும், அவர்களிடம் கொஞ்சம் முற்போக்குத் தன்மையும்... வளர்ச்சியும் உண்டு. ஆனால், வட இந்தியாவில், குறிப்பாக டெல்லியில் நிலைமை முற்றிலும் வேறு.

குடிசைகளை கோபுரமாக்கும் 'கதா'!

ஆரியர்கள், மொகலாயர்கள், பாகிஸ்தானியர்கள் என்று யார் வந்தாலும்... முதலில் கால் ஊன்றியது, டெல்லி பகுதி களில்தான். அதன் காரணமாக பல நூற்றாண்டுகளாக இந்தச் சமுதாயம் ஓர் அச்சத்துடனேயே வாழ்ந்து வந்துள்ளது. எனவே, பாதுகாப்பு காரணங்களால் பெண்கள் வெளியே போவதும், குழந்தைகளை வெளியே அனுப்பி படிக்க வைப்பதும் அவர்களிடம் வழக்கத்தில் இல்லாமல் போனது. எல்லா மாநிலங்களிலிருந்தும் பிழைப்பு தேடி டெல்லி வரும் அடித்தட்டு மக்களின் வாழ்விடமும், இந்த குடிசைப் பகுதி களே! அந்த மக்கள் வறுமையுடனும், கல்வியறிவைப் பெறமுடியாமலும் இருந்தனர்...''

- மிக அக்கறையுடனும், நேர்த்தி யுடனும் கள ஆராய்ச்சி செய்துள் ளார் கீதா.

குடிசைகளை கோபுரமாக்கும் 'கதா'!

''குழந்தைகள் நலனில் அக்கறை காட்டும் 'யுனிசெஃப்’ நிறுவனத்தின் டெல்லி அலுவலர்களைச் சந்தித்து, 'என்னிடம் பல ஐடியாக்கள் உள்ளன. நீங்கள் உதவினால், கதை மூலமாகவே கல்வி அறிவு புகட்டி, அந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தலாம்' என்றேன். அவர்களோ, 'தினமும் 400 குழந்தைகள் வயிற்றுப் போக்கால் செத்துக்கொண்டு இருக்கின்றன. உயிர் முக்கியமா... கதை முக் கியமா?’ என்றனர். 'மென்டல் ஹெல்த் இருந்தால், இப்படிப்பட்ட நோய்கள் வராமல் தடுத்துக் கொள்ள அவர்களால் முடியும். கதைகளில் கீரையைப் பற்றியும், இரும்புச்சத்து பற்றியும் பேசலாம்’ என்கிற என் விளக்கம் அவர் களிடம் எடுபடவில்லை.

சொந்த முயற்சியில், 'தமாஷா’ என்கிற சிறு பத்திரிகையை எட்டு மொழிகளில் தயாரித்து குடிசைப் பகுதிகளில் விநியோகித்தோம். இதையடுத்து, டெல்லி நகர்ப்புற வளர்ச்சிக் குழுமத்தின் குடிசை மேம்பாட்டுப் பிரிவு, 'யுனிசெஃப்’ மூலமாக பண உதவி செய்தது. இரண்டு வருடங்கள் தொடர்ந்து வெளியான இந்தப் பத்திரிகையின் வெற்றியை அடுத்து, ’குடிசைப்பகுதியில் ஒரு பள்ளியைத் தொடங்கினால் என்ன’ என்ற ஐடியாவும் டெல்லி அரசிடம் வைக்கப்பட்டது. இதற்காகத் தொடங்கப்பட்டதுதான் 'கதா’ சொஸைட்டி. டெல்லி, கோவிந்தபுரியில் 1990-ல் ஐந்து குழந்தை களோடு தொடங்கப்பட்ட பள்ளியில், இப்போது 1,300 குழந்தைகள்'' எனும்போது, கீதாவின் கண்களில் நிறைவைக் காட்டும் மகிழ்ச்சி.

கற்பனைக் கதைகளை வைத்து கல்வியறிவைப் புகட்டமுடியும் என்கிற அவரின் நம்பிக்கையை நிஜப்படுத்திய விதத்தைப் பகிர்ந்தார் கீதா.

குடிசைகளை கோபுரமாக்கும் 'கதா'!

''எங்கள் 'கதா’ பள்ளியில் புகுத்தியது, ஸ்டோரி பெடகாஜி (Story Pedagogy). அதாவது, ஒரு கதை... குழந்தைகளைச் சந்தோஷப்படுத்துவதுடன், அக்கதையின் கரு, அதில் வரும் சம்பவங்கள், சந்தேகங்கள் மூலம் அவர்களுக்கு அறிவூட்டுவதே எங்களின் நோக்கம். புதிய புத்தகங்கள், புதிய கதைகள் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட 21 மொழிகளில் உள்ள கதைப் புத்தகங்களையும் மொழி பெயர்த்துக் கொடுக்கின்றோம்.

தனியார் நிறுவனங்களும் சில வெளிநாட்டு அமைப்புகளும் நிதி உதவி செய்கின்றன. இப்போது குடிசைப்பகுதி குழந்தைகள், தங்களின் வறுமை, குடும்பச் சூழ்நிலை என்று எல்லா வற்றையும் மீறி காலையில் எழுந்தவுடன் உற்சாகமாக பள்ளிக்கு வருகின்றனர். அரிச்சுவடி முதல் போட்டோஷாப் சாப்ட்வேர் கோர்ஸ் வரை படிக்கின்றனர். ஆரம்பத்தில் ஒற்றை ஆசிரியராக நான் நின்ற 'கதா’ பள்ளியில்... இப்போது 300 ஆசிரியர்கள்!'' என்றவரின் சாதனை, இன்னும் நீள்கிறது.

குடிசைகளை கோபுரமாக்கும் 'கதா'!

''குடும்பத்தின் வறுமையே படிக்க வேண்டிய குழந்தைகளைத் தொழிலாளியாக்குகிறது. அதனால், பெற்றோரின் பொருளாதாரத்துக்கும் வழி செய்தோம். சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பெண்களுக்கு தையல், ஆடைகளுக்கு சாயம் போடுவது, தச்சு என்று பல தொழில்களையும் பயிற்றுவித்தோம். குடும்ப வருமானம் பெருகவே... குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப ஆரம்பித்தனர். எங்களிடம் படித்த குடிசைப்பகுதி குழந்தைகளில் 400 பேர் வரை இன்று ஐ.பி.எம், சிட்டி பேங்க், டெல்லி தனியார் மின்சார விநியோக நிறுவனங்கள், டெல்லி அரசு என பல பெரிய நிறுவனங்களில் பணிக்குச் சேர்ந்துள்ளனர். பொதுவாக ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்றவற்றில் படித்தவர்கள் வெளிநாட்டுக்குப் பறந்து கோடிக்கணக்கில் தங்கள் பேங்க் பேலன்ஸை ஏற்றிக்கொள்வார்கள். ஆனால், குடிசைப்பகுதி போன்ற ஒரு சொஸைட்டி முன்னேறும்போதுதான் நம் நாடு பொருளாதாரத்தில் முன்னேறும். அது நிலைத்து இருக்கும்!

எங்களுடைய பாணியில் கல்வியைப் புகட்ட இப்போது டெல்லி அரசுடன் ஒப்பந்தம் போட்டுள்ளோம். மற்ற மாநில அரசுகளும், மத்திய அரசும் 'கதா’வின் கதவைத் தட்டத் தொடங்கியுள்ளன. அங்கெல்லாம் புத்தகங்களை அனுப்பிக் கொண்டிருக்கிறோம் இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது!''

- தன் 22 வருடப் பயணம் முடித்தும், ஆரம்ப நாள் உற்சாகத்திலேயே இருப்பதுதான், கீதாவின் வெற்றி ரகசியம்!