Published:Updated:

என்னவரே....என்னவரே...

கிருத்திகா உதயநிதி சந்திப்பு: ம.மோகன் படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

##~##

உதயநிதி ஸ்டாலின்... தமிழகத்தின் முக்கியமான அரசியல் குடும்ப வாரிசு. ஆனாலும், அதற்கான இறுக்கம் எதுவும் இன்றி, தன் சினிமா நண்பர்களுடன் சிநேகமாக வலம் வரும் இளம் தயாரிப்பாளர், அறிமுக கதை நாயகன் என்று எளிமையான அடையாளங்களுடனே அனைவரின் மனதில் நிற்கிறார்.

''சில நாட்களாக நான் என் அலுவலகத்துக்குக்கூட செல்லவில்லை. 'ஒரு கல் ஒரு கண்ணாடி ஹீரோ ஆக்டிங் பிரமாதம்’ என்று வீட்டில் வந்து குவிகிற வாழ்த்துக்களை எல்லாம் அவருடன் சேர்ந்து ரிசீவ் செய்து கொண்டிருக்கிறேன். இந்தக் கணம் ரொம்பவே நெகிழ்ச்சியாக இருக்கிறது!''

- கணவரைப் பற்றிப் பேச ஆரம்பித்ததுமே கிருத்திகா உதயநிதி கண்களில் காந்த பாசம்!

''இந்த நூற்றாண்டின் ஆரம்ப நாட்களில் காதல் கீதங்கள் பாடத் தொடங்கிய லவ் பேர்ட்ஸ் நாங்கள். திருமணம் முடிந்து பத்து ஆண்டுகள் ஆன பிறகும் அந்த அன்பு கொஞ்சமும் குறையாமல் இருப்பதற்குக் காரணம்... கணவன், மனைவி, அப்பா, அம்மா என்ற உறவுகளையும் பொறுப்புகளையும் தாண்டி இன்றும் நாங்கள் காதலர்களாகவும் இருப்பதுதான்.

என்னவரே....என்னவரே...

எங்கள் காதல் கதை, அதிக திருப்பங்கள் இல்லாமல் சுபமாக முடிந்த அன்புக் கதை. அப்போது நான் ப்ளஸ் டூ எக்ஸாம் எழுதியிருந்தேன். பல காதலர்களையும்போல் எங்களின் முதல் சந்திப்பும் தோழி வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் நிகழ்ந்தது. அவர் அப்போது லயோலா காலேஜில் செகண்ட் இயர் படித்துக் கொண்டிருந்தார். பரஸ்பர அறிமுகங்களுக்குப் பின் எங்களுக்குள் சிநேகம் வளர்ந்தது. என் பிளஸ் டூ மார்க் லிஸ்ட் வந்தபோது, லயோலா காலேஜில் விஸ்காம் படிக்க அவர் பரிந்துரைத்ததுடன், அதற்கான அட்மிஷன் ஃபார்மாலிட்டிஸ்கள் அனைத்தையும் தானே முன் நின்று செய்து கொடுத்தார்.

'உதய் ரொம்ப கேரிங்’ என்று என் மனதுக்குள் ஒரு வரி விழுந்தது. ஆனால், சீக்கிரமே அவர் என்னிடம் காதலைச் சொல்லி, 'தினமும் உன்னைப் பார்க்கணும், பேசணும்னுதான் உன்னை என் காலேஜ்லயே சேர்த்துவிட்டேன்’ என்றபோதுதான், அவர் என்னிடம் மட்டும் ஸ்பெஷல் கேர் என்பது எனக்குப் புரிந்தது, அது எனக்குப் பிடித்தும் இருந்தது.

'அரசியல் குடும்பம், பெரிய இடம்...’ என்கிற பயம் அந்த 18, 19 வயதில் எனக்கு இருந்ததுதான். ஆனால், அவரின் உறுதியான அன்பும் எளிமையான பண்பும், 'கிருத்திகா... உன்னைக் காலாகாலத்துக்கும் இவர்கிட்ட ஒப்படைக்கலாம்’ என்று என் மனதில் நம்பிக்கை நிரப்பியது. இருவரும் இனிமையாக காதல் வளர்த்தோம். நாங்கள் ஒன்றாக சுற்றித் திரிந்த இடங்களில் அவரின் கோபாலபுரம் வீடும் உண்டு. இவர், 'என் ஃப்ரெண்ட்ஸ்’ என்று தன் வீட்டுக்கு அழைத்துப்போகும் கூட்டத்தில் ஒருத்தியாக நானும் செல்வேன். அத்தையிடம், 'கல்யாணத்துக்கு முன்னயே இங்க வந்திருக்கேன்... உங்க கையால சாப்பிட்டிருக்கேன்’ என்றபோது, அத்தை அவர் காதைத் திருகினார் செல்லமாக.

அவர் ஃபைனல் இயர் முடித்து, மாஸ்டர் டிகிரிக்காக அமெரிக்கா போகத் தயாராகிக் கொண்டிருந்தபோது, 'நாம ரெண்டு பேரும் சந்திச்சு, பேசி, அன்பு பரிமாறின இந்த கேம்பஸ்ல இனி நீ மட்டும் படிச்சா, என்னை ரொம்ப மிஸ் பண்ணுவே. அதனால, அடுத்த வருஷம் வேற காலேஜ்ல சேர்ந்து படி’ என்றார். அது உண்மை யும் கூட. அதை எனக்காக இவர் யோசித்த அன்பு, அவர் மீதான என் காதலைக் கூட்டியது. எத்திராஜில் ஆங்கில இலக்கியமும், அதைத் தொடர்ந்து எம்.ஏ, கம்யூனிகேஷன் கோர்ஸும் முடித்தேன். அப்போது அவர் அமெரிக்காவில் எம்.பி.ஏ படிக்க, இரண்டு வருடங்கள் ஒருவரை ஒருவர் ரொம்பவே மிஸ் செய்தோம்.

என்னவரே....என்னவரே...

இரு வீட்டுப் பெரியவர்களின் சம்மதம், ஆசீர்வாதத்துடன் கணவன் - மனைவியாக வாழ்வில் இணைந்தபோது, வரம் பெற்றதைப் போல் உணர்ந்தோம். எங்கள் இருவருக்குமான உறவை பரஸ்பரப் புரிதலால் அர்த்தப்படுத்தி னோம். எந்தச் செயலாக இருந்தாலும், அவர் என்னிடம் கலந்தாலோசிக்காமல் இறுதி முடிவு எடுக்க மாட்டார். ஒரு தயாரிப்பாளராக கதை கேட்கும்போதுகூட என்னையும் உடன் இருக்கச் சொல்வார். என் சம்மதத்தைப் பொறுத்தே எந்தக் கதையையும் தேர்ந்தெடுப்பார். அதேபோல, 'உங்களுக்கு அரசியல் வேண்டாம்...’ என்று நான் ஆரம்பத்தில் கேட்டுக் கொண்டதை இதுவரை அவர் மீறவில்லை. 'நல்லவேளை சினிமாவுக்கும் நீ தடா போடல’ என்று சிரிப்பார். அந்தளவுக்கு வாக்குறுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். ஆனால், இப்போது அவர் எடுத்திருக்கும் வேகத்தைப் பார்த்தால், எல்லாவற்றிலுமே ஜொலிப்பார். எனவே, என்னு டைய பழைய முடிவை நான் மாற்றிக்கொள்ளத் தான் வேண்டியிருக்கும் என்றே தோன்றுகிறது.

இன்னொரு பக்கம்... எங்களுக்கு இடையில் அதிக சுதந்திரமும், சுய மரியாதையும் உண்டு. விஸ்காம், கம்யூனிகேஷன் படித்தது கல்யாண பத்திரிகையில் டிகிரியாக போட மட்டும் கிடையாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். ஆனால், பெரிய குடும்பத்தில் மருமகளானபின் கணவர், குழந்தைகள் என்று மட்டுமே சுற்றிச் சுருங்க வேண்டிய ஒரு சூழல் வந்துவிடுமோ என்று பயந்து, விளம்பர நிறுவனத் துக்கு வேலைக்குப் போகிறேன் என்று அவரிடம் சொன்னபோது, முழுமனதோடு என் முடிவை ஏற்றுக் கொண்டார். காப்பிரைட்டராக, ஐயாயிரம் ரூபாய் மாதச் சம்பளத்துக்கு சில மாதங்கள் வேலைக்கும் சென்றேன்.

அனுபவங்கள் பல கற்றபின், கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு 'இன்பாக்ஸ்’ பத்திரிகையை ஆரம்பித்தேன். அப்போது பத்திரிகை துறைக்கான அத்தனை வழிகாட்டல்களையும், 'முரசொலி’ நாளிதழின் எம்.டி. பொறுப்பில் இருக்கும் அவரே எனக்கு உடன் இருந்து வழங்கினார். எய்ட்ஸ் விழிப்பு உணர்வுக்காக நான் எடுத்த குறும்படத் துக்கும் ஊக்கம் தந்தார். என் சிறுகதைகளை ஃப்யூச்சர் ஃபிலிமாக எடுக்கலாம் என்று கருவை கதையாக்கி அவரிடம் காட்டியபோது, ஒரு நண்பனாக உடன் இருந்து அதன் சாதக, பாதகங் களைப் பகிர்ந்தார். இதோ... இன்னும் இரண்டு மாதங்களில் திரைப்படம் இயக்கும் வேலைகளை நான் தொடங்கப் போகிறேன்... உதய் உடன் இருக்கிறார் என்ற தைரியத்துடன்.

'மனைவி, குழந்தைங்கள வீட்ல விட்டுட்டு வேலை, வெளியூர், வெளிநாடுனு எப்பவும் பிஸியாவே இருக்காரே...’ என்ற சலிப்பு எனக்கோ, எங்கள் குட்டீஸ் இன்பன், தன்மையாவுக்கோ இதுவரை வந்ததில்லை. எங்களைப் பிரிந்து அதிக பட்சம் இரண்டு நாட்களுக்கு மேல் அவரால் எங்கேயும் இருக்க முடியாது. அதேபோல்  எத்தனை மணி ஆனாலும் வீட்டுக்குள் நுழைந்ததும், 'குடுகுடு’ என்று குழந்தைகளைத் தேடி ஓடுவார். ஒரு சராசரிப் பெண்ணுக்கு உரிய இந்த எதிர் பார்ப்பை புரிந்துகொண்ட சமர்த்துக் கணவர் என்னவர்.

மனைவிக்கு என்று சில எல்லைகள் உண்டு, மனைவி என்பவள் எந்த விஷயத்திலும் தன் சம்மதத்தின் பெயரிலேயே இயங்க வேண்டும் - இப்படியாக நீளும் பழமை மடமைகள் எதுவும் மனதில் படியாத, அன்பையும் புரிதலையுமே இல்லறத்தின் அடிப்படையாக நினைப்பவர் இவர் என்பதால்தான், இந்த வாழ்க்கையை முழுமையாக வாழ முடியும் என்று நொடிக்கு நொடி நம்புகிறேன் நான்.

இவ்வளவு நேரமாக 'அவர்... அவர்...’ என்று அவர் குறித்துச் சொன்னாலும், மூச்சுக்கு மூச்சு 'உதய்... உதய்!’ என்றுதான் அழைப்பேன். ஒவ்வொரு முறை அழைக்கும்போதும் அவர் மீதான என் உரிமையும் அன்பும் ஆத்மார்த்தமாக இழை யோடும். ஐ லவ் மை உதய்!''

- இமைகள் மூடி காதல் உணர்ந்து சொல்கிறார் கிருத்திகா !