Published:Updated:

ரொமான்ஸ் ரகசியங்கள் !

டாக்டர் ஷாலினி

 ##~##

'எனக்கே எனக்குனு அன்பு காட்ட யாராவது இருக்க மாட்டாங்களா? ஜாலியா பேசி சிரிக்க; நாம பார்த்து/கேட்டு/உண்டு/படித்து மகிழ்ந்ததை சொல்லிப் பகிர்ந்துக்க; வெளிய போய் ஹாயா சுத்த; ஒரு பிறந்த நாள், விசேஷ நாள்னா மனமார வாழ்த்த; சும்மா ஒரு ஆசையில டைட்டா கட்டிப் பிடிச்சு, நம்ம அம்மா நமக்கு கொடுத்த முத்தங்களைவிட இன்னும் அதிக தித்திப்பா முத்தமழை பொழிய; அட, எதுவுமே இல்லனா... சும்மா இதமா கட்டிப் பிடிச்சுக்கிட்டு கிடக்க... எனக்குனு ஒரு துணை இருந்தா நல்லாயிருக்குமே!'

 - இது ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் ஆழ் மன ஆசை.

'இந்த ஆசை எல்லாம் எனக்கு இல்ல’ என்று யாராவது சொன்னால், ஒன்று அவருக்கு மூளையில் ஏதோ கோளாறாக இருக்கும். இல்லை... மனதில் ஏதாவது பாதிப்பு இருக்கும். பொதுவாக, நம் அனைவருக்குமே 'தேவை கொஞ்சம் பிரத்யேக அன்பு’ என்கிற ரொமான்டிக் ஆசை இருக்கிறது. இதுதான் நாம் நார்மலானவர்களா இல்லையா என்று கண்டுபிடிக்க உதவும் ஒரு அக அறிகுறி. சிரிப்பு, பேச்சு, ஆக்கப்பூர்வ சிந்தனை மாதிரி இந்த ரொமான்ஸும் நம் மனித வர்க்கத்துக்கு என்று மிக பிரத்தியேகமாக இருக்கும் சிறப்பு!

'அதெல்லாம் டூப்பு. மிருகங்களும்தான் ரொமான்ஸ் பண்ணும்... அதெப்படி மனிதர்களுக்கு மட்டும் தனி சிறப்பு ஆகும்..?’ என்று உங்களுக்கு கேட்கத் தோன்றினால், ஓ.கே... மிருகங்களின் ரொமான்ஸ் வாழ்கையை ஒரு ரவுண்ட்-அப் அடித்துதான் பார்ப்போமே!

ரொமான்ஸ் ரகசியங்கள் !

முதலில் நமக்கு நெருக்கமான குரங்கு இனத்தை எடுத்துக் கொள்வோம். ஆப்பிரிக்காவின் காங்கோ நதிக்கரைகளில் வாழும் அச்சு அசல் நம்மைப் போலவே இருக்கும் 'பொனொபோ' எனும் குரங்கு, அப்படியே நம்மை மாதிரியே ரொமான்ஸும் செய்து குஷியாக வாழ்கிறது. ஆனால், அதைத் தவிர நம் வகையறாவைச் சேர்ந்த சிம்பன்ஸி, கொரில்லா, ஒராங்குட்டன் மாதிரியான பிற வானரங்கள் ஏதும் அவ்வளவாக ரொமான்ஸ் உணர்வே காட்டுவதில்லை.

இன்னும் ஒரு படி இறங்கினால்... நம் பாலூட்டி வர்க்கத்தைச் சேர்ந்த ஆடு, மாடு, நாய், பூனை, சிங்கம், புலி எல்லாம் உறவின் ஆரம்பத்தில் கொஞ்சமே கொஞ்சம் ரொமான்ஸ் செய்கின்றன. மோப்பம் பார்ப்பது, துரத்திக் கொண்டு ஓடுவது, ஒன்றை மற்றொன்று கண்டுகொண்டு சைட் அடிப்பது, முகத்தோடு முகம் மோதி விளையாடுவது, கழுத்தை, வாலை, முகத்தை வருடி கொஞ்சி விரகதாப ஒலிகள் எழுப்புவது என்று ஒவ்வொரு பாலூட்டி ஜீவனும் தனக்கென்று சில 'கோர்ட்ஷிப் ரிச்சுவல்ஸ்' (Courtship rituals) எனும் கவர்ச்சி சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கின்றன. ஆனால், இதெல்லாம் உடலுறவுக்கு முன்பு மட்டும்தான். உடலுறவு முடிந்துவிட்டால், ஒன்றை மற்றொன்று அதற்கு மேல் சட்டை செய்யாமல் அப்படியே பிரிந்து போய்விடும்.

ரொமான்ஸ் ரகசியங்கள் !

காரணம், இந்தப் பாலூட்டிகள் எதற்கும் காதல் என்கிற உணர்வே கிடையாது. சீஸனுக்கு இனம் சேருவது அவற்றுக்கு ஒரு உந்துதல் மட்டுமே. ஆனால், பாலூட்டிகள் அல்லாது வேறொரு உயிரினத்துக்கு காதல் உணர்வு மிக அதிகம். அது எந்த உயிரினம் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா?

ரொமான்ஸ் ரகசியங்கள் !

அதுதாங்க காதலுக்கு உதாரணமா, காலகாலமா நம் கவிஞர்கள் பாடுற - பறவைகள்! லவ் பேர்ட்ஸ், அன்றில், அன்னம், பென்குவின், கழுகு போன்ற பெரும்பாலான பறவைகள் காதல் செய்கின்றன. சீஸனுக்கு சீஸன் ஜோடி மாற்றாமல், ஒரே இணையுடன் வாழ்நாள் முழுக்க இனம் சேர்ந்தே இருக்கின்றன... சாட்சாத் மனிதர்களைப் போல!

மனிதர்கள் குரங்கு இனத்தைச் சேர்ந்தவர்கள், குரங்குகள் பாலூட்டி வர்க்கத்தைச் சேர்ந்தவை. ஆனால், பாலூட்டிகள் எதுவுமே காதலிப்பதில்லை. கொஞ்சமும் சம்பந்தமே இல்லாமல் வேற்று இனமான பறவைகள் காதல் செய்கின்றன. எந்த அளவுக்கு என்றால், ஒரு ஜோடி அன்றில் பறவைகள் நீந்திக் கொண்டு

இருந்தனவாம். நடுவில் ஒரு பெரிய பூ. அதன் மீது மோதிக்கொள்ளக் கூடாது என்று இரண்டும் ஆளுக்கொரு பக்கமாக பூவின் பக்கவாட்டில் வளைந்து மீண்டும் சந்தித்துக் கொள்ளலாம். ஆனால், இந்தப் பூவின் காரணமாக ஏற்படும் அந்தச் சின்ன பிரிவைக் கூட சகித்துக்கொள்ள முடியாமல், 'ஐயோ, இவ்வளவு நேரம் பிரிஞ்சுட்டோமே!’ என்று வருந்திவிடுமாம் அன்றில்.

இப்படிப் பிரிவைத் தாங்க முடியாமல் வருந்தும், காமமும் கலந்தே இருக்கும் ஆசை மனிதர்களுக்கும் இருப்பதினால்தான்... காதலைப் பற்றி இத்தனை கவிதைகள், கதைகள், சினிமாக்கள், பொது இடக் கிறுக்கல்கள் முதல் தாஜ்மஹால் வரை அத்தனை நினைவுச் சின்னங்கள். மனிதர்களின் மிக இனிமையான நினைவுகள் ஆகட்டும், மிகக் கொடுமையான நினைவுகள் ஆகட்டும்... எல்லாமே இந்த காதல், அன்பு, நம்பிக்கை ஆகிய சமாசாரங்களை சார்ந்தே இருக்கின்றன.

ரொமான்ஸ் ரகசியங்கள் !

எல்லாம் சரி, அது ஏன் இயற்கை இப்படி ஒரு திருவிளையாடலைச் செய்ததாம்? அதென்ன அது, பறவைக்கும் மனிதனுக்கும் காதல் கொள்வதில் இவ்வளவு ஒற்றுமை? வியப்பாக இருக்கிறதா? அதற்கு ஒரு சுவாரஸ்யமான காரணம் இருக்கிறது.

- நெருக்கம் வளரும்...