Published:Updated:

கீச் கீச் கீதங்கள் !

ராமலஷ்மி படங்கள்: ஏ.சிதம்பரம்

##~##

அழிக்கப்படும் காடுகள், மாறிவரும் விவசாய முறைகள், நகரங்கள், கிராமங்கள் என நாடெங்கும் முளைத்துக் கிடக்கும் செல்போன் டவர் இரும்பு மரங்கள்... இவையெல்லாம் சிட்டுக்குருவிகளின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கின்றன. விளைவு, சிட்டுக்குருவிகள் இனம் அருகிக்கொண்டே வருகிறது. 'இந்நிலை தொடர்ந்தால், இன்னும் சில வருடங்களில் அந்த இனமே முற்றிலும் அழிந்துவிடும் அபாயம் இருக்கிறது!’ என்று சூழலியலாளர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில், ஆறுதல் தருகிறது... ராமலஷ்மியின் கட்டுரை!

''குருவிகளின் கூடாகியிருக்கிறது, என் வீடு. என் வீட்டின் அனைத்து அறைகளிலும் குருவிகள் கூடுகட்டி, குஞ்சு பொரித்து இருக்கின்றன. அந்தக் கூடுகள் எங்கள் வீட்டில் எழும்பிய விதம், இதம்!

நாங்கள் புது வீடு கட்டிப் பால் காய்ச்சிப் போன ஒரு மாதத்திலேயே... வீட்டுக்குள் குறுக்கும் நெடுக்குமாக குருவிகள் பறந்தபோது, எனக்குப் பரவசமாக இருந்தது. 'எதேச்சையாக வந்து போகின்றன' என்று நினைத்தேன். ஆனால், ஹாலில் விழுந்து கிடைந்த தூசு, தும்புகளைப் பார்த்து, 'அதுங்க, நம்ம வீட்டுல எங்கயோ கூடு கட்டுதுங்க’ என்றார் என் கணவர்.

எங்கள் வீட்டுக்குள், குருவியின் வீட்டைத் தேடினேன். ஹாலின் நடுவில் உள்ள அலங்கார விளக்கின் மேல் அதைக் கண்டேன். அப்போது ஒரு குருவி, வாயில் நீள மான காய்ந்த குச்சிகளை கொண்டுவந்து தன் கூட்டில் சேர்த்துக் கொண்டிருந்தது. பின், வெளியே பறந்து திரும்பி வந்தபோது, அதன் வாயில் ஒரு பச்சைப் புல்.

கீச் கீச் கீதங்கள் !

இப்படியாக அந்தக் குருவிகள் வீடு கட்டும்போது, கட்டுமானப் பொருட்கள் (!) சில அவ்வப்போது கீழே விழக்கூடும். அதை எடுப்பதற்காக அவை கீழே வரும்போது என்னைப் பார்த்துப் பயப்படாமல் இருக்க வேண்டுமே என்று, அசையா மல் சிலைபோல் அமர்ந்திருப் பேன். டி.வி, ரேடியோவைக் கூட ஆன் செய்யாமல் இருப்பேன். ஒரு கட்டத்தில், 'இவள் நம்மவள்’ என்று அதற்கு நம்பிக்கை ஏற்பட்டுவிட்டதுபோல... பயம் இல்லாமல் என் அருகில் வந்து அமர்வது, நான் வைக்கும் தானியங்களைச் சாப்பிடுவது, குழந்தைகளின் அறைகளில் அவர்களின் ஸ்டடி டேபிள், கட்டில்களில் கேஷ§வலாக வாக் செய்வது என... எங்களை ஃப்ரெண்ட்ஸாக ஏற்றுக்கொண்டன!

ஒரு விசேஷத்துக்காக வெளியூர் சென்றபோது, ஹாலில் ஒரு ஜன்னலை மட்டும் திறந்து வைத்துச் சென்றோம். வந்து பார்த்தால், எங்கள் பெட்ரூம், குழந்தைகளின் பெட்ரூம், சமையலறை என்று எங்கெங்கும் கூடுகள், 'கீச் கீச்’ சத்தங்கள். லேசான சாம்பல் நிறத்தில், பச்சைக் கலர் டிசைன் போட்டது போன்ற அதன் முட்டைகள், குஞ்சுகள் பொரித்த பின் கூடாக காணக் கிடைக்கும். அடுத்தடுத்த நாட்களில் தெர்மகோல், பஞ்சு என

தாய்க்குருவிகள் கொத்திச் சென்றபோது, தன் குஞ்சுகளுக்கு மெத்தை அமைக்கவென  நினைத்துக் கொண்டேன்.

கீச் கீச் கீதங்கள் !

குஞ்சுகள் எல்லாம் வளர்ந்ததும் அவற்றுக்கு தாய்க்குருவி பறக்கக் கற்றுக் கொடுப்பதைப் பார்க்கும்போது, என் அப்பா எனக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்தது ஞாபகம் வரும். ஒரு கூட்டுக்கு இரு ஜோடிக் குருவிகள் சண்டைபோட்டதை முதல் நாள் பார்த்த நான், அதே கூட்டுக்கு இன்னொரு வாசல் போட்டு இரண்டு ஜோடிகளும் குடி புகுந்ததை மறுநாள் பார்த்தபோது, ஆச்சர்யத்தின் உச்சத்துக்கே சென்றேன்.

கீச் கீச் கீதங்கள் !

ஃபேனில் குருவிகள் அடிபட்டு விடக்கூடாதே என்று, எங்கள் வீட்டில் ஃபேன் போடும் பழக்கத்தையே குறைத்துக் கொண்டோம். வீட்டுக்கு வருபவர்கள் சிலர், 'அய்யய்ய... என்ன இது இத்தனை குருவிக் கூடுங்க..? வீட்டையே அசுத்தமாக்கிடுமே...’ என்றார்கள். ஆனால், அந்தச் சிட்டுக் குருவிகள் எங்களுக்குக் கொடுக்கும் சந்தோஷத்துக்காக, அவற்றின் கழிவுகளைச் சுத்தம் செய்வது பெரிய விஷயமாக இல்லை. ஒவ்வொரு கூட்டுக்கும் கீழே ஒரு பேப்பர் விரித்தால், குருவிகள் தன் குஞ்சுகளின் கழிவை தன் அலகால் எடுத்து சரியாக அந்தப் பேப்பரில் போடப் பழகின. அவற்றை நான் அவ்வப்போது அப்புறப்படுத்தினேன்.

புழுக்கள் என்றால் அலர்ஜி எனக்கு. குஞ்சுகளுக்காக தாய்க் குருவியும், தந்தைக் குருவியும் என் தோட்டத்தில் பாகல், அவரை, பீர்க்கன், பட்டர் பீன்ஸ், புடலை செடிகளில் இருந்து புழுக்களை கொத்தி வரும். அவ்வப்போது அதன் வாயில் இருந்து சிலசமயங்களில் வீட்டில் விழுந்து நெளியும் புழுக்களைப் பார்க்கும்போது, அருவருப்பாக இருக்காது. மாறாக, 'ஐயோ, குருவியோட இரை போச்சே...’ என்றுதான் பதறுகிறது மனசு இப்போது. தினமும் இரவு 11 மணிக்கு நாங்கள் சாப்பிடும்போது, தாய்க்குருவி மட்டும் எங்கள் அருகில் தத்தித் தத்தி வந்து இரை எடுத்துச் செல்லும் அழகை நான் ரசிப்பதை, என்னவர் ரசிப்பார்.

காலையில் ஆறு மணிக்கெல்லாம் அவர்களுக்கு ஜன்னலைத் திறந்துவிட வேண்டும். இல்லையென்றால், 'கீச் கீச்’ என்று ரகளை செய்துவிடுவார்கள். வெளியூர் சென்றாலும், அனைத்து ரூம்களிலும் ஒவ்வொரு ஜன்னல் திறந்தே இருக்கும். எவ்வளவு டென்ஷன் இருந்தாலும், வீட்டுக்குள் விருட் விருட்டெனப் பறக்கும் அந்தச் சிட்டுகளின் தரிசனமும், அதன் 'கீச் கீச்’ கீதமும் எங்களை ரிலாக்ஸாக்கிவிடும். இப்போது எங்கள் வீட்டில் குருவிக் குடும்பங்களுடன் எங்கள் குடும்பத்தையும் சேர்த்து எட்டுக் குடும்பங்கள் வசிக்கிறோம். புது விருந்தாளியாக, இப்போது ஒரு மைனா குஞ்சும் வந்து சேர்ந்துள்ளது.

கூடவே... சந்தோஷமும், பரவசமும் நிரந்தர விருந்தாளியாக!

நீங்களும் நிருபர்தான்!

வாசகிகளே... இது உங்களுக்கான பக்கம்! 'செய்திகளை சேகரிப்பதில், பெண்களுக்கு நிகர் வேறு யாரும் இருக்க முடியுமா என்ன?' என கேள்வி எழுப்புவது போல... இதோ, தூத்துக்குடி வாசகி ராமலஷ்மி எழுதி அனுப்பியிருக்கும் இந்தக்  கட்டுரையை படியுங்களேன். தன் வீட்டுக்குள்ளேயே, அவர் இந்தச் செய்தியை சேகரித்திருக்கும் அழகு... உண்மையிலேயே அசத்தல்!

இதுபோன்ற அசத்தலான, அற்புதமான, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கின்ற விஷயங்கள்; 'அட, நாமும் இதேபோல முன்னேறலாமே' என்று நம்மை சொல்ல வைக்கின்ற சாதனைப் பெண்கள்; இன்னும், இன்னும் பலதரப்பட்ட செய்திகளும் உங்களிட மும்... உங்கள் அக்கம் பக்கத்திலும் கொட்டித் தானே கிடக்கின்றன! அத்தகைய செய்திகளில், பிரசுரத்துக்குத் தகுதியான செய்திகளைத் தேர்ந்தெடுத்து, நேர்த்தியான புகைப்படங் களுடன், அசத்தலான செய்திக் கட்டுரையாக எழுதி அனுப்புங்களேன் தோழிகளே! பிரசுர மாகும் கட்டுரைகளுக்கு தகுந்த பணப்பரிசு உண்டு!

பின்குறிப்பு: உங்களின் கட்டுரைகள் நூறு சதவிகிதம் உண்மையானவையாக இருப்பது முக்கியம். கட்டுரைகளை தபால், இ-மெயில் மூலமாக அனுப்பலாம். தபாலில் அனுப்புபவர்கள்... 'நீங்களும் நிருபர்தான்’, அவள் விகடன், 757 அண்ணா சாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கு அனுப்பவும். இ-மெயில்:aval@vikatan.com