Published:Updated:

விதியை மாற்றுமா மொழிக்கல்வி?

நாச்சியாள்

##~##

''இன்று, தமிழ் மீடியத்தில் படிக்கும் மாணவனுக்கு, ஆங்கிலம் கடினமான மொழியாக இருக்கிறது. ஆங்கில வழியில் படிப்பவர்களுக்கு, தமிழ் கடினமான மொழியாக இருக்கிறது. இதற்குக் காரணம்... தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிப் பாடங்கள் மாணவனின் திறமையை (ஸ்கில்) வளர்க்கும் கருவியாக இருக்க வேண்டும் என்கிற அடிப்படை புரிதல், பெரும்பான்மையான ஆசிரியர்களுக்கு இல்லை என்பதுதான்!'' - மிகவும் கடுமையாக சாடுகிறார் ஆசிரியையும் சமூக ஆர்வலருமான சுடர்ஒளி.

'பாடங்கள் கடினமாக இருக்கின்றன, படிக்க முடியவில்லை என்கிற காரணத்தினால் தற்கொலை' என்று தொடர்ந்து அதிர்ச்சி செய்திகள் வந்து கொண்டிருக்கும் சூழலில், ஆசிரியையும் சமூக ஆர்வலருமான சுடர்ஒளியின் இந்த சாடல்... முக்கியத்துவம் பெறுகிறது!

''பெரும்பாலான பள்ளிகளில் மொழிப்பாட பயிற்சிகளை செய்ய வைப்பதைவிட, பாடத்தை மனப்பாடம் செய்ய வைத்து மார்க் வாங்க வைத்தால் போதுமானது என்று எண்ணி, மார்க்கை நோக்கி ஓடும் குதிரையாக மட்டுமே விரட்டுகிறார்கள். இதனால் பள்ளியில் படித்து நிறைய மார்க் வாங்கும் மாணவன், கல்லூரிக்கு வந்தவுடன் தன் திறமையையும் அறிவையும் வளர்க்க முடியாமல் தடுமாறுகிறான்.

விதியை மாற்றுமா மொழிக்கல்வி?

ஒரு மொழியைக் கற்றுக் கொள்வதற்கும், அந்த மொழியில் தொடர்ந்து படிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. தொடர்புக்காக (கம்யூனிகேஷன்) கற்றுக் கொள்ளும் ஒரு புதிய மொழி, அவனுடைய சுய சிந்தனையை வளர்ப்பதற்கும், அவனை அறிவாளி யாக மாற்றுவதற்கும் உதவாது என்பதை பல ஆய்வுகள் உண்மை என்று நிரூபித்து உள்ளன. ஒன்றாம் வகுப்பில் இருந்து தாய்மொழியில் படிக்கும் ஒருவனுக்கு, எட்டாம் வகுப்பின்போது ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளில் பாடங்களை சொல்லித் தந்தால்... அந்த மாணவன் சிறப்பாகச் செயல்படுவான் என ஆய்வுகள் சொல்கின்றன. அதாவது, பேசுவது வேறு... மொழியைப் புரிந்து படிப்பது வேறு. இப்படி புரிந்து படிப்பது என்பது, எட்டாம் வகுப்பு படிக்கும் வயதில் இருப்பவர்களுக்கு எளிதாக இருக்கும் என்பதுதான் விஷயமே!'' என்று புதுத்தகவலோடு புரிய வைத்தார்.

''தமிழ்வழியில் படித்து வந்தவர்கள், உயர்கல்வியில் சரியாகப் படிக்க இயலவில்லை என்றால்... தவறு மாணவன்/மாணவியின் மேல் இல்லை. மொழிமாற்றத்தின் மேல்தான். இத்தனை வருடங்கள் ஆகியும் பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்பாடங்களை முழுமையாகவும் சரியான தொழிநுட்ப வார்த்தைகளுடனும் மொழிபெயர்க்காத அரசாங்கத்தின் மீதும் தவறு இருக்கிறது'' என்று குற்றம் சாட்டுகிறார் பேராசிரியை சரஸ்வதி.

விதியை மாற்றுமா மொழிக்கல்வி?

''இன்றைய ஆசிரியர்கள் - மாணவர்கள் உறவு இணக்கமானதாக இருக்கவில்லை.  மாணவர்களிடம் இறங்கி வந்து நட்புடன் வழிகாட்ட, அவர்களை நெறிப்படுத்த எத்தனை ஆசிரியர்கள் முன் வருகிறார்கள்? மாணவர்கள், தங்கள் பிரச்னையை கொட்டி தீர்வு காணும் கவுன்சலிங் மையங்கள் எத்தனை கல்லூரிகளில் இருக்கின்றன? நான் பேராசிரியராக இருந்த காலகட்டத்தில், தமிழ் வழியில் படித்து, கல்லூரியில் ஆங்கில வழிக் கல்வியால் திணறும் மாணவர்களுக்கு சீனியர் மாணவர்கள் வார விடுமுறையில் தனி வகுப்பு எடுத்து அவர்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மையை நீக்கி, பாடங்களை எளிதாக கற்றுக்கொள்ள வழிகாட்டுவார்கள். இன்று அப்படியான மாணவர்கள் இல்லையே என்பதைவிட, அப்படியான மாணவர்களை உருவாக்காத கல்விமுறைதானே உயர்ந்த கல்வி என்று பேசப்படுகிறது?'' என்று சீறிய சரஸ்வதி,

''சமூகத்தின் அடித்தட்டில் இருந்து தமிழ் வழியில் படித்து, உயர்கல்வி கற்க வரும் மாணவர்களுக்கு, அந்தக் கல்லூரியின் சூழல், படிப்பு, எதிர்நோக்கி இருக்கும் சங்கடங்கள், அதை சமாளிக்க வழிகள் என்று ஒரு நாளாவது ஒரு அறிமுக வகுப்பு எடுப்பது அவசியம் என்பதை ஆசிரியர்கள் உணரவேண்டும்'' என்றும் வழிகாட்டினார்.

பேராசிரியையும் பேச்சாளருமான பர்வீன் சுல்தானா இந்த விஷயத்தைப் பற்றி பேசும்போது, ''மொழி ஒருவரை ஒருவர் தொடர்புகொள்ள உதவுகிற சாதனம்தானே ஒழிய, ஒருவன் புத்திசாலியா, முட்டாளா என்று சோதிக்கப் பயன்படும் மானிட்டர் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளாதவரை, மொழியால் குழந்தைகளை நாம் சித்ரவதை செய்துகொண்டிருக்கத்தான் போகிறோம். மொழி... ஆக்கும் கருவியாக இருக்கட்டும்... அழிக்கும் கருவியாக வேண்டவே வேண்டாம்'' என்று சொன்னார் அக்கறை பொங்க!