Published:Updated:

வேலு பேசறேன் தாயி!

மதுர மாறிப் போச்சுல்ல !நகைச்சுவை புயலின் நவரச தொடர் வடிவேலு, ஓவியம்: கண்ணா

##~##

மதுர மண்ணுல உருண்டு பொரண்டவன்கிறதால எனக்கு எப்பவுமே சுதாரிப்பு கொஞ்சம் ஜாஸ்தி. செத்த நேரங் கண்ணசந்தா... சொத்தப் பூரா எழுதி வாங்கிட்டு அனுப்பிடுற இந்தக் காலத்துல, நான் ரொம்ப சூதானமா இருப்பேன். அதுக்குக் காரணமே நான் பாத்து வளந்த மதுர வாழ்க்கைதேன்.

அங்க நடக்குற குசும்பும் கூத்தும் கொஞ்சநஞ்சமில்ல. காலையில எந்திரிக்கிறப்பவே, 'இன்னிக்கு எவன்டா சிக்குவான்’னுதேன் எந்திரிப்பானுக. ஏதோ கலெக்டர் ஆபீஸுக்கு கௌம்புற மாதிரி பட்டையும் சந்தனமுமா நெத்தியில பூசிக்கிட்டு பஸ் ஸ்டாண்டு பக்கத்தில கடையப் போடுவானுக. ஆட்டையப் போட ஆள் தேடிக்கிட்டு நிக்கிற அவிய்ங்ககிட்டயே போயி, ''அண்ணே, மணி என்னாகுது?''னு அப்பாவியா எவனாவது கேப்பானுக. அவ்வளவுதேன்...

''என்னது மணியா..? யார்கிட்ட வந்து என்னா கேள்வி கேட்குற?''னு அந்தப் பார்ட்டி மீசைய இழுத்து வுட்டுக்கிட்டு கேட்க, ''மணிதானே கேட்டேன்... இதுக்கு ஏம்ப்பா இம்பூட்டு கோபப்படுற?''னு குழம்பு வான் அந்த அப்பாவி. இதுக்கு மத்தியில சுத்தி நிக்கிற கூட்டத்துல இருந்து நாலஞ்சு பேரு கௌம்பி வருவானுக. ''அண்ணே, என்னண்ணே ஆச்சு?''னு ஒண்ணுமே தெரியாதவனுக மாதிரி அந்த மீசை பார்ட்டிகிட்ட கேப்பானுக. ''அண்ணங்கிட்டேயே வந்து மணி கேட்குறான்டா...''னு அவரு எங் கேயோ ஒரு பக்கம் திரும்பிக்கிட்டு சொல்ல... ''என்னாது.. மணி கேட் டியா? நாப்பது வருஷமா பழகுற நாங்களே அவருகிட்ட மணி கேட்டது இல்லேயடா... ஒனக்கு எங்கேர்ந்துடா இம்பூட்டு தெகிரி யம் வந்துச்சு?''னு சீறுவானுக.

வேலு பேசறேன் தாயி!

அப்பாவி பார்ட்டி, புள்ளப்பூச்சி மாதிரி நடுங்கிக் கெடக்க, ஒருத்தன் மெள்ள அவன்கிட்ட வருவான். ''சரி, தெரிஞ்சோ தெரி யாமலோ கேட்டுப்புட்ட... சட்டுப் புட்டுனு சமாதானத்துக்கு வழியப் பாரு. பரமக்குடியில இருந்து மாடு வாங்க வந்த நீ, மாட்ட மட்டுந்தான வாங்கணும்... ஏண்டா, அண்ணன்கிட்ட வம்பை       யும் சேர்த்து வாங்குற?''னு இழுவையப் போடுவான்.

''இப்ப நான் என்னண்ணே பண்ணணும்?''னு புள்ள பூச்சி மெள்ள நெருங்கி வரும். ''கையில எவ்வளவு வெச்சிருக்க?''னு மிரட்டல் பார்ட்டிங்க கேட்க, ''அஞ்சாயிரம்ணே...''னு வயித்துல புளியக் கரைச்சுக்கிட்டே சொல்லும் புள்ளப்பூச்சி.

''அஞ்சாயிரமா, அது பத்தாதேடா...''னு மிரட்டல் பார்ட்டி சொல்ல, ''ஏங்க, அது மாடு வாங்க கொண்டுவந்த காசுங்க... அதத் தர்றதா நா எப்பங்க சொன்னேன்?''னு புள்ளப்பூச்சி பதறும். ஒருவழியா அந்தப் பூச்சியை நசுக்கிப் பிதுக்கி கெடச்சது லாபம்னு சுருட்டிக்கிட்டு கௌம்பிடுவானுக.

இது மாதிரி ஒண்ணு ரெண்டு சம்பவம் இல்ல... நாளுக்கு நாளு புதுசு புதுசா யோசிச்சு பொறி கௌப்புவானுக. அறியாத ஆளுக வந் துட்டா அம்புட்டுத்தேன். ஒரு தடவை டீக்கடைக் காரனுக்கும் பெட்டிக்கடைக்காரனுக்கும் சண்டை. எதுத்தாப்புல இருந்த கமிஷன் கடைக்கு வந்த வெளியூரு ஆளு, வெவரம் தெரி யாம ரெண்டு பேரையும் சமாதானப்படுத்தப் போனாரு. டீக்கடைக்காரன் தூக்கி வீசுன கிளாஸ் குத்தி தலையில ஏழு தையல் வாங்கிட்டு வந்தாரு.

''ஏம்ப்பூ.. நாங்கள்லாம் பஞ்சாயத்துப் பேசத் தெரியாமலா பகுமானமா ஒக்காந்திருக்கோம்? அவிய்ங்க இப்ப அடிச்சுக்குவாய்ங்க... சாயங் காலமே சாராயத்த ஒண்ணா ஊத்தி சமாதான மாயிடுவானுங்க. ஆனா, ஒனக்கு இந்த காயம் ஆற, ரெண்டு மாசமாச்சும் ஆகும்!''னு காயப்பட்டவனை அலப்பறைக்கும் ஆளாக்கி ரசிப்பானுங்க.

இந்த மாதிரி கூத்துக்களை எல்லாம் மனசுக் குள்ள கொடோன் மாதிரி கொட்டி வெச்சிருக் கேன் தாயிகளா. அதத்தேன் அப்பப்ப தெரையில புதுசா எடுத்து விடுறேன். 'கருப்பசாமி குத்தகை தாரர்’ படத்துல ஒரு நகைக்கடைக்காரரை மெரட்டி, ''இவன் போற எடத்துக்கெல்லாம் ஆள் போடுங்கடா... மொத்தமா கடையவே எழுதி வாங்கிடலாம்''னு சொல்லுவேனில்ல... அதெல் லாம் மதுரையில பாத்து ரசிச்ச மகிமைதேன்.

'ஏ மதுர மல்லி... மதுர மல்லி’னு யாவாரம் பண்ற மாதிரி வழிப்பறி பண்ற கூத்துகளை நான் அள்ளிவிட்டப்ப, சினிமாவில செம க்ளாப்ஸு! அதெல்லாமே அப்படியே அனுபவக் காட்சிகதான் ஆயாக்களா!

இதெல்லாம் நான் சின்னஞ்சிறுசா மதுரையில நடமாடிட்டிருந்த காலத்துல மனசுக்குள்ள இடம் பிடிச்ச சங்கதிங்க. சென்னையிலேயே நெறய்ய காலத்தை பரபரப்பா ஓட்டிட்டு... இப்போ கொஞ்ச காலமாத்தேன் மறுபடியும் மதுரையப் பாக்குறேன். ஆனா, சல்லித்தனமும் சவடால் பேச்சுமா தெருவுக்கு ஒரு திருவிழா நடத்திக்கிட்டு இருந்த யாரையுமே இப்போ காணல. அவங்கவங்க வேலை சோலினு வேக வேகமா ஓடிக்கிட்டு இருக்காக. பேசிச் சிரிக்கவோ, பிரச்னை பண்ணவோ யாருக்கும் இப்போ நேரம் இல்ல... கால ஓட்டம் எல்லாரையும் எப்படியெல்லாம் மாத்திப்புடுது பாத்தீகளா?!

மண்ணுல நடமாடுன அத்தன பேருமே ஒவ்வொரு கேரக்டரா உலவின காலம் போயி, இப்போ எல்லாரும் அலுவலை நோக்கியே ஓடுற ஆட்களாகிட்டோம். என்னையவே எடுத்துக் கோங்க... இத்தன நாட்களா சூட்டிங், சுண்ணாம்புனு ஓடிக்கிட்டிருந்த நான்... இப்போதேன் அம்மா, அக்கா, தங்கச்சிகனு தாயி புள்ளைக பக்கம் திரும்பிப் பாக்குறேன்.

எந்தம்பி ஒருத்தன் சித்த பிரமை பிடிச்சுப் போய் இருக்கான். 'சம்பாரிச்சா போதும்... தம்பிய ஜாம்ஜாம்னு வாழ வெச்சுடலாம்’னு நெனச்சு... ஒக்கார நேரம் இல்லாம நடிச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா, அப்பெல்லாம் இந்த அண்ணனை நெனச்சுப் பெருமைப்படாத எந்தம்பி, இப்போ நான் வீட்டுல ஒக்காந்து ஆசாபாசமா பேசி சிரிக்கிறதப் பார்த்து பிரமை தெளிஞ்சு நிம்மதியா சிரிக்கிறான்.

என்னப் பெத்த ஆத்தா அம்மாக்களா... இப்போதேன் எனக்குப் புரியுது... சம்பாத்தியத்திலயோ சாதிப்புலயோ இல்லயாத்தா வாழ்க்கைங்கிறது. ரத்தப் பொறப்புகளா ஒண்ணுமண்ணா பொழங்கி, பாசம், பந்தம், நல்லது, கெட்டதுனு கூடிக்குலாவி நிக்குறோமே... அதுதேன் ஆத்தா வாழ்க்கை!

- நெறைய்ய பேசுவோம்...