ஆர்ச்சரியில் அசத்தும் அனுராதா !வே.கிருஷ்ணவேணி படம்: கே.கார்த்திகேயன்
##~## |
''அனுராதாவை வெளிய எங்கயும் அழைச்சுட்டுப் போக வேண்டாமே... ஏற, இறங்க, பாத்ரூம் போகனு அவளுக்கு உதவறது சிரமமான விஷயம்... அவ வீட்டுலயே இருக் கட்டும்கற மாதிரியான புறக்கணிப்புகள்தான், என்னோட குழந்தைப் பருவத்தை முழுசா நிறைச்சது. ஆனா, இப்போ நான் போட்டி களுக்காக ஃப்ளைட் ஏறி மலேசியா, லண்டன்னு போயிட்டு இருக்கறத நினைச்சா... எனக்கே பெருமையா இருக்கு. தன்னம்பிக்கைதான் என் கடவுள்!''
- வீல் சேரில் இருந்தபடியே, வெற்றிக் கதைகள் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த அனுராதா. இவர், உலக அளவிலான வில்வித்தை (ஆர்ச்சரி) விளையாட்டு வீராங்கனை!
''ரெண்டு வயசுல போலியோ அட்டாக். ஏழு வயசுல அப்பாவை இழந்தேன். இந்தத் துயரங் களோடதான் குடும்பத்தைக் கரையேத்தினாங்க அம்மா. கூலி வேலைக்குப் போய் பசியாத்தின அம்மாவோட கஷ்டம், அண்ணா ராஜாவும், தம்பி சதீஷ§ம் படிச்சு முடிச்சு சம்பாதிக்க ஆரம்பிச்ச பிறகுதான் ஓரளவுக்குத் தீர்ந்தது. அண்ணன் கிரிக்கெட் பிளேயர். தம்பி, ஃபுட்பால் பிளேயர். தினமும் அதிகாலையிலேயே பிராக்டீஸுக்காக ராயப்பேட்டை கிரவுண்டுக்குப் போகும்போது, என்னையும் கூட்டிட்டுப் போவாங்க. எல்லாரும் கை, கால் வீசி விளை யாடறதப் பார்க்கும்போது, ஏக்கமாகி கண்ணுல நீர் கோக்கும். ஒரு நாள் நான் அழுதிட்டிருந்ததை பார்த்துட்ட அண்ணனும், தம்பியும், 'உன்னால கண்டிப்பா சாதனைகள் பண்ண முடியும். அது எந்தக் களம்ங்கிறத பத்தின தெளிவும் தன்னம் பிக்கையும் உனக்கு வரணும்’னு சொல்லி சமாதானப்படுத்தினாங்க.

ஸ்போர்ட்ஸ் சேனல்ல பார்க்கறதுதான் பொழுதுபோக்கு. அப்படிப் பார்த்ததுல பிடிச்சு போனதுதான் வில்வித்தை. இதை அண்ணன் கிட்ட சொன்னதும்... மாற்றுத் திறனாளிகளுக்காக ஒவ்வொரு வருஷமும் இந்த விளையாட்டை நடத்துறதா சொன்னவர், நான் ப்ளஸ் டூ முடிச்சதும் அதுக்கான பயிற்சியில் சேர்த்து விட்டார். ரெண்டு வருஷம் கடுமையா பிராக்டீஸ் பண்ணேன். ஒரே இடத்தில் முடங்கிக் கிடந்த மாதிரி இருந்த என் மனநிலைக்கு, இது ஒரு நல்ல மாற்றமா இருந்ததால, ஆர்வத்தோட விளை யாடினேன்.
டிஸ்ட்ரிக்ட் லெவல் போட்டியில ரெண்டாவது இடத்தைப் பிடிச்சதுதான் என்னோட முதல் வெற்றி. அடுத்தடுத்து போட்டிகள்... வெற்றிகள்னு போய்க்கிட்டே இருக்கேன். 2007-ல் லண்டன்ல நடந்த 'ஏசியன் கேம்’, வில்வித்தை போட்டியில முதல் பரிசு; 2008-ல் மலேசியாவில் இன்டர் நேஷனல் போட்டியில டாப்பர்னு இதுவரைக்கும் 100 மெடல்களுக்கும் மேல வாங்கிட்டேன்'’ என்று பெருமையுடன் சொல்லும் அனுராதா, இன்னொரு பக்கம் அஞ்சல் வழியில் பி.காம் முடித்துள்ளார்.
''சென்னை, எம்.ஜி.ஆர். யுனிவர்சிட்டியில் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபீஸில் வேலை பார்த் தேன். அப்போ அந்தக் கல்லூரிக்கு வேலை விஷயமா அடிக்கடி வரும் ரவிராஜ், திடீர்னு ஒருநாள் போன் செய்து என்னைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுறதா சொன்னார். உட்கார்ந்த நிலையில இருந்தே வேலை செய்ற என்னைப் பார்க்குற யாருக்கும், என்னோட குறைபாடு தெரியாது. நிலைமையைச் விளக்கிச் சொல்லி, போனை வெச்சுட்டேன். வேலை ஓட்டத்துல அவரை மறந்தும் போயிட்டேன். ஒரு வாரம் கழிச்சு நேர்ல வந்த ரவிராஜ், தன் முடிவுல உறுதியா இருந்து என்னைக் கரம் பிடிச்சார். என் மகள் மீனாட்சி பிறந்ததுக்கு அப்புறம், 'பிரேக் போதும்... மறுபடியும் பிராக்டீஸ் ஆரம்பி’னு ஊக்கப்படுத்தினார் என் கணவர்.
2011-ல் மகாராஷ்டிராவில் நடைபெற்ற நேஷனல் லெவல் போட்டியில் தமிழ்நாட்டுல இருந்து கலந்துகிட்ட ஐந்து பேரில் நானும் ஒரு போட்டியாளர். அதில் 4 பேர் கோல்ட் மெடல் வாங்கினோம். இப்போ 10 மாற்றுத்திறனாளிகள் ஒன்றிணைந்து பயிற்சிகள் எடுத்துட்டு இருக்கோம். இதுல நான் மட்டும்தான் பெண். மத்த பசங்க என்கிட்ட 'அக்கா... அக்கா...’னு ரொம்பப் பிரியமா இருப்பாங்க. வில்வித்தையில் 30 மீட்டரில் தொடங்கி 50, 60, 70 மீட்டர் தூரம் வரை இப்போ கலக்கிட்டு இருக்கோம்.
ஆரம்பத்தில் பயிற்சிக்காக மைதானம் தேடி னப்போ, யாருமே கொடுக்க முன்வரல. நந்தனம் ஆர்ட்ஸ் காலேஜ் விளையாட்டுத் துறையில் இருக்கற மரிய ஆல்பர்ட் மற்றும் நாகராஜன் ரெண்டு பேரும்தான் அங்க அனுமதி வாங்கித் தந்தாங்க. கோச் தரணி, சபரி... ரெண்டு பேரும் தான் எங்க வெற்றிகளுக்கான ஊன்றுகோல்'' என்று நன்றி வார்த்தைகள் பகிர்ந்தவர், ஓர் வேண்டுகோளும் வைத்தார்.
''இப்போ நாங்க பயன்படுத்துற ஆர்ச்சரி உப கரணம் ஒன்றின் விலை, 80,000 ரூபாய். இதுதான் ஆரம்ப விலை. பத்து பேருக்கும் மொத்தம் நாலு தான் வெச்சுருக்கோம். ஒவ்வொருத்தரும் போட் டிக்குப் போகும்போது மாற்றி மாற்றி எடுத்துட்டு போய்னு பகிர்ந்துக்குறோம். ஒலிம்பிக்கில் ஜெயிக்க பயிற்சி எடுக்க, எங்களுக்கு இன்னும் தரமான ஆர்ச்சரி உபகரணம் வேணும். அதுக்கு ஸ்பான்ஸர் கிடைச்சா, இந்தியாவுக்குப் பெருமை சேர்க்க நாங்க இன்னும் நம்பிக்கையோட உழைப்போம்!''
- அனுராதாவின் வார்த்தைகளில் எதிர்பார்ப்பு!
ஒவ்வொரு விதையும் விருட்சமாகும், நல்ல தூண்டுதல் இருந்தால்!