மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 276

தடம்மாறிய காதலி... தடுமாறும் தம்பி !

வாசகிகள் பக்கம்

##~##

பெண்களின் கண்ணீரையே அதிகம் பார்த்த இந்தப் பக்கத்தில், ஓர் ஆணின் கண்ணீருக்குத் தீர்வு கேட்டு நிற்கிறேன்!

என் தம்பி ரிசர்வ்டு டைப். உறவினர்கள், நண்பர்கள் என யாருடனும் அதிகம் பழகமாட்டான். அவனுடைய ஒரே தோழி... நான்தான். பள்ளி, கல்லூரி, ஆசிரியர்கள், நண்பர்கள் என்று அவன் அனைத்தும் பகிர்வது என்னிடம் மட்டும்தான்.

பட்ட மேற்படிப்பு முடித்து, தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை பார்க்கும் என் தம்பிக்கு, இன்டர்நெட்டில்தான் அறிமுகமானாள் அந்தப் பெண். ஆன்லைன் பழக்கம், நாளடைவில் அவர்களை நேரில் சந்திக்க வைத்தது. நல்ல நண்பர்களாகத் தொடர்ந்தார்கள். அந்தப் பெண், தான் ஒருவரைக் காதலிப்பதாகக் கூறியிருக்கிறாள். திடீரென ஒருநாள், ''எனக்கு புருஷனா வர்றவன் உன்னை மாதிரியே இருந்தா... நான் அதிர்ஷ்டசாலியா இருப்பேன்'' என்று அவள் சொல்ல, அவளின் இந்த திடீர் மாற்றம், என் சகோதரனுக்கு ஒருவித தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்த நாட்களில், ''நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றோம்க்கா'' என்று அவன் என்னிடம் சொன்னபோது, அவன் முகத்திலும், மனதிலும் அத்தனை சந்தோஷம். நானும், அவனுடைய வாழ்க்கைக்கான சந்தோஷம் அவளால் கிடைக்கட்டும் என்று மகிழ்ந்தேன்.

என் தம்பி, அன்பில் மிக நேர்மையானவன். மெஸேஜ் அனுப்புவது, காலேஜில் டிராப் செய்வது, காபி ஷாப்பில் சந்திப்பது மட்டுமில்லை அவனுடைய காதலின் அகராதி... அவளுக்காகவே வாழ ஆரம்பித்தான். அவள் மேல் அளவில்லா அன்பை வளர்த்தான். 'அவள் ஃபிஸிகல் ரிலேஷன்ஷிப் விரும்புகிறாள். இது சரியா, தவறா..?’ என்று தன் டைரியில் அவன் எழுதி வைத்திருந்த வரிகளையும் நான் கவனிக்க நேரிட்டது.

என் டைரி - 276

இதற்கிடையில், அந்தப் பெண்ணின் போக்கில் திடீர் மாற்றங்கள். கொஞ்சம் கொஞ்சமாக என் தம்பியை தவிர்க்க ஆரம்பித்தாள். கோயிலுக்குச் சென்றால், அவன் கையால் தன் நெற்றியில் குங்குமம் வைத்துவிடச் சொல்லி சந்தோஷப்பட்டுக் கொள்ளும் அளவுக்கு நெருங்கியிருந்தவள், நாள்போக்கில் இவன் மொபைல் அழைப்புகளைக்கூட நிராகரித்தாள். ஒருகட்டத்தில், இவனுடனான பழக்கத்தை மொத்தமாகத் துண்டித்துக் கொண்டாள். இதனால் மிகவும் மன வேதனைக்கு ஆளான என் தம்பி, வேலை, உடல்நலம் என்று எதிலும் அக்கறையில்லாமல், வாழ்க்கையிலேயே பிடிப்பில்லாத அளவுக்குச் சிதைந்துள்ளான்.

''நீ சரியில்லைனு சொல்லியிருந்தாகூடப் பரவாயில்லைக்கா. 'உன்னைவிட அவன் (புதிய பாய் ஃப்ரெண்ட்) பெட்டரா இருக்கான். ஸோ ஸாரி... டேக் இட் ஈஸிடா!’னு சொல்லிட்டுப் போயிட்டா. அப்படினா... என்னோட உண்மையிலும் உண்மையான காதலை அவ புரிஞ்சுக்கிட்டது இவ்வளவுதானாக்கா..?'' என்று அனுதினமும் அழுகிறான்.

என் தம்பியின் வாழ்க் கையையே கசக்கி எறிந்துவிட்டு, கவலையே இல்லாமல் சென்று விட்டாள் அவள். ஆனால், அவளின் பொய்க் காதலுக் காக, 'நான் கல்யாணமே செய்துக்க மாட்டேன்க்கா. அப்போவாச்சும் என் பரிசுத்தமான அன்பு அவளுக்குப் புரியட்டும்’ என்று சபதமாகச் சொல்லி கவலையைக் கூட்டும் இவனை எப்படி இதில் இருந்து மீட்க..?!  

- பெயர் வெளியிட   விரும்பாத வாசகி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு... என் டைரி 275ன் சுருக்கம்

என் டைரி - 276

''பெண் இனத்தின் பொதுப் பிரச்னைதான் எனக்கும். 'பெரிய கம்பெனியில் மேனேஜர், கை நிறைய சம்பளம்; நல்ல வரன்’ என்று நம்பித்தான் மணமுடித்துக் கொடுத்தார்கள். ஆனால், திருமணமான சில நாட்களிலேயே அவரது ஆணாதிக்க புத்தி வெளிப்பட்டு, கண்ணீர் வடிக்கிறேன். மாஸ்டர் டிகிரி படித்திருந்தும், என்னை வேலைக்கு போகக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்தார். 'வீட்டை சுத்தம் செய்தாயா... காபி ரெடியா?' என்று எப்போதுமே முதலாளியாகவே நடந்து கொள்வார். 'சாப்பிட்டு கொழுப்பெடுத்து போயிருக்கே... ஒடம்பு வீங்கினதுதான் மிச்சம்’ என்றும்... 'நீங்கள்லாம் உருப்படவே மாட்டீங்க..’ என்றும் அவருடைய குத்தல் வார்த்தைகளைக் கேட்டு, நானும் என் குழந்தைகளும் அழாத நாட்களே இல்லை. அன்பே இல்லாத அந்த மனிதரிடம்இருந்து விலகிவிடலாம் என்று நினைக்கிறேன். வழிகாட்டுங்கள் தோழிகளே!

வாசகிகள் ரியாக்ஷன்...

வெற்றி உன் கையில் !

எல்லா குடும்பங்களிலும் நடப்பதுதான் உங்கள் வீட்டிலும் நடந்திருக்கிறது. மேலும் உங்கள் கணவரின் வெறுப்புக்கு காரணம், சிறுவயதிலோ அல்லது இப்போது வேலை பார்க்கும் இடத்திலோ அவமானப்படுகிற அளவுக்கு ஏதோ ஒரு சம்பவம் நடந்திருக்கலாம். அதை வெளியில் சொல்ல வெட்கப்பட்டு தன்னை முதலாளியாகவே நினைத்து உங்களை விரட்டுகிறார். 'கரைப்பார் கரைத்தால், கல்லும் கரையும்’ என்ற பழமொழிக்கேற்ப அவரிடம் பேசி அவரது பிரச்னையைக் கண்டுபிடியுங்கள். சிறந்த மனநல ஆலோசகரிடம் இதைப் பற்றி விவாதித்து ஒரு முடிவுக்கு வாருங்கள். இவை அனைத்தையும் அவருக்கு தெரியாமல் நடத்துங்கள். நம்மால் முடியாதது மருத்துவர்களால் முடியும். சம்சாரம் என்பது வீணை... சந்தோஷம் என்பது ராகம். பக்குவமாக காயை நகர்த்து. வெற்றி     உன் கையில்!

- நளினி ராமச்சந்திரன், கோவைப்புதூர்

அன்றிலாக அல்ல... கங்காருவாக!

ஒன்றல்ல, இரண்டல்ல... 14 வருடங்கள் உன்னைப்போல் கஷ்டப்பட்டு, வெறுத்துப்போய் குழந்தைகளுடன் வெளியேறி கடந்த 2 வருடங்களாக நீதிமன்றம், என் சுயசம்பாத்தியம் என மூச்சுவிடவும் நேரமின்றி வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் அனுபவசாலி நான். என் குழந்தைகளுடன் முழுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நாட்கள் சொர்க்கமாக இருக்கின்றன. தோழியே! முதல் பாதியை நாம் இழந்தாலும்... அடுத்த பாதியில் குழந்தைகளால் வாழ்வோம் என்று நம்புவோம், நம்பிக்கைதானே வாழ்க்கை! அன்புக்கு ஏங்கி அன்றிலாய் இருப்பதைவிட, அன்பை வார்த்து கங்காருவாக இருப்போம்!

- கிருத்திகா, சென்னை-4