
ஆச்சர்யம்... ஆனால், உண்மை!
கதைகளிலும் திரைப்படங்களிலும் காதலைக் கொண்டாடும் பலர், நிஜவாழ்வில் எதிர்க்கவே செய்கிறார்கள். ஆனால், கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக காதல் திருமணங்களை ஆதரித்து, காதலர்களுக்கு வேடந்தாங்கலாக இருந்துவருகிறது கரூர் மாவட்டம், மண்மங்கலம் ஒன்றியத்தில் உள்ள திருமுக்கூடலூர் கிராமம். இதுவரை இங்கு 200-க்கும் மேற்பட்ட காதல் திருமணங்கள் நடந்திருக்கின்றன. அவற்றில் பாதி, சாதி மறுப்புத் திருமணங்கள் என்பது சிறப்பு!

வீட்டுக்கு ஒரு மரம் என்பதைப்போல, திருமுக்கூடலூரில் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒரு காதல் திருமணமாவது நடந்திருக்கிறது. இந்தக் கிராமத்தில் காதல் திருமணங்களை நடத்துவதற்காகவே ஊர் மையத்தில் ‘தமிழ் திருமண மன்றம்’ என்ற திருமண மண்டபத்தை அமைத்திருக்கிறார்கள் என்பது இன்னுமோர் ஆச்சர்யம். ஒரே வீட்டில் நான்கு காதல் திருமணங்கள், ‘அலைபாயுதே’ பட பாணி காதல் திருமணங்கள், தமிழ் முறைப்படி நடைபெற்ற காதல் திருமணங்கள், சாதி மறுப்புக் காதல் திருமணங்கள் என்று இங்கு வகைவகையான காதல் திருமணங்கள் நடந்திருக்கின்றன.
திருமுக்கூடலூரில் சுமார் 1,000 பேர் வசிக்கிறார்கள். கடந்த 30 வருடங்களுக்கு முன்வரை, காதலுக்கு எதிர்ப்பு என்பதுதான் இங்கும் நிலைமை. ஆனால், முருகானந்தம் - சாந்தி தம்பதியின் காதல் திருமணத்துக்குப் பிறகு, காதலுக்குப் பச்சைக்கொடி காட்டும் கிராமமாகத் திருமுக்கூடலூர் மாறியதாகக் கிராம மக்கள் சொல்கிறார்கள். இந்த அதிரடி மாற்றத்துக்குக் காரணமான காதல் ஜோடி, மூத்த தம்பதி முருகானந்தம் - சாந்தியிடம் பேசினோம்.

“எங்க ஊர்ல எல்லா சமுதாய மக்களும் இருக்காங்க. கடந்த 60 வருடங்களா எங்க ஊர்ல தமிழ் உணர்வாளர்களும் முற்போக்குவாதிகளும் நிறைஞ்சே இருக்காங்க. ஆனாலும், இங்கே காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு இருக்கவே செய்தது. 33 வருஷத்துக்கு முன்னாடி, வேறு சமுதாயப் பெண்ணான சாந்தியைக் காதலிச்சேன். ரெண்டு வீடுகளிலும் கடுமையான எதிர்ப்பு.
ரெண்டு பேரும் பஸ் ஏறி, சேலம் மாவட்டத்தி லுள்ள பள்ளப்பட்டிங்கிற ஊருக்குப் போயிட்டோம். அங்க இருந்த எங்க அத்தை, துணிச்சலா எங்களுக்குத் திருமணம் பண்ணி வெச்சாங்க. முதல் பையன் பிறக்கிற வரைக்கும் அங்கேதான் இருந்தோம். அதன் பிறகு ஊர் திரும்பிய எங்களை ஊருக்குள்ள அனுமதிக்கலை. அதனால நாங்க பக்கத்து ஊர்ல குடியிருந்தோம். கொஞ்சம் கொஞ்சமா ஊர்ல பேசி, பெரியவங்க மனசை மாத்திதான் ஊருக்குள்ள வந்தோம்.
ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பா, அனு சரணையா, ஊக்கமா இருந்து நாங்க குடும்பம் நடத்துறதைப் பார்த்துட்டு, காதல் திருமணத்தின் மீது எங்க ஊர்க்காரங்களுக்குக் கொஞ்சம் நம்பிக்கையும் மரியாதையும் வர ஆரம்பிச்சது. ஊரில் நடந்த காதல் திருமணங்களை நான் ஆதரிச்சேன். அது சரின்னு தோணினவங்க என்கூட கைகோத்தாங்க. பல கைகள் இணைந்தன. அது, காதல் திருமணங்கள் செய்ய வசதியா ஊர் மக்கள் பணம் போட்டு, ஊர் மத்தியில திருமண மண்டபம் அமைப்பது வரை வந்து நின்றது’’ என்று சொல்லி ஆச்சர்யப்படுத்துகிறார் முருகானந்தம்.
“எங்க கல்யாண வாழ்க்கைக்கு வயசு 33. ஊர்ல, காதல் ஜோடிகள் ஆலோசனை கேட்கவோ, அடைக்கலத்துக்காகவோ முதல்ல தேடி வர்றது எங்களைத்தான். இனி ஒரு பிறப்பு உண்டான்னு எங்களுக்குத் தெரியலை. அதனால, சாதி, மதம், அந்தஸ்து, ஜாதகம்னு எல்லாத்தையும் ஒதுக்கிவெச்சுட்டு, கிடைச்ச இந்த ஒரு பிறப்புல நமக்குப் பிடிச்சவங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன?’’ என்கிற சாந்தி, ‘`எங்களோட ரெண்டு பசங்களுக்கும் சமீபத்தில்தான் காதல் திருமணம் செஞ்சு வெச்சோம்’’ என்கிறார் மகிழ்வுடன்.
இந்த ஊரைச் சேர்ந்த ராஜசேகர் - புவனேஸ்வரி தம்பதி, ‘அலைபாயுதே’ படத்தில் வருவதுபோல திருமணம் செய்துகொண்ட அனுபவத்தைப் பகிர்கிறார்கள்.
``நாங்க ரெண்டு பேரும் வேற வேற சமூகத்தைச் சேர்ந்தவங்க. எனக்கு இதுதான் சொந்த ஊர். புவனேஸ்வரிக்கு சொந்த ஊர், கரூர் தொழிற்பேட்டை. ரெண்டு பேரும் கல்லூரி நாள்களில் இருந்தே காதலிக்க ஆரம்பிச்சோம். இந்த விஷயத்தையே ரெண்டு பேர் வீட்டுக்கும் தெரியாத மாதிரி பார்த்துகிட்டோம். எங்களை ரெண்டு குடும்பத்தினரும் பிரிச்சிருவாங்களோங்கிற பயத்துல 2013-ல் பதிவுத் திருமணம் பண்ணிக்கிட்டோம்’’ என்று ராஜசேகர் சொல்ல, தொடர்கிறார் புவனேஸ்வரி...
“ஒரு வருஷம் எங்க வீடுகள்ல எங்க திருமணத்தை மறைச்சு வாழ்ந்தோம். 2014-ல் எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சாங்க. உடனே ராஜசேகர் எங்க வீட்டுக்கு வந்து நாங்க பதிவுத்திருமணம் செய்த விஷயத்தைச் சொல்ல, அவ்வளவுதான்... ரெண்டு வீட்டுலேயும் பிரளயம் வெடிச்சது. இறுதியா, திருமுக்கூடலூரில் எங்க திருமணம் முறைப்படி நடந்தது. ஓர் ஆண் குழந்தையோடு இப்போ எங்கள் வாழ்க்கை சந்தோஷமா போகுது’’ என்கிறார் புவனேஸ்வரி.

காதலுக்கு சாதி, மதம், அந்தஸ்து மட்டுமல்ல, படிப்பும் தடையில்லை என்று வாழ்ந்துகாட்டுகிறார்கள் பிரகாஷ் - வளர்மதி தம்பதி. “நான் பி.எஸ்ஸி படிச்சிருக்கேன். அவர் பத்தாவது முடிக்கலை. நாங்க ரெண்டு பேரும் இதே ஊரைச் சேர்ந்தவங்கதான். எங்க ஊர்ல காதல் திருமணங்களுக்கு சம்மதம் சொல்வாங்க என்றாலும், அவர் படிக்கலை என்பதால என் வீட்டுல கடுமையான எதிர்ப்பைக் காட்டினாங்க. இவர் எங்க வீட்டுக்கு வந்து, ‘படிப்பு இல்லைன்னாலும், உங்க மகளை ராணி மாதிரி வாழவைக்கிற அளவுக்கு சம்பாதிக்கும் திறமை எங்கிட்ட இருக்கு’ன்னு பேசினார். எங்க வீட்டுலயும் பச்சைக்கொடி காட்ட, எங்க கல்யாணம் முடிஞ்சு இப்போ நாலரை வருஷம் ஆகுது’’ என்கிறார் வளர்மதி.
சமீபத்தில் காதல் திருமணம் முடித்திருக் கிறார்கள் திலீபனும் தேன்மொழியும். “சமூக வலைதளம் மூலமாகத்தான் பக்கத்து ஊரைச் சேர்ந்த தேன்மொழி எனக்குப் பழக்கமானாங்க. எங்க காதலுக்கு எங்க வீட்டுல 200 சதவிகிதம் சம்மதம் சொல்லிட்டாங்க. நாங்க எங்க ஊர் கோயில்ல திருமணம் பண்ணிக்கிட்டோம். பிறகு தேன்மொழி வீட்டுலயும் எங்க காதலை ஏத்துக்கிட்டாங்க. அதனால, எங்க ஊர்ல உள்ள தமிழ் திருமண மன்றத்துல விரைவில் திருமண வரவேற்பு நடத்த இருக்கோம். ரெண்டு ஊர் மக்களும் அதுல கலந்துக்க இருக்காங்க. ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான் என் அண்ணன் தமிழரசன், தன்னோடு வேலைபார்த்த ரம்யாவை காதலிச்சு, தமிழ் முறைப்படி தேவாரம், திருவாசகப் பாடல்களைப் பாடி திருமணம் பண்ணிக்கிட்டார். ரெண்டே மாசத்துல இப்போ எனக்கும் காதல் திருமணம். சினிமா மாதிரி இருக்குல்ல...’’ என்று சிரிக்கிறார் திலீபன்.

``இந்த ஊர்ல மாணிக்கம் என்பவர் வீட்டில் மட்டும் நான்கு காதல் திருமணங்கள் நடந்திருக்கு. ஊர்ல இதுவரை 200 காதல் திருமணங்கள் நடந்திருக்கு. அதுல, 100 திரு மணங்கள் சாதி மறுப்புத் திருமணங்கள். இங்கே காதல் திருமணங்கள் அனைத்தையும் தமிழ் முறைப்படி தேவாரம், திருவாசகம், திருக்குறள் உள்ளிட்ட பாடல்களைப் பாடி செய்றாங்க. ஜாதகத்தை மறுத்தும் காதல் திருமணம் செய்றாங்க. காதல் பறவைகளுக்கு அடைக்கலம் தரும் வேடந்தாங்கலா இருக்கு எங்க கிராமம்’’ என்று புகுந்த ஊரின் பெருமை சொல்கிறார் தேன்மொழி.
காதலுக்கு ஜே!