ஸ்பெஷல் 2
ரெகுலர்
ஸ்பெஷல் 1
Published:Updated:

Money Money Money

ஓய்வு நேரத்தி்லும் உற்சாக வருமானம் !கொஞ்சம் முதலீடு... கொஞ்சம் அனுபவம்... நிதி ஆலோசகர் அனிதா பட் படங்கள்: ப.சரவணகுமார்

 ##~##

'வீட்டிலிருந்தே ஏதாவது சம்பாதிக்க வேண்டும்' என்கிற எண்ணம், இங்கே பெண்கள் பலருக்கும் இருக்கிறது. திருமணத்துக்குப் பிறகு... குழந்தை பிறப்பு, அதை வளர்ப்பது என ரொம்ப பிஸியாக இருந்துவிட்டு, குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற பிறகு, வீட்டில் அதிக நேரம் கிடைக்கும்போது... ஏதாவது வேலைக்குப் போக வேண்டும் அல்லது வீட்டிலிருந்தபடி சம்பாதிக்க வேண்டும் என்பது சரியான பிளானே!

இப்படிப்பட்ட தேடலில் இருப்பவர்களுக்கு... பங்குச் சந்தையும் கைகொடுக்கும். கொஞ்சம் அனுபவம், கொஞ்சம் முதலீடு இருந்தால்... பங்குச் சந்தை மூலம் பெண்களும் சம்பாதிக்க முடியும்! வீட்டில் ஒரு கம்ப்யூட்டர், இணையதள வசதி இருந்தால், நீங்களும் பங்குச் சந்தை மூலம் பணம் பண்ணலாம் வாருங்கள்.

எந்த ஒரு தொழில் துவங்குவதற்கு முன்பும் அத்தொழில் பற்றிய அனுபவங்கள், நுணுக்கங்கள் அனைத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும். அதுபோலத்தான் பங்குச் சந்தையில் பணம் சம்பாதிப்பதற்கு முன்பு, எப்படி ஒரு பங்கைத் தேர்ந்தெடுக்க வேண்டும், என்னென்ன விஷயங்களைப் பார்க்க வேண்டும் என்று சில கூறுகள் உள்ளன. தோழிகளுக்கு அதைப் பற்றிய வழிகாட்டல் இங்கு.

Money Money Money

உங்கள் வீட்டின் முக்கிய பாதுகாப்பு விஷயங்களான இன்ஷூரன்ஸ், மற்ற வகையான சேமிப்புகள், வீட்டுச் செலவுக்கு ஒரு மாதத்துக்குத் தேவைப்படும் தொகை மற்றும் அவசரத் தேவைக்கு ஒரு தொகை என அனைத்துக்கும் போக, மீதியிருக்கும் தொகையை மட்டுமே பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்று முதலில் தீர்மானித்துக் கொள்ளுங்கள். இதுதான் பாதுகாப்பான முதலீட்டு முயற்சி!

பங்குகள் எப்படி செயல்படுகின்றன?

ஒரு நிறுவனத்தின் அடிப்படை விஷயங்கள், அந்த நிறுவனம் சார்ந்த துறை செயல்பாடுகள், உலக நடப்புகள், மற்ற நாட்டு கரன்ஸி செயல் பாடுகள் என அனைத்து விஷயங்களையும் சார்ந்து தான் பங்குச் சந்தை செயல்படும். இதில் ஏற்படும் மாற்றங்கள் பங்குச் சந்தையில் பிரதிபலிக்கும். பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் பங்குகள், பல துறைகள் சார்ந்து இருக்கும். அதாவது வங்கி, எண்ணெய், ரியல் எஸ்டேட், ஃபைனான்ஸ், டெலிகாம், ஃபார்மா, மெட்டல், உணவு என பல துறைகள் இருக்கின்றன. இதில் எந்தத் துறை பங்குகளில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்பதை நடப்பு நாட்டுச் சூழலை அடிப்படை யாக வைத்துத் தீர்மானிக்க வேண்டும். உதாரண மாக, தற்போதைய சூழ்நிலையில் 2-ஜி வழக்கு நடந்து வருவதால்... டெலிகாம் துறை பங்குகள் அனைத்தும் சரியாகச் செயல்படவில்லை. இதுபோன்ற துறை பங்குகளை தேர்ந்தெடுக்காமல், வங்கித் துறை சார்ந்த பங்குகளை இப்போதைய சூழ்நிலைக்குத் தேர்ந்தெடுக்கலாம்.

Money Money Money

முதலில் நீண்டகால முதலீடு நோக்கில் நல்ல பங்குகளை வாங்கி வைத்துவிடலாம். நீண்டகாலம் எனும்போது, குறைந்தபட்சம் ஒரு வருடம் வரை அந்தப் பங்குகளை விற்காமல் வைத்திருக்க வேண்டும். என்ன காரணத்தினால் அந்தப் பங்கு விலை அதிகரிக்கிறது, அல்லது குறைகிறது என் பதை கண்காணித்து வர வேண்டும். குறைந்தகால முதலீடு என்பது ஒரு பங்கை மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை வைத்திருக்க வேண்டும்.

Money Money Money

ஆரம்பத்தில் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் புரோக்கிங் அலுவலகத்துக்குச் சென்று, பங்குச் சந்தையின் செயல்பாடு, ஒரு பங்கை எப்படி வாங்க வேண்டும், எப்படி விற்க வேண்டும், அதற்கு எவ்வளவு புரோக்கரேஜ் ஆகும் என அனைத்தும் தெரிந்து கொள்ளுங்கள். அதன் பிறகு நீங்களாகவே வாங்கி, விற்க கற்றுக் கொள்ளுங்கள். ஏன் ஒரு பங்கு விலை ஏறுகிறது, குறைகிறது என்பதைத் தெரிந்துகொண்டால்... சுலபமாக இதைப் பழகிக் கொள்ளலாம்.

எங்கள் நிறுவனத்தில், பங்குச் சந்தை மூலம் பணம் சம்பாதிக்கும் அருணா சொல்வதைக் கேளுங்களேன்... ''சொந்தமாக பிளாஸ்டிக் நிறுவனம் நடத்தி வந்தேன். உடல்நிலை சரியில்லாத காரணத்தால், பிஸினஸைக் கவனிக்க முடியவில்லை. கணவர்தான், 'வீட்டிலிருந்தே பங்குச் சந்தையில் சம்பாதிக்கலாமே?’ என்றார். அதன்பிறகுதான் எனக்கும் ஆர்வம் வந்தது. முதலில் பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்து வர்த்தகத்தைத் துவங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக பங்கு வர்த்தகத்தின் சூட்சமத்தை கற்றுக் கொண்டேன். இப்போது ஐந்து லட்சம் ரூபாய் போட்டுள்ளேன். எனக்கு இதய நோய் இருப்பதால், தினம் எனக்குத் தேவைப்படும் மருந்துகள், வீட்டுக்குத் தேவையான செலவுகள் என என் வருமானத்தின் மூலம்தான் செய்துகொள்கிறேன்.

பங்கு வர்த்தகத்தில் வருமானம் மட்டுமே கிடைக்கும் என்பது இல்லை. நஷ்டமும் வரும் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். நானும் பணத்தை இழந்துள்ளேன். அது எல்லாமே ஒரு அனுபவம்தான். பங்குச் சந்தையைப் பொறுத்தவரை பொறுமை ரொம்ப அவசியம். ஒரு பங்கை வாங்கிவிட்டால் பொறுமையாக வைத்திருந்து, அது நன்கு உயரும்போது விற்கவேண்டும். நான் அந்தக் காலத்து எஸ்.எஸ்.எல்.சி. படித்தவள். பங்கு வர்த்தகம் பற்றி ஒன்றுமே தெரியாதவள். ஆனால், அனுபவம் மூலமே அனைத்தையும் கற்றுக் கொண்டேன். இப்போது எனது தேவைகளை நானே பார்த்துக் கொள்கிறேன்!''

என்ன தோழிகளே... நீங்களும் ரெடியா?!

- பணம் பெருகும்...