பூ.கொ.சரவணன் படங்கள்: என்.விவேக்
##~## |
''வயதானாலும் விளை யாட்டின் மீதான என் ஆர்வமும் வேகமும் குறையவில்லை. அதனால்தான் இந்த 34 வயதிலும், 18 வயது இளம் புயல்களைச் சமாளித்து விளையாடி வெற்றிகளைச் சேர்த்துக் கொண்டிருக்கிறேன்!''
- உற்சாகம் பொங்குகிறது ரூஷ்மி சக்கரவர்த்தியின் குரலில்!
இந்த வருடம் டென்னிஸில் தேசிய சாம்பியன் பட்டம் வென்ற சென்னைப் பெண்! இவருடன் விளையாடத் தொடங்கிய இவர் வயதுப் பெண்கள் எல்லாம் விளையாட்டில் இருந்து விலகிவிட, இவர் மட்டும் இன்னும் வேகம் குறையாத வேங்கையாகக் கலக்கிக் கொண்டிருக்கிறார்!
''என்னுடைய இளமைப் பருவம் எண்பதுகளில் கடந்தது. என் அப்பா, தோல் ஏற்றுமதி தொழிலில் இருந்தார். அம்மா, கட்டுமானப் பொறியியலில் லெக்சரர். தம்பி, நான் என இரண்டே பிள்ளைகள் உள்ள அழகான குடும்பம். அப்பா வுக்கும் அம்மாவுக்கும் விளை யாட்டில் அதிக ஆர்வம் உண்டு. இருவரும் வேலைக்குச் சென்றதால், வீட்டில் நான் தனித்திருக்கும் பொழுதுகளைத் தவிர்க்க, ஆறு வயதிலேயே டென்னிஸ் கிளாஸுக்கு அனுப்பினார்கள். பொழுதுபோக்காக இல்லாமல், போட்டி களில் கலந்துகொள்ளும் அள வுக்கு ஆர்வம் வளர்த்தேன்.


ஒன்பது வயதில் மாநில அளவிலான போட்டி ஒன்றில் ஆண்களும் பெண்களும் ஒரே பிரிவில் கலந்து கொண்டோம். அப்போது ஃபைனலில் ஒரு பையனிடம் தோற்றபோது, கண்ணீர் விட்டு அழுதேன். மைதானத்தில் அழுத கடைசித் தருணம் அதுதான். அதன் பின் பல்வேறு மாநில மற்றும் தேசிய போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிப் படிகளில் ஏறினேன்'' எனும் ரூஷ்மி... 'அண்டர் 12’-ல் சாம்பியன், 'அண்டர் 14’-ல் ரன்னர் என்று தொடர்ந்து முன்னேறியிருக்கிறார்.


''சீனியர் லெவலுக்கு போன போது, பல்வேறு போட்டிகளில் ஜெயித்தாலும், முக்கியமான போட்டிகளில் தோற்றுக் கொண்டே இருந்தேன். எங்கு, எதில், என்ன தப்பு என்று சுய பரிசோதனை செய்தேன். அப்போதுதான் புரிந்தது எல்லா ஆட்டங்களிலும் 15 வயதுப் பெண்ணுக்கே உரிய பரபரப்பு மற்றும் அவசரத்தோடு நான் இழைத்த தவறுகள். அதில் இருந்து நிதானமாக ஆடத் தொடங்கினேன். வெகு சீக்கிரமே நேஷனல் சாம்பியன் ஆனேன். 30 வயதுக்குள் ஐந்து முறை தேசிய சாம்பியன் ஆனேன்.
ஸ்பான்ஸர் பிரச்னைகளால் அதிக அளவில் உலக அளவிலான போட்டிகளில் வெற்றிகளைக் குவிக்க முடியவில்லை. இருந்தாலும், ஆர்த்தி பொன்னப்பா எனும் நம் ஊர் பெண்ணுடன் இணைந்து, உலக டென்னிஸ் சம்மேளனத்தின் போட்டிகளில் 25 முறை இரட்டையர் பட்டங்களைத் தட்டியிருக்கிறேன்!'' என ஆச்சர்யப்படுத்திய ரூஷ்மி,
''30 வயதுக்குப் பிறகும் விளையாட்டில் என் வேகம் குறையவில்லை. ஆனால், தோள்பட்டையில் ஏற்பட்ட ஒரு காயம், என்னை இரண்டு வருடங்கள் ஓய்வெடுக்க வைத்தது. அதிலிருந்து மீண்டு வந்து விளையாடினேன்.
இந்த வருடம் ஆடிய நேஷனல் லெவல் போட்டி, எனக்கு முக்கியமானது. இறுதிப் போட்டியில் நானும், ஹைதராபாத்தைச் சேர்ந்த வைஷ்ணவி என்ற இளம் பெண்ணும் மோதினோம். ஒருவருக்கொருவர் சளைக்காமல் விளையாடினோம்.

ஓய்வு அறையில் இருந்தபோது, தொலைக்காட்சி வர்ணனையாளர்கள்... 'ஐந்து முறை தேசிய சாம்பியன் பட் டம் வாங்கிய ரூஷ்மியை, இன்னும் ஒரு பாயின்ட் எடுத்து இளம் பெண் வைஷ்ணவி வீழ்த்தப் போகிறார்! இதோ... நமக்கு ஒரு புதிய தேசிய சாம் பியன் கிடைக்கப் போகிறார்!’ என்று எல்லாம் பேசுவது என் காதில் விழுந்து, என் ஆட்டத் தையே டிஸ்டர்ப் செய்தது.
இளமை துள்ளும் வைஷ்ணவிக்கு கூட்டம் ஆரவாரிக்கிறது. அந்நேரம் எனக்கோ முதுகு வலி உச்சத்தில் ஏறியிருக்கிறது. என் வெற்றி என்னிடம்தான் உள்ளது, என் தோல்வியை யாராலும் தீர்மானிக்க முடியாது என்று மனதுக்குள் வெறியேற, மருத்துவ உதவி எடுத்துக்கொண்டு மீண்டும் களத்துக்குள் வந்தேன். எப்போதும்போல நிதானமாக ஆடினேன். அனல் பறந்த ஆட்டத்தின் இறுதியில், 34 வயதான ரூஷ்மியே ஆறாவது முறையாகவும் தேசிய சாம்பியன் ஆனேன். சென்ற வருடம் இறுதிப் போட்டி வரை சென்று வெளியேறியபோது, 'ரூஷ்மியின் காலம் முடிந்தது' என்று பேசியவர்களுக்கு இந்த வெற்றியின் மூலம் பதில் சொன்ன திருப்தி யும் கிடைத்தது. இரட்டையர் போட்டியிலும் தங்கம் அடித்தேன்!'' - ரூஷ்மியின் கண் களில் வெற்றியின் களிப்பு!
''ஆட்டத்தில் இருந்த ஆர்வம், அதைத் தவிர வேறு எதைப் பற்றியும் சிந்திக்க விடவில்லை... திருமணம் உட்பட. எந்த வெற்றிக்கும் வயது ஒரு தடை இல்லை. எனக்குப் பிடிக்கும் வரை தொடர்ந்து ஆடிக்கொண்டே தான் இருப்பேன். வாங்களேன் ஒரு ஆட்டம் ஆடலாம்!''
- சின்ன சிரிப்புடன் அழைக்கும் ரூஷ்மியிடம், ஆறு வயதில் விளையாட ஆரம் பித்த போது இருந்த துடிப்பு அப்படியே... இன்னும்!