ஸ்பெஷல் 2
ரெகுலர்
ஸ்பெஷல் 1
Published:Updated:

தரம் உயர்தரம் லாபம் நிரந்தரம் !

பினாயில் பிஸினஸில் கமகமக்கும் சுதா எஸ்.ஷக்தி,படங்கள் : வி.ராஜேஷ்

##~##

''குவான்டிட்டியைவிட, குவாலிட்டிக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பாருங்க... உங்க பிஸினஸ் உச்சம் தொடுவது நிச்சயம்! இதை தாரக மந்திரமா வெச்சுருக்கிற எந்தத் தொழிலும், நஷ்டமடைஞ்சதா சரித்திரமே இல்லீங்க!''

- நேர்மையான வார்த்தைகளில் பிஸினஸ் நியாயம் பகிர்கிறார் சுதா.

கோயம்புத்தூர், கணபதி பகுதியில் 'டாக்டர் க்ளீன்’ என்கிற பெயரில் பினாயில் தயாரிப்புக் கம்பெனி நடத்தி வருகிறார் சுதா. எளிய முதலீட்டுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம்... ஓயாத உழைப்பு, நிறைவான தரம் ஆகியவற்றால் தற்போது வலிமை கொண்டதாக நிமிர்ந்து நிற்கிறது!

''எப்படி சாத்தியமாயிற்று இந்த சக்சஸ்?'' என்று கேட்டதும், சுவாரசியமாகப் பேச ஆரம்பித்தார் சுதா.

தரம் உயர்தரம் லாபம் நிரந்தரம் !

''கல்யாணமான புதுசுல 'ஹோம் மேக்கர்’ பட்டத்தை ரொம்ப பரவசமா ஏத்துக்கிட்டவ நான். சில வருஷங்கள்ல 'உனக்கும், குடும்பத்துக்கும் தோதான ஒரு வேலையை தேடிக்கலாமேம்மா’னு பிறந்த வீடு, புகுந்த வீடுகள்ல சின்னதா ஊக்கப்படுத்த ஆரம்பிச்சாங்க. காலையிலயே அரக்கப்பரக்க சமையல் செஞ்சு வெச்சுட்டு ஓடி, நாள் முழுக்க ஓயாம உழைச்சு, சாயங்காலம் அசதியோட வீடு திரும்பி... இப்படிப்பட்ட வேலைகள்ல எனக்கு விருப்பமில்லை. 'குடும்பத்து மேலே இருக்கிற நம்மோட சிரத்தையை ஒரு நிமிஷம்கூட நாம பார்க்கப் போற வேலை குலைச்சுடக் கூடாது'ங் கிறதுதான் அதுக்குக் காரணம். அதனால சின்னதா ஒரு பிஸினஸ் ஸ்டார்ட் பண்ணலாம்னு முடிவு பண்ணி களமிறங்கினேன். அப்போ என் கணவர் கையை நான் இறுகப் பிடிச்சிருந்ததை, இந்த இடத்துல சந்தோஷமாப் பகிர ஆசைப்படுறேன்.

தரம் உயர்தரம் லாபம் நிரந்தரம் !

சின்னதா தொழில் தொடங்கறவங்க, தினப்படி வீடுகள்ல பயன்படுத்தப்படுற விஷயமா பார்த்து ஆரம்பிக்கறது நல்லது. அதனால குழந்தைங்களுக்குப் பயன்படுத்துற சோப் தயாரிக்கலாம்னு முடிவு பண்ணி, அதை கத்துக்கிறதுக்காக மும்பை போனோம். அங்கேதான் புரிஞ்சுக்கிட்டோம்... சோப்பைவிட, பினாயிலுக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறதை! பினாயில் சம்பந்தமா பல விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டு திரும்பினோம்.

26 வருஷத்துக்கு முன்ன, மங்களம் பொங்குற ஒரு நாள்ல, வெறும் ஐந்தாயிரம் ரூபாயை முதலீடா போட்டு இந்த பிஸினஸைத் துவக்கினோம்.

பிஸினஸ் வெற்றியடைய சில ரகசியங்கள் இருக்குது. அதுல முக்கியமானது, அதிக புழக்கத்தில் உள்ள பொருளைத் தயாரிக்கணும்... அந்தப் பொருளுக்கு, எல்லாரையும் ஈர்க்கற மாதிரியான பெயரை வைக்கணும்கிறதுதான். எங்களோட தயாரிப்பு சுகாதாரம் ப்ளஸ் ஆரோக்கிய வாழ்வுக்கான விஷயம்ங்கிறதால, 'டாக்டர் க்ளீன்’னு டச்சிங்கா பேர் வெச்சோம். எந்தப் பொருளானாலும் தரம் இருந்தா மட்டுமே மார்க்கெட்ல நிலைச்சு நிற்க முடியும். கிருமிகளையும், அசுத்தங்களையும் சரி பண்ணக்கூடிய பொருள்ங்கறதால... தரத்துல ரொம்பவே கவனமா இருக்கோம் எப்பவுமே'' என்று நிறுத்தியவர் லெமன் டீ பரிமாறியபடியே மீண்டும் பேச்சைத் துவக்கினார்.

தரம் உயர்தரம் லாபம் நிரந்தரம் !

''நம்ம பொருளை சந்தைப்படுத்துறதுல ஜெயிச்சுட்டோம்னா, முக்கால்வாசி கிணறு தாண்டிட்டதா அர்த்தம். அதனால அந்த விஷயத்துல படிப்படியா, பட் ஸ்டெடியா முன்னேற ஆரம்பிச்சேன். தொடக்கத்துல அக்கம்பக்கத்துல இருக்கிற கடைகள்ல சொல்லி வெச்சு 10, 20 பெட்டிகளை சப்ளை பண்ணினேன். அதுல கிடைக்கற லாபத்தை, மறுபடியும் தொழில்லயே முதலீடு பண்ணினேன். விற்பனை பிரதிநிதிகளை நியமிச்சு நேரடியா மக்கள்கிட்ட கொண்டு போனேன். இது மூலமா ஆர்டர் பெருகி, சந்தோஷப்படுற மாதிரி வருமானமும் வர ஆரம்பிச்சுது.

சுயமா பிஸினஸ் பண்றப்போ லாபம் வருதோ இல்லையோ, நிறைய பிரச்னைகள் வரும். நிறைய ஆர்டர்களை வாங்கி வெச்சு, தயாரிப்புல மும்முரமா இருக்கிற நேரத்துல, ரெண்டு, மூணு பேர் மொத்தமா லீவு போடுறது, சம்பள விவகாரம், பாடாய்ப்படுத்தும் மின்வெட்டுனு சொல்லிக்கிட்டே போகலாம். ஆனா, எல்லாத்தையும் பொறுமை ப்ளஸ் புத்திசாலித்தனத்தோட கையாளக் கத்துக்கணும். வேலை பார்க்கறவங்ககிட்ட குடும்பப் பாசத்தோட பழகி நம்மோட எதிர்பார்ப்பை புரிய வைக்கணும். நியாயமான ஊதியத்துல தரமான உழைப்பை அவங்ககிட்ட இருந்து வாங்க ஆரம்பிச்சுட்டா, சிறந்த முதலாளிக்கான கிரீடத்தை நீங்க தாராளமா எடுத்து தலையில வெச்சுக்கலாம்.

நம்ம பொருள் சந்தையில நல்லா போக ஆரம்பிச்சு நிறைய லாபம் வந்ததும், நமக்குள்ளே சின்னதா ஒரு கர்வம் எட்டிப் பார்க்கும் பாருங்க... அது ரொம்ப மோசமானது. அதன் விளைவா பிஸினஸை பெருக்கிறேன்னு சொல்லி தடாலடியா அகலக்கால் வெக்க ஆரம்பிச்சுடுவோம். வலிய போய், ரொம்ப ஹெவியா ஆர்டர்களை பிடிச்சு, வெளியில கன்னாபின்னான்னு கடன் வாங்கிற பழக்கமெல்லாம் தலைதூக்கும். அதனால ரொம்ப கவனமா செயல்படணும். சப்ளை பண்ணின தயாரிப்புகளுக்கான பணம் ஒழுங்கா வந்து சேராது, வாங்கின செக் பவுன்ஸ் ஆகிடும். அதனால பிஸினஸை டெவலப் பண்றதுல நிதானமும், கவனமும் ரொம்ப முக்கியம்.

தரம் உயர்தரம் லாபம் நிரந்தரம் !

நடுங்க வைக்கிற ஒரு விஷயம்... போலி தயாரிப்புகளோட நடமாட்டம்தான். நம்மோட பேக்கிங் கலர், ஸ்டைலை காப்பியடிச்சு போலியான தயாரிப்புகளை கடையில பார்க்க வேண்டிய சூழல் வரும். உடனே பொங்கி எழுந்து ஆர்ப்பாட்டம் பண்றது, பொசுங்கி முடங்கிடுறதுனு இல்லாம... நிதானமா அந்த நபர்களை கார்னர் பண்ணணும். இல்லை... கொஞ்ச நாள் கண்டுக்காம விட்டுட்டோம்னா தரக்குறைவான அந்தத் தயாரிப்பை மக்களே புறந் தள்ளி காணாம பண்ணிடுவாங்க. பினாயில் தயாரிப்புக்கு முக்கியமான பொருள் பைனாயில். இதைப் பயன்படுத்தினா தரமான பினாயிலை தயாரிக்கலாம். சிலர், பெட்ரோலியத்துல இருந்து வர்ற 'க்யூமின்’ அப்படிங்கிற பொருளை பயன்படுத்துவாங்க. இதைப் பயன்படுத்தினா, குறைஞ்ச விலையில அதிக பாட்டில்கள் தயாரிக்க முடியும், ஆனா, தரம் இருக்காது. அப்படி எங்கள காப்பியடிச்சு மார்க்கெட்டை பிடிச்ச சிலர், ஆறேழு மாசத்துல அட்ரஸ் இல்லாமப் போயிட்டாங்க. சின்ன சின்னதா மாற்றங்களை அப்பப்போ பண்றது நல்ல பிஸினஸ் யுக்தி. பினாயிலோட கலர்ல, மணத்துல வித்தியாசங்களைக் கொண்டு வந்தோம். இப்போ கோவை தவிர ஏழெட்டு மாவட்டங்கள்ல எங்க தயாரிப்பு நல்லபடியா போயிட்டுஇருக்கு. வெறும் ஐயாயிரம் முதலீட் டுல ஆரம்பிச்ச நான், இன்னிக்கு மாசம் 30 ஆயிரம் ரூபாய் வரைக்கும் லாபம் பார்த்துட்டிருக்கேன்.

சொந்த வீடு, பிள்ளைங்களோட படிப்பு, திருமணச் செலவு, எதிர்கால சேமிப்புனு மனநிம்மதியோட செட்டிலாகிற வருமானத்தை இந்த பிஸினஸ் தந்திருக்கு. இதையெல்லாம் தாண்டி ஏழு பேருக்கு, அதுல ஐந்து பெண்களுக்கு வேலை கொடுக்கறது மனசுக்கு நிறைவா இருக்கு. தெளிவான மனசோட நீங்களும் பிஸினஸ் பண்ண வாங்க தோழிகளே... ஆல் தி பெஸ்ட்!'' என்று நம்பிக்கை தருகிறார் சுதா.