'மவுஸ்'ஸிகா

இணையம் வாழ்த்திய மணமகள்!

##~## |
'ஃபேஸ்புக் நிறுவனம்' பங்குச் சந்தையில் அடியெடுத்து வைத்ததன் மூலம் எழுந்த பரபரப்பு ஓய்வதற்குள், அதன் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் திருமணம், இணையவாசிகளிடம் ஹிட் அடித்துள்ளது. ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் 'ஸக்கர்பெர்க்’-ஐ விட, அவரைக் கரம்பிடித்த பிரிசில்லா சான் குறித்தே பதிவு மழை பொழியப்பட்டது. ஹார்வர்டில் பிரிசில்லாவை முதல் முதலில் ஸக்கர்பெர்க் பார்த்து, காதலில் விழுந்தது தொடங்கி, பத்து ஆண்டுகளாகக் காதலர்களாக வலம் வந்தது வரையில், தங்களுக்குத் தெரிந்த விஷயங்களை சூடாகவும் சுவையாகவும் குறும்பதிவுகளாகக் கொட்டினார்கள்.
கலிஃபோர்னியா மருத்துவப் பல்கலைக்கழகத்தில் குழந்தைகள் நல மருத்துவப் பட்டம் பெற்றிருக்கும் பிரிசில்லா, சீன வம்சாவளியைச் சேர்ந்தவர்.
'உடலுறுப்புத் தானம் செய்ய விரும்புவோருக்கான புதிய வசதி ஒன்று, அண்மையில் ஃபேஸ்புக்கில் சேர்க்கப்பட்டது. இதன் மூலம், ஃபேஸ்புக் சமூக வலைதளம் பொழுதுபோக்குக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறது என்கிற எதிர்மறை விமர்சனத்தை உடைத்திருக்கிறார் ஸக்கர்பெர்க். இதன் பின்னணியில் இருந்தவர் பிரிசில்லாதான்!’ என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.
வெறும் 100 பேர் மட்டுமே கலந்துகொண்ட திருமண நிகழ்வுக்குப் பின், ஸக்கர்பெர்க் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மணக்கோலத்துடனான புகைப்படத்தை வெளியிட, லைக்குகளாலும் ஷேர்களாலும் லட்சக்கணக்கில் மொய்வைத்தனர், இணையவாசிகள்!
பிரிவுக்குக் காரணம் ஃபேஸ்புக்!

ஒருபக்கம் மார்க் ஸக்கர்பெர்க் தனது ஸ்டேட்டஸை 'திருமணமானவர்’ என மாற்றிக்கொள்ள... மறுபக்கம், 'இங்கிலாந்தில் மணமுறிவுக்கான காரணங்களில் மூன்றாவது இடத்தில் ஃபேஸ்புக் இருக்கிறது' என்கிற அதிர்ச்சிகர ஆய்வுத் தகவல் வெளியாகியுள்ளது!
'டைவர்ஸ் - ஆன்லைன்’ என்கிற சட்ட நிறுவனம், இங்கிலாந்தில் மணமுறிவுகளுக்கான முக்கிய காரணங்கள் பற்றிய கருத்துக்கணிப்பு ஒன்றை மேற்கொண்டது. மணமுறிவுக்கு விண்ணப்பித்துள்ள 5,000 பேரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. அதில், தங்கள் திருமண வாழ்க்கையை முறித்துக்கொள்ள ஃபேஸ்புக்தான் காரணம் என்று 33 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள். தன் கணவர் வேறு பெண்ணிடமும், தன் மனைவி வேறு ஆணிடமும் கொண்டிருக்கும் பழக்கம் மற்றும் நெருக்கத்தை ஃபேஸ்புக் மூலம் கண்டு கொதித்ததன் விளைவே, இந்த விவகாரங்களுக்குப் பின்னணி!
வலைப்பூவரசி!

முனைவர் கல்பனா சேக்கிழார்... அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறை விரிவுரையாளர். 40-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கும் இவர், அதுபற்றிய பயனுள்ள பதிவுகள் மட்டுமின்றி, தமிழ் அறிஞர்கள் குறித்த அறிமுகங்கள், இலக்கணம், இலக்கிய இன்பம், சங்க இலக்கியம், சிற்றிதழ்கள் என பல்வேறு தலைப்புகளிலும் பதிவிட்டு வருகிறார். தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், மாணவர்கள் பின்தொடர வேண்டிய ‘www.sekalpana.com' என்ற தளத்துக்குச் சொந்தக்காரரான இவருக்கே இந்த இதழின் 'வலைப்பூவரசி’ விருது.

