ஃபார்ட்டி ப்ளஸ்... கவர்ச்சியைவிட கம்பீரமே முக்கியம் !வயது நிர்ணய நிர்வாக நிபுணர் டாக்டர் கௌசல்யா நாதன்
##~## |
தாய்மை, இல்லறம் என பல பொறுப்புகளைச் சிறப்பாகக் கடந்து, 45 வயதிலிருப்பவர்கள், 'நம்மை நாமே கொண்டாட வேண்டிய மிக முக்கியமான வயதில் இருக்கிறோம்' என்று பெருமை கொள்ளுங்கள்! இவ்வளவு நாட்களாக மற்றவர்களுக்காக வாழ்ந்த வாழ்க்கையை... இனி, உங்களுக்காக வாழ நினைக்கும் இந்த வயதில், அழகு மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றை மெருகேற்றுவதற்காக, செய்யவேண்டுவன பற்றி பேசுவோமா!
பொதுவாக 45 வயதில் 'ஹார்மோன் டிக்லைன்' (Hormone decline) ஏற்படும். அதாவது வயது அதிகரிக்கும்போது, நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடு குறையும். இதன் விளைவாக உடல் நலக் கோளாறுகள் உண்டாகலாம். இது இயற்கையாகவே பலருக்கும் ஏற்படக்கூடியதுதான். தகுந்த மருத்துவ ஆலோசனை பெறுவதன் மூலம் இதை எளிதில் சரிசெய்யலாம்.

ஹார்மோன் இம்பேலன்ஸ் காரணமாக சருமத்தில் 'தின்னிங்’ (தோலின் தடிமன் குறைவது) ஏற்படும். இதனால் தோலில் சுருக்கங்கள் உள்ளிட்ட தோல் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்ப்பது, சமச்சீர் உணவை எடுத்துக் கொள்வது, மனதை அமைதியாக வைத்துக் கொள்வது... போன்றவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் இப்பிரச்னையால் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
இந்த வயதில் உடல் எடை அதிகரித்தால், குறைப்பது சிரமம். எனவே, எடை விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம். 40 - 55 வயதுக்குள் எப்போது வேண்டுமானாலும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நிற்கலாம். அதற்குப் பிறகான உடல்நிலை மாற்றங்கள், 'போஸ்ட் மெனோபாஸல் சிண்ட்ரோம்’ என்றழைக்கப்படுகிறது. உடல்வாகு குறுகிப் போவது, முகத்தில் சுருக்கங்கள், சருமம் தளர்ந்து போவது, தூக்கமின்மை, நெஞ்சு எரிச்சல், வஜைனாவில் வறட்சி, இதனால் உடலுறவில் ஈடுபாடின்மை... என இந்த வயதில் பெண்களை பிரச்னைகள் படுத்தி எடுக்கும். பெண்மைத் தன்மையைத் தரக்கூடிய ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன், இந்த வயதில் குறைவதன் விளைவுதான் இவை அனைத்தும். இதுவும் இயற்கை சுழற்சியில் ஒரு கட்டம் என்பதை உணர்ந்தால், இந்தப் பிரச்னைகளை தைரியமாக எதிர்கொள்ள முடியும்!
'நாற்பது வயதுக்கு மேல் வெள்ளெழுத்து’ என்பார்கள். இந்த வயதில் பெரும்பாலான பெண்களுக்கு கண் பார்வையில் கோளாறு ஏற்படும். கண்ணாடி அணிய நேரிடும். கேட்ராக்ட் பிரச்னை ஏற்படலாம். லேசர் சர்ஜரி, கான்டாக்ட் லென்ஸ், கண்ணாடி என்று தாமதிக்காமல் பிரச்னைகளை சரிசெய்துகொள்ள வேண்டும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கண்களில் ரெட்டீனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், ஆறு மாதத்துக்கு ஒருமுறை கண்டிப்பாக கண்களை பரிசோதனை செய்துகொள்வது நல்லது. 'எப்போதும் கண்ணாடி அணிந்திருக்க வேண்டும்’ என்று மருத்துவர் சொன்னால், அதைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
நாற்பது வயதுக்கு மேல் பெண்களுக்கு கால்சியம் குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவதாலும், சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டி-யை கிரகிக்கும் ஆற்றலை சருமம் இழப்பதாலும் 'ஆஸ்டியோபொரோசிஸ்’ எனப்படும் எலும்பு நுண்துளை நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இந்தியாவில் 40% பெண்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, பால், தயிர், பனீர், கீரை, மில்க் ஷேக், தானிய வகைகள் என கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை உணவில் எடுத்துக்கொள்வது அவசியம்.
இந்நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு எலும்பு வலுவின்றி இருக்கும் என்பதால், கடினமான உடற்பயிற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. 45 வயதுக்கு மேல் வருடத்துக்கு ஒரு தடவை எலும்பு அடர்த்தியை கண்டறியும் மருத்துவ சோதனையை செய்துகொள்வது அவசியம்.
பாடி மசாஜ் எடுத்துக் கொள்வது, யோகா, தியானம், தன்னம்பிக்கையை தளரவிடாமல் பார்த்துக் கொள்வது போன்றவை இந்த வயதில் இளமையை தக்க வைத்துக்கொள்ள பெரிதும் உதவும். உடுத்தும் உடையில் கவர்ச்சியைவிட, கம்பீரமே உங்களை அழகாகக் காட்டும். மெச்சூர் டான 'டிரெஸ் சென்ஸ்’ மிகவும் அவசியம். தோற்றப் பொலிவில் மட்டுமல்லாமல்... பேச்சிலும், பொறுப்பிலும், செயலிலும் பக்குவம் அதிகரித்தால், உங்கள் அழகு தகதகவென பிரகாசிக்கும்!
- இளமை வளரும்...