ஆம்பள ஆத்துத் தண்ணி...பொம்பள ஊத்துத் தண்ணி! வடிவேலு,ஓவியம்: கண்ணா
##~## |
சின்னக் கொழந்தையா இருந்த காலந்தொட்டு, இன்னிக்கு கோடம்பாக்க 'காமெடி ராஜா'வான காலம் வரைக்கும் எவ்வளவோ கஷ்டங்களைத் தாங்கி இருக்கேன். இருந்தாலும், நா கண்ணீர்விட்டு அழுத நாட்கள வெரல விட்டு எண்ணிப்புடலாம். எதுவா இருந்தாலும், அவ்வளவு சீக்கிரத்துல எங்கண்ணுல தண்ணிய பாக்க முடியாது. ஆனா, போன வாரம் பச்சப்புள்ள மாதிரி தேம்பிட்டேன்!
எம்பொண்டாட்டி விசாலாட்சிக்கு, கர்ப்பப்பைய எடுக்க ஆபரேசன் பண்ணணும்னு சொல்லிட்டாக. மதுரை, அப்போலோ ஆஸ்பத்திரியோட சுவத்தைப் புடிச்சுக்கிட்டு விசும்பி நிக்கிறேன். எம்பொண்டாட்டிய பிரசவத்துக்கு அனுப்பினப்பக்கூட நா அப்புடி அழுதது இல்ல. ஆபரேசன் தியேட்டருக்குள்ள போகப்போற நெலையில, எங்கைய கெட்டியா புடிக்கிறா. 'தெய்வமே... இவளை பத்திரமா திருப்பிக் கொடு’னு மனசு கெடந்து தவிக்குது. சுத்தி இருந்த ஒறவுக்காரவுக எல்லாரும், ''என்ன வடிவேலு... நீ என்ன சின்னப் புள்ளையா...''னு தேத்துறாக.
எம்பொண்டாட்டி யோட மொகத்த பாக்குறேன். 'ஒண்ணும் ஆகாதுய்யா’னு சொல்ற மாதிரி அவ அனுசரணையா தலையாட்டுறா. லலிதாங்கிற டாக்டரம்மாகிட்ட, ''எம்புருசன் எனக்காக அழுவுறதப் பாருங்க''னு சொல்றா. அதக் கேட்கையில எனக்கு இன்னும் அழுகையாகிடுச்சு. அந்த மகராசி டாக்டரம்மா எம்மனைவியோட கண்ணீரை தொடைச்சு விட்டாக. லட்சுமிகரமான அந்தத் தாயி, ''ஊரையே சிரிக்க வைக்கிற மனுஷன்... இப்புடி அழலாமா? நா ஒரு டாக்டரு... என் வயித்துலயே எத்தனை ஆபரேசன் செஞ்சுருக்காங்க தெரியுமா? மருத்துவமும் அறிவியலும் எவ்வளவோ வளந்திடுச்சு. இந்த காலத்துல போயி கர்ப்பப்பை ஆபரேசனுக்கு எல்லாம் பயப்படலாமா?''னு சொன்னதுக்கு அப்புறந்தேன், கொஞ்சம்போல தைரியமே வந்துச்சு.

சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டுறவங்ககூட, நிக்க நேரம் இல்லாம ஓடுற இந்த காலத்துல, அந்த டாக்டரம்மா தன்னோட வேதனையையே எங்களுக்கு ஆறுதலா சொல்லி, மனசைத் தேத்தினத... எந்த வார்த்தையச் சொல்லி பாராட்டுறது? எம்பொண்டாட்டி தைரியமா அந்த ஆபரேசனை செய்துகிட்டு வெளியே வந்ததுக்கு அந்த டாக்டரம்மாவோட ஆறுதல்தேன் காரணம்.
வயித்துல தையலோட வெளிய வந்த எந்தங்கத்தைப் பார்த்த ஒடனே மறுபடியும் கண்ணுல தண்ணி கட்டிக்கிச்சு. நமக்காக ஊரு ஒலகமே ஒண்ணு சேந்து நின்னாலும், உசுரக் கொடுக்குற சக்தியா இருக்குறது பொண்டாட்டி மட்டுந்தேன். ஒரு நிமிஷம் நான் சொணங்கினாலும், என்னாச்சோ ஏதாச்சோனு பதறிடுவா அவ. தைலத்தை தேய்ப்பா... கசாயம் வெச்சுக் கொடுப்பா... துன்னூறு பூசுவா... மொகத்துல மலர்ச்சியப் பாக்குற வரைக்கும் வகவகயா ஏதாச்சும் செஞ்சுக்கிட்டே இருப்பா. மனைவிங்கிற பந்தம் நம்ம ஒடம்புல இருந்து ஒருபுடி சதைய எடுத்துச் செஞ்ச உருவம் மாதிரி. நமக்கு நடுங்குனா அங்கேயும் நடுங்கும். நமக்கு உற்சாகம்னா அங்கேயும் ஆறா பொங்கும்!
நெழல் மாதிரி நின்ன வீட்டம்மா, கண்ணக்கூடத் தொறக்காம படுக்க வசமா கடந்து போறதைப் பார்த்து ஆசுபத்திரி சுவத்துல மறுபடியும் சாய்ஞ்சுட்டேன். ''கர்ப்பப்பையை எடுக்கறது பெரிய பிரச்னை இல்லண்ணே... எங்க வூட்டுக்கார அம்மாவுக்கு மூணு வருசத்துக்கு முன்னாலேயே எடுத்தாச்சுண்ணே''னு எங்க அம்மா வழி ஒறவுக்காரர் ஒருத்தர் ஆறுதல் சொன்னாரு. கூடவே, எம்பங்காளி ஒருத்தன், ''எம்பொண்டாட்டிக்கு அதை எடுத்து ஆறு வருசம் ஆச்சு''னு ஏதோ படம் எடுத்த மாதிரி பெருமையா சொல்றான்.
குறிப்பிட்ட வயசுக்கு அப்புறம் கர்ப்பப்பைய எடுக்குறதுனால பிரச்னை இல்லனு பலரும் சொன்னாலும், எனக்கென்னமோ கர்ப்பப்பைய எடுக்குற விசயத்த அவ்வளவு சீக்கிரம் தாங்கிக்க முடியல. கர்ப்பப்பைய ஒரு உறுப்பா மட்டும் நான் பாக்கல தாயிகளா... எந்தங்கங்களைச் சொமந்த தங்க மாளிகை அது. என்னோட சந்ததிக பத்து மாசம் பத்திரமா இருந்த கோயிலு அது. பரம்பரை வீடு சேதாரமாப் போனாலும், அதை இடிக்க மனசு வராம அழுவுறவன் மாதிரிதேன், எம்பொண்டாட்டியோட கர்ப்பப்பைய நீக்கணும்னு சொன்னப்ப நான் அழுதேன்.
கர்ப்பப்பைய நீக்குற காரியம் இன்னிக்கு சர்வசாதாரணமா நடக்குது. ஆனா, கர்ப்பப்பை ஏன் சீக்குக்கு ஆளாகுதுனு யோசிக்கத் தவறிட்டோம். ஒவ்வொரு பொண்ணையும் சுமைதாங்கியா பெருமிதப்படுத்துற அந்த பொக்கிசம், இவ்வளவு சர்வ சாதாரணமா கெட்டுப்போக விடலாமா தாயபுள்ளைகளா?
எங்க காலத்துல எல்லாம் பொண்ணுக வயசுக்கு வந்திருச்சுகனா... கேப்பக்களி, கம்பங்களி, வெந்தயக்களினு வெதவெதமா களி செஞ்சு கொடுப்பாக. பதினாறு நாளைக்கு பச்ச முட்டைகளை ஒடைச்சுக் கொடுப்பாக. எள்ளுல பலகாரஞ் செஞ்சு கொடுப்பாக. தெனம் ஒரு கீரைனு முருங்கக் கீரை தொடங்கி, குறிஞ்சா கீரை வரைக்கும் செஞ்சு கொடுப்பாக. ஆம்பள புள்ளைகதேன் ஒசத்தினு வளர்த்த அந்த காலத்துலேயே, பொண்ணுகளை ஏன் இம்புட்டு செரத்த எடுத்து கவனிக்கணும்? எதையுந் தாங்குற பக்குவத்தோட பொண்ணுக ஒடம்பு இருக்கணும் அப்படிங்கறதுக்காகத்தேன்.
இன்னிய காலத்துல பொண்ணுக வயசுக்கு வந்தா என்ன பண்றோம்? சுவீட்டு, பிஸ்கட்டு, கேக்குனு வாயிலகூட நொழையாத பண்டங்கள எல்லாம் வாங்கிக் கொடுத்து கடமைய முடிச்சுக்குறோம். எந்தச் சத்தும் இல்லாத இந்த சக்கைகளை சாப்புட்டா... எப்புடி ஒடம்புக்கு வலு வரும்? அதனாலதேன் ஒரு புள்ளைய பெத்த ஒடனேயே 'கர்ப்பப்பை பலம் இல்ல... ஒடனே எடுக்கணும்’னு டாக்டருங்க சொல்றாக. பத்து புள்ள, பதினாறு புள்ளைகன்னு மெசினு மாதிரி பெத்துப் போட்ட ஆத்தா, அப்பத்தாவுக்கு எல்லாம் கர்ப்பப்பை ஸ்ட்ராங்கா இருக்குறப்ப, இப்ப உள்ள எளந்தாரிகளுக்கு மட்டும் எப்புடி வலுவா இல்லாம போயிடுது?
என்னயப் பெத்த தாயபுள்ளைகளா... ஆம்பளங்கிறவன் ஆத்துத் தண்ணி மாதிரி. இஷ்டத்துக்குப் போயி, எங்கெங்கேயோ பாய்ஞ்சி, கடல்ல போயி கலந்துடுவான். பொண்ணா பொறந்தவ அப்புடி இல்ல. அவ ஊத்துத் தண்ணி மாதிரி. ஒவ்வொரு சொட்டா சொரந்தாலும், நாலு பேரோட தாகத்த தீத்து, பொறுமையா, பக்குவமா தன்னோட பாதையத் தீர்மானிக்கிறவ. அவளுக்கு ஒரு பிரச்னைனா, அவள சாந்து இருக்குற மொத்தக் குடும்பத்துக்கே அது பிரச்னைதேன். இன்னொரு உசுரை சொமக்க கடமைப்பட்ட எந்தாயபுள்ளைகளா... வயித்துல இருக்குற புள்ளயக் காப்பாத்த எப்புடிப் பத்து மாசமும் பத்தியம் இருக்குற கணக்கா கவனமாவும், எச்சரிக்கையாவும் இருக்கீங்களோ... அதே மாதிரி ஒங்க ஒடம்பப் பாத்துக்குறதுலயும் உஷாரா இருங்க. எம்பொண்டாட்டி பக்கத்துல மனசு கனத்து ஒக்காந்தபடி சொல்றேன்... ஒங்க ஒடம்ப பத்திரமா பாத்துக்கங்க எந்தங்கங்களா..!
- நெறய்ய பேசுவோம்...