ஸ்பெஷல் 2
ரெகுலர்
ஸ்பெஷல் 1
Published:Updated:

சிட்டி டு பட்டி...பசுமை கனவை நிஜமாக்கிய அபிதா !

கோவிந்த் பழனிச்சாமிபடங்கள்: தி.விஜய்

##~##

அபிதா... அல்ட்ரா மாடர்ன் சென்னைப் பெண். பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் மெட்ரோ சிட்டியில். மருந்துக்குக்கூட கிராமத்து மண்ணை மிதிக்காத அவர் வாழ்க்கையில் ஒரு திருப்பம். ஒரு கிராமத்து விவசாயிக்கு வாழ்க்கைப்பட்டு, அபிதா ஸ்ரீராம் என்றான அந்தப் பட்டதாரி, இன்று ஊர் மெச்சும் ஓர் இயற்கை விவசாயி!

இதுமட்டுமா... 'அக்ரி பிஸினஸ்' பெண்மணியாகவும் வடிவெடுத்திருக்கும் இந்தப் பெண்... மண்புழு உரம், இயற்கை பால், வெள்ளாடு வளர்ப்பு... என கணிசமாக லாபமும் ஈட்டி வருகிறார்!  

''அப்பா ஜெயராமன், வங்கி மேலாளர். வீட்டுக்கு நான் ஒரே பொண்ணு. சென்னை, வைஷ்ணவா கல்லூரியில பி.எஸ்சி, கெமிஸ்ட்ரி படிச்சேன். திருமண வயது வந்தப்போ, மெட்ரோ சிட்டிகள்ல மாத சம்பளம் வாங்கற வரன்கள்தான் வந்தது. எனக்கோ கிராமத்துக்குக் கல்யாணமாகிப் போகணும்னு ஆசை. சின்ன வயசுல இருந்தே கிராமங்கள் மேல எனக்கு ஒரு ஈர்ப்பு. அதுக்குக் காரணம், என் தாத்தா (அப்பாவின் அப்பா). அவர்... பழம்பெரும் தமிழ் எழுத்தாளர் லா.ச.ராமாமிர்தம். இருபதுக்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதி இருக்கார். 'அபிதா’ங்கிற என் பேர்கூட, அவர் எழுதின புகழ்பெற்ற நாவலோட தலைப்புதான்.

சிட்டி டு பட்டி...பசுமை கனவை நிஜமாக்கிய அபிதா !

தாத்தாவோட படைப்புகள்ல வரும் கிராமங்கள், அங்குள்ள ஆறு, குளம், வயல்வெளிகள்ல எல்லாத்துலயும் எழுத்துகள்லயே நான் வாழ்ந்திருக்கேன். அப்படியரு அழகான கிராமத்துல வாழணும்னு 'தீராநதி’ போல ஒரு கனவு மனசுல ஓடிட்டே இருந்தது. அப்போதான்... 'சத்தியமங்கலம் பக்கமிருக்கற கிராமத்து விவசாயி'னு ஒரு வரன் வந்துச்சு. 'இவரை கல்யாணம் செஞ்சா... ஆயுளுக்கும் கிராமத்துலதான் நீ வாழணும்’னு எல்லாரும் பயமுறுத்தினாங்க. ஆனா, அதுக்காகவே காத்துட்டு இருந்த நான், 'டபுள் ஓ.கே’ சொன்னேன்.

2003-ம் வருஷம் எங்க கல்யாணம் நடந்துச்சு. சத்தியமங்கலம் வந்து பார்த்தா... பவானி ஆறு, குளிர்க்காற்று வீசும் மலைச்சாரல், பச்சை வயல்வெளிகள், வெள்ளந்தி மனிதர்கள்னு நான் கனவு கண்ட வாழ்க்கை கிடைச்சுடுச்சு. என் கணவர் குடும்பத்துக்கிட்ட ஆர்வமா விவசாய வேலைகள் கத்துக்கிட்டு, அவங்களோட சேர்ந்து சந்தோஷமா வரப்புல இறங்கிட்டேன். எங்க குடும்பத்துக்கு 20 ஏக்கர் நஞ்சை நிலம் இருக்கு. அதுல நெல், கரும்பு, மஞ்சள்னு பயிர் செய்றோம். நாட்டு மாடு, வெள்ளாடுனு கால்நடைகளையும் வளர்க்கிறோம்'' என்று சொல்லும்போது பெருமை தாளவில்லை அபிதாவுக்கு!

சிட்டி டு பட்டி...பசுமை கனவை நிஜமாக்கிய அபிதா !

இந்த விவசாயத்தை, வழக்க மான பாணியிலேயே நகர்த்தா மல், வெற்றிப் பாதைக்கு இழுத்துச் சென்றதோடு, 'பிஸினஸ் உமன்' என்று வடிவெடுத்ததையும் பற்றி தொடர்ந்த அபிதா, ''படிப்பறிவையும், இந்த கிராமத்துக்காரங்களோட பட்டறிவையும் இணைச்சு விவசாயம் பண்ணினா... அது மேலும் பெரிய வெற்றியா அமையும்னு எனக்கு நம்பிக்கை. அதனால அரசாங்கம் மற்றும் தனியார் கொடுக்கற விவசாய பயிற்சிகள்ல தவறாம கலந்து பயிற்சி எடுத்தேன். ஒருமுறை நம்மாழ்வார் ஐயாவோட இயற்கை விவசாய கருத்தரங்குல கலந்துக்கிட்டேன். அதிலிருந்து இயற்கை விவசாயம் மேல பெரிய மரியாதை வந்துடுச்சு. ரசாயன விவசாயத்தை எல்லாம் தூக்கி எறிஞ்சுட்டு, எங்க தோட்டத்துல இயற்கை விவசாயத்தை உடனடியா புகுத்தினேன். வீட்டுல உள்ளவங்களும் அதுக்குப் பச்சைக் கொடி காட்டினாங்க.

இயற்கையின் உன்னதம் சொல்லும் 'பசுமை விகடன்'ல சுபாஷ் பாலேக்கரோட 'ஜீரோ பட்ஜெட்’ இயற்கை விவசாயத்தை அறிமுகம் செய்திருந்தாங்க. அவரோட பயிற்சியை ஈரோட்டுல நடத்தினாங்க. நான் ரோட்டரி சங்க முக்கியப் பொறுப்புல இருக்கற தால, கடந்த வருஷம் ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்பை சத்திய மங்கலத்தில் நடத்தினோம். நானும் அதுல பயிற்சி எடுத்துக்கிட் டேன். அவர்

சிட்டி டு பட்டி...பசுமை கனவை நிஜமாக்கிய அபிதா !

உருவாக்கின ஜீவாமிர்தம், அக்னி அஸ்திரம், பஞ்ச கவ்யா போன்ற இயற்கை இடுபொருட்களைத்தான் இப்ப எங்க தோட்டத்து பயிர்களுக்கெல்லாம் கொடுக்கிறேன். இதை எல்   லாம் எப்படி  தயாரிக்கறதுனு எங்க தோட்டத்து வேலை ஆட்களுக்கு நானே சொல்லிக் கொடுக்கிறேன்.

மண்புழு உரம் தயாரிச்சு விற்பனை செய்றேன். நாங்க உற்பத்தி செய்யுற பால், முழுக்க முழுக்க இயற்கையான பால்ங்கறதால... அதுக்கு தனி மரியாதையே இருக்கு. அதேபோல, வெள்ளாடுகளை நல்லா வளர்த்து குட்டிகளா விற்பனை பண்றேன். தினமும் வயலுக்குப் போய் நடவு, களை, அறுவடைனு எல்லா வேலையும் செய்வேன். மாட்டுத் தொழுவத்துல போய் மாடுகளுக்குத் தீனி போடுறது, சாணம் அள்ளி எருக்குழியில் கொட்டுறது, கோஜலம் சேமிக்கறதுனு இந்த பட்டதாரியோட பொழுது சந்தோஷமா போகுது.

வீட்டு வேலை போக மற்ற நேரங்கள்ல வயல்லதான் ஆளோட ஆளா நிப்பேன். அவங்க பாடற நாட்டுப்புறப் பாடல்களை அவங்க குரல்லயே சேகரிச்சும் வைக்கிறேன். கேட்குறீங்களா..?''

- ஸ்விட்சை ஆன் செய்கிறார் அபிதா.

ஆத்தோரம் கெணறு வெட்டி
ஆலம்பாடி காளை பூட்டி  
அத்தை மவன் எறைக்கும் தண்ணீ
அத்தனையும் சக்கரைதான்!

- காற்றில் மிதந்து காதில் இனிக்கிறது பாடல்!

உரம் ரூ. 40,000... பால் ரூ.1,82,000... வெள்ளாடு ரூ..40,000 அபிதா சொல்லும் லாபக் கணக்கு

மண்புழு உரம், இயற்கை பால் மற்றும் வெள்ளாடு என்று பிஸினஸ் செய்துவரும் அபிதா, அதன் வரவு-செலவு பற்றி பேசும்போது, ''விவசாய வல்லுநர் 'சத்தியமங்கலம்' சுந்தரராமன்கிட்டதான் மண்புழு உரத்தயாரிப்பு, விற்பனை தொடர்பான நுணுக்கங்களை ஒரு மாசத்துக்கு பயிற்சி எடுத்துக் கிட்டேன். உடனடியா உற்பத்தியையும் தொடங்கிட்டேன். முழுக்க எங்க தொழுவத் துல இருக்கற பசுமாடுகளோட சாணத்தைப் பயன்படுத்திதான் மண்புழு உரம் தயாரிக்கிறேன். வருஷத்துக்கு 20 டன் உரம் கிடைக்கும். கிலோ மூணு ரூபாய் வீதம் விலைபோகும். உற்பத்தி செலவு, ஆள் கூலி இதுக்கு 20 ஆயிரம் ரூபாய் செலவாகிடும். மீதி 40 ஆயிரம் ரூபாய் லாபக் கணக்குல சேர்ந்துடும்.

 எங்கள் தொழுவத்துல இருக்கற ஆறு கறவை மாடு மூலமா... தினமும் கிடைக்கற பால்ல, வீட்டுத் தேவைக்கு போக, 50 லிட்டர் கூடுதலாக இருக்கும். ஒரு லிட்டர் 19 ரூபாய்னு அக்கம்பக்க வீடுகளுக்கு கொடுக்கிறேன். இதன் மூலம் தினமும் 950 ரூபாய் கிடைக்கும். ஒரு மாட்டுக்கு ஒரு நாள் செலவு... 75 ரூபாய். ஆறு மாட்டுக்கும் 450 ரூபாய் போக, 500 ரூபாய் தினமும் லாபம். வருஷத்துக்கு கணக்குப் போட்டா... 1 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் வரும்.

இதுபோக 20 வெள்ளாடு மூலம் வருஷத்துக்கு குறைந்தபட்சம் 30 குட்டிங்க கிடைக்குது. ஒரு குட்டி 2,000 ரூபாய்னு விலை போனாலும், 60 ஆயிரம் ரூபாய் வந்துடும். செலவு 20 ஆயிரம் ரூபாய் போக, 40 ஆயிரம் கையில நிக்கும். இத்தனைக்கும் வீட்டு வேலைகளை எல்லாம் பார்த்தபிறகு, கிடைச்ச நேரத்துலதான் வயலுக்கு போய் விவசாயம் பண்றேன். இதன் மூலமாவே பல ஆயிரம் லாபமா கிடைக்குது'' என்று குஷியாக பேசியபடி மாடுகளுக்கு வைக்கோலை அள்ளிப்போட்டார், அசல் கிராமத்து விவசாயியாக மாறிவிட்ட 'சிட்டி'ப் பெண் அபிதா!