ஸ்பெஷல் 2
ரெகுலர்
ஸ்பெஷல் 1
Published:Updated:

முத்துச்சிப்பியை முழுமையாக காப்போம்..!

ரேவதி ,படம்: சொ.பாலசுப்ரமணியன்

##~##

பெண்களுக்கு மறுபிறவியான பேறுகாலம், 'பல பக்கவிளைவுகளைக் கொடுக்கும் சிசேரியனாக இல்லாமல், சுகப்பிரசவமாக முடிந்துவிட வேண்டும்' என்பதுதான் அனைவரும் விரும்புவது, வேண்டுவது!

''ஆனால், சுகப்பிரசவத்துக்கு பின்பும் சில பிரச்னைகள் உண்டு. பேறுகாலத்துக்குப் பிறகு உடலை சரிவர கவனிக்காமல் விட்டால், ஏற்படும் பக்கவிளைவுகளில் கருப்பை இறக்கமும் மிகமுக்கியமான ஒன்று'' என்று எச்சரிக்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஷமீம் அக்தர்.

''சுகப்பிரசவத்தின்போது வெகுநேரம் பிரசவ வலியுடனேயே இருப்பது, பிரசவம் மிகச்சிரமமாக அமைவது, ஆயுதம் போட்டுக் குழந்தை எடுக்கப்படுவது, போதிய இடைவெளி இன்றி அதிக குழந்தைகளை பெறுவது, பிரசவம் முடிந்து ஓய்வில்லாமல் போவது, அதிக எடை தூக்குவது, உடம்பை வருத்தி கடினமான வேலைகளைச் செய்வது போன்ற காரணங்களால் இடுப்பெலும்பு தசைகள் தளர்ந்துவிடும். இதனால், கருப்பை தன் இடத்திலிருந்து கீழே இறங்கிவிடக் கூடிய ஆபத்து அதிகம்!

கருப்பை இறங்கும்போது, அதன் அருகில் இருக்கும் சிறுநீரகப் பை மற்றும் மலப்பையையும் சேர்த்து இழுக்கும். சிறுநீர்ப் பையை இழுக்க ஆரம்பித்தவுடன், அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற உணர்வும், முழுமையாக சிறுநீரை வெளியேற்றாதது போன்ற உணர்வும் ஏற்படும். இதனால் நோய்த் தொற்று ஏற்பட்டு, சிறுநீரகம் பாதிக்கப்படலாம். அதேபோல் மலப்பை இறக்கத்தினாலும் பிரச்னைகள் ஏற்படலாம். இவை எல்லாவற்றுக்குமே கருப்பை பிடிமானமானது, வலுவில்லாமல் போவதுதான் காரணம்.

முத்துச்சிப்பியை முழுமையாக காப்போம்..!

கருப்பை, உள்ளுக்குள் இருக்கும்வரை ஈரப்பதத்துடன் இருக்கும். வெளியில் இறங்க ஆரம்பித்தவுடன், ஈரப்பதம் குறையத்தொடங்கும். இதனால் நோய்த்தொற்று ஏற்பட்டு, நடப்பதற்கே சிரமம் நேரலாம். அல்சர் வரலாம். கவனிக்காமல் விட்டால், கேன்சருக்கும் வழிவகுத்துவிடும்'' என்று அதிர்ச்சி செய்தி சொன்ன டாக்டர், இப்பிரச்னைக்கு இலக்கானவர்கள்; இதற்கான அறிகுறிகள் பற்றியெல்லாம் பேசினார்.

''40 வயதைக் கடந்த பெண்கள், ஈஸ்ட்ரோஜன் குறைந்து மெனோபாஸ் நிலையை அடைபவர்கள், பிரசவத்தின்போது ஆயுதம் உபயோகப்படுத்தப்பட்டவர்கள், அதிக எடை உள்ளவர்கள், ஆஸ்துமா போன்ற நுரையீரல் கோளாறு காரணமாக வயிற்றை எக்கிக் கொண்டு தொடர்ந்து இருமுபவர்கள், அடிவயிற்றில் கட்டி போன்ற பிரச்னை இருப்பவர்கள்... இவர்களுக்கெல்லாம் கருப்பை இறங்க அதிக வாய்ப்பு உள்ளது. தாய்மார்களுக்கு மட்டுமல்ல... பரம்பரையாகவே உடலில் உள்ள திசுக்கள் பலவீனமாக இருக்கும் திருமணமாகாத, குழந்தை பெறாத பெண்களுக்கும் கருப்பை இறங்கலாம்.

சிலருக்கு ஆரம்பத்தில் எந்தவித அறிகுறியும் தெரியாமல் இருக்கும். ஆனால், பிரச்னை அதிகரிக்கும்போது அடி வயிற்றிலிருந்து கட்டி இறங்குவதுபோன்று இருக்கும். முதுகில், இடுப்புக்குக் கீழ் பகுதியில் வலி ஏற்படும். இடுப்புத் தசைப் பகுதியில் ஒருவித அழுத்தம் இருக்கும். நின்று வேலைகளைச் செய்யும்போது அதிகமாகவும், படுத்திருக்கும்போது குறைவாகவும் வலி இருக்கும். அடுத்து, புறத்தோற்றத்திலும் பிரச்னைகள் தென்படும். கருப்பையே மொத்தமாக வெளியில் வருவதையும் உணர முடியும். இதனால், சிறுநீரகப் பை, மலப்பை இறங்கி ஒருவித அழுத்தத்தைக் கொடுக்கும். இது என்னவென்றே தெரியாமல், அதை உள்ளே தள்ளிவிடுவார்கள் பலரும். இதனால், நோய்த் தொற்று ஏற்பட்டு வலியின் வீரியம் அதிகமாகும்போதுதான் மருத்துவரைச் சந்திக்கவே வருவார்கள்'' என்ற டாக்டர், இதற்கான சிகிச்சை முறைகளைப் பட்டியலிட்டார்.

''கருப்பையை உள்ளே தள்ளி 'ரிங் பெசரி’ என்கிற வளையத்தை உள்ளே நிறுத்தி வைப்போம். இது பழங்கால சிகிச்சை முறைதான். என்றாலும், ஆபரேஷன் செய்துகொள்ள முடியாத அளவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம். இவ்வளையத்தை பொருத்திக் கொண்டவர்கள் மூன்று மாதத்துக்கு ஒருமுறை, வளையத்தை மாற்றிக் கொள்வதும், பரிசோதித்துக் கொள்வதும் மிகவும் அவசியம்.

முத்துச்சிப்பியை முழுமையாக காப்போம்..!

லேப்ராஸ்கோபி சிகிச்சை மூலம் பலவீனமான தசைகளை இறுக்கி, வலை மாதிரியான ஒன்றின் முனையை கருப்பையின் பின் பக்கத்திலும், இன்னொரு முனையை இடுப்பெலும்புடனும் சேர்த்துத் தைத்துவிடலாம். இதனால் கருப்பை தன்னுடைய இயல்பான இடத்துக்கே வந்துவிடும். இந்த ஆபரேஷனின்போது சிறுநீர்ப்பை, மலப்பைகளையும் சேர்த்து தூக்கி வைத்துத் தைக்க வேண்டியிருக்கும். பிரச்னை முற்றும்வரை மருத்துவரிடம் செல்லவில்லை என்றால், கடைசி கட்டமாக கருப்பையை அகற்ற வேண்டியிருக்கும்'' என்று எச்சரிக்கை கொடுத்தார் டாக்டர்.

நிறைவாக, இப்பிரச்னை வராமல் தடுப்ப தற்கான சாத்திய வழிகள் பற்றி பேசியவர், ''கடின பிரசவத்தின்போதும், பிரசவத்தில் ஆயுதம் பயன்படுத்தும்போதும் இடுப்பு எலும்புப் பகுதியில் உள்ள தசைகள் சிதைய வாய்ப்பு உண்டு. இதைத் தடுக்க 'எபிசோடமி' (Episiotomy) எனப்படும் எளிய சிகிச்சை முறை வழக்கத்தில் இருக்கிறது. இச்சிகிச்சை பெற்றவர்கள்... அதிக எடை தூக்கக் கூடாது. கடினமான வேலைகளைச் செய்யக் கூடாது. அதிக ஓய்வு தேவை 'கெஜல்ஸ்’ என்கிற உடற்பயிற்சி (KEGELS EXERCISE) செய்ய வேண்டும். அதாவது, நின்றோ, உட்கார்ந்தோ, படுத்தபடியோ அடிவயிற்றை இழுத்துப் பிடித்து (சிறுநீரை கட்டுப்படுத்துவதுபோல்), 10 நொடிகள் நிறுத்தி, பின் அடிவயிற்றை விட வேண்டும். இது மிகமிக எளிதான ஒன்று. இப்பயிற்சியை தினமும் ஐம்பது முறை செய்து வந்தால், தசைகள் நன்றாக இறுகும்'' என்று ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டி விடைகொடுத்தார்!  

முத்துக்களைப் பெற்றெடுத்த சிப்பி, கருப்பை. அது சேதமாகாமல் பார்த்துக் கொள்வோம் அக்கறையுடன்!