ப்ளஸ் டூ பெண்ணின் பிரமாத பிஸினஸ்பானுமதி அருணாசலம்படங்கள் : ச.இரா.ஸ்ரீதர்
##~## |
சென்னையில் சில ஆயிரங்கள் சம்பாதிப்பதற்கே இளங்கலை, முதுகலை என பல டிகிரிகளும், நுனிநாக்கு ஆங்கிலமும் தேவை என்று பலரும் பின்வாங்கும் இந்தக் காலத்தில், பன்னிரண்டாம் வகுப்பு வரை மட்டுமே, தமிழ் மீடியத்தில் படித்த விமலா... இன்று வெற்றிகரமாக பிஸினஸ் செய்து கொண்டிருக்கிறார் இந்த மெட்ரோபாலிட்டன் சிட்டியில்! இவர் ஈடுபட்டிருப்பது... ஆண்களே சவாலாக நினைக்கும்... பழைய கார் பிஸினஸில்தான்!
தினம் தினம் பிரச்னைகளுடன் பயணித்தாலும், தன் திறமையால் ஜெயித்துக் கொண்டிருக்கும் விமலாவை, நங்கநல்லூரில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தோம்.
''சொந்த ஊர், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பக்கத்துல சின்ன கிராமம். வீட்டுல நான் அஞ்சாவது பொண்ணு. ப்ளஸ் டூ முடிச்சதும், மாமா பையனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்தாங்க. அவர்கூட சென்னைக்கு வந்தப்போ... சின்னதா ஒரு வீடு மட்டும்தான் சொந்தமா இருந்துச்சு. போர்ட்டபிள் டி.வி- தான் அந்த வீட்டுலயே விலை உயர்ந்த பொருள்!
பேங்க்ல கிளார்க்கா வேலை பார்த்தார் கணவர். குடும்பப் பொறுப்புகளைப் பகிர்ந்துக்க நினைச்ச நான், குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்த பிறகு வேலைக்குப் போகலாம்னு முடிவெடுத்தேன். வீட்டுக்குப் பக்கத்துல இருந்த பழைய கார்களை வாங்கி விற்கிற நிறுவனத்துல வேலைக்குச் சேர்ந்தேன். அந்தத் தொழில்ல உள்ள அத்தனை பொறுப்புகளையும் விரும்பி, ஏத்துக்கிட்டு செய்தேன். என் திறமையைப் பார்த்து கம்பெனியில் என்னோட சம்பளத்தை படிப்படியா உயர்த்தினாங்க. அஞ்சு வருஷத்துல மாசம் 18 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வாங்கற அளவுக்கு முன்னேறினேன். டிகிரி முடிச்சவங்க எல்லாம் வேலை கிடைக்காம திணறிட்டு இருந்தப்போ, ப்ளஸ் டூ மட்டுமே படிச்ச நான் இந்த அளவுக்கு சம்பளம் வாங்கினது, என் மேலயே எனக்கே மரியாதையையும் நம்பிக்கையையும் ஏற்படுத்திச்சு.

ஒரு கட்டத்துல... 'இந்தத் தொழிலோட அத்தனை நுணுக்கங்களையும் கத்துக்கிட்டோம்... ஏன் நாமளே சொந்தமா இந்த பிஸினஸை எடுத்துச் செய்யக்கூடாது?’னு தோணுச்சு. என் நண்பர் ஒருவரோட... பார்ட்னர்ஷிப் முறையில் பிஸினஸை துவங்கினேன். பழைய காரை, விற்கிறவர்... அதை வாங்கறவர் ரெண்டு தரப்பையும் திருப்தி செய்றதன் மூலமாத்தான் நமக்கான லாபம் கிடைக்கும். லாபம் மட்டுமில்லாம, நஷ்டம் ஏற்படவும் வாய்ப்புள்ள தொழில்தான் இதுவும். அதனால... பொருளாதார ரீதியா சூழலைச் சமாளிக்கறதுக்காக... கார் விற்கும்போது கிடைக்குற லாபத்துல 2% பணத்தை, தனியாக வங்கி கணக்கில் சேமிச்சுடுவேன். நஷ்டம் ஏற்படலைனா.. அப்படியே பிஸினஸ் வளர்ச்சிக்கு அந்தப் பணத்தை செலவழிச்சுடுவேன்.
பிஸினஸ் தொடங்கி, இப்ப ரெண்டு வருஷம் ஆகுது. ஒரு மாசத்துக்கு அதிகபட்சம் 20 கார் வரை விற்கிறோம். ஒரு காருக்கு, அதிகபட்சமா பத்தாயிரம் ரூபாய் வரைக்கும் கமிஷன் கிடைக்கும். லாபக் கணக்கை நீங்களே யூகிச்சுக்கலாம்'' என்று சொல்லி பெருமிதப் புன்னகையை இழையோடவிட்ட விமலா,

''இனி வர்ற நாட்கள்ல, இந்த லாபத்தை இன்னும் அதிகமாக்கறதுக்காக உழைக்கணும். அந்த உழைப்புதானே எங்களோட வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியிருக்கு! எங்க வீட்டுக்குப் பக்கத்துலயே இப்போ ஒரு புது வீடு கட்டி வாடகைக்கு விட்டிருக்கோம். சின்ன டி.வி. மட்டுமே இருந்த எங்க வீட்டுல... இப்போ ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏ.சி, சோபா செட், கம்ப்யூட்டர்னு சகல வசதிகளும் வந்திருக்கு. கணவர் உழைச்சாலும், குடும்பப் பொறுப்பை பகிர்ந்துக்க நானும் பிஸினஸ்ல இறங்கினதுக்கு கிடைச்ச பரிசுதான் இதெல்லாம். எவ்வளவு வருமானம் வந்தாலும் அதை முறையா சேமிக்கறதுலதான் இருக்கு வாழ்க்கையோட வெற்றி.
தைரியமும், சுதந்திரமும் தேவைப்படுற இந்த பிஸினஸ்ல, நான் துணிஞ்சு இறங்கத் துணையா இருக்கிறவர் என் கணவர்தான். குழந்தைகள பார்த்துக்கிற என் மாமியாரும், வீட்டைப் பத்தின கவலை இல்லாம தொழில்ல நான் கவனம் செலுத்தறதுக்கு முக்கிய காரணம்'' என்று நன்றி சொன்னார்.
நிறைவாக, ''ஒரு குக்கிராமத்துல, தமிழ் மீடியத்துல படிச்ச நான்... 'நமக்கு இங்கிலீஷ் வராது'னு வீட்டுலயே முடங்கிடாம இருந்ததாலதான், இன்னிக்கு பலதரப்பட்ட கஸ்டமர்களோடயும் சரளமா இங்கிலீஷ்ல பேசற வித்தையையும் இந்த வாழ்க்கை எனக்குக் கத்துக் கொடுத்திருக்கு. என் 'வி.கே.எம். கார்ஸ்’ நிறுவனத்தை இன்னும் பெருசா கொண்டு வரணும். ஆன் தி வே!''
- நிச்சய நம்பிக்கையுடன் சிரிக்கிறார் விமலா!