ஸ்பெஷல் 2
ரெகுலர்
ஸ்பெஷல் 1
Published:Updated:

ரொமான்ஸ் ரகசியங்கள் !

டாக்டர் ஷாலினி

##~##

அன்டார்டிகா பென்குவின், ரொம்பவே கஷ்டமான சூழலில்   வாழ்கிறது. அதனால் குட்டியை வளர்க்க இரண்டு பெற்றோரும் இணைந்தே இருக்க வேண்டிய அவசியம் வருகிறது. இந்த மனிதர்களுக்கு அப்படி ஒன்றும் கஷ்ட ஜீவனம் இல்லையே... இரண்டு பெற்றோரும் இணைந்தேதான்  இருக்க வேண்டுமா? அதுவும் இவ்வளவு பந்தம், பாசம் என்று ரொமான்டிக்காக பின்னிப் பிணைந்துதான் இருக்க வேண்டுமா?

இந்த 21-ம் நூற்றாண்டு மனிதர்கள், 'கஷ்ட ஜீவனமா, அப்படினா என்ன?’ என்று கேட்கும் அளவுக்கு செல்வத்திலும், வசதிகளிலும் சுகவாசிகளாக இருக்கலாம். ஆனால், சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன், ஆப்பிரிக்க புல்வெளியில் அரை குரங்காக மனிதர்கள் வாழ்ந்தபோது, உண்மையிலேயே 'பிழைப்பு' என்பது பெரும் சவாலாகத்தான் இருந்தது.

வேறு எந்தக் குரங்குக்கும் இல்லாத அதிசயமாக, மனிதர்களுக்கு மட்டும் உடம்பில் அவ்வளவாக முடியே இல்லை. அதனால், மனிதக் குட்டி, மற்ற குரங்குக் குட்டியைப் போல, அம்மாவின் அடர்ந்த முடியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தொங்க முடியாது. குட்டியை கட்டிக் கொண்டு மற்ற குரங்குகளைப்போல மனிதப் பெண்ணாலும் வேட்டையாட முடியாது. அதுமட்டுமல்லாமல், குரங்குக் குட்டி பிறந்த மாத்திரமே... சுட்டியாக செயல்படும். மனிதக் குட்டிக்கோ ஸ்லோ பிக் - அப்தான்.

இன்றும், பின் தங்கிய பல நாடுகளில், பேறுகால மரண விகிதம் மிக அதிகமாகத்தான் இருக்கிறது எனும்போது, அப்போதைய நிலை?! பிரசவமும், பிள்ளை வளர்ப்பும் இப்படி பெரும்பாடாக இருந்ததால், மனிதத் தாயும் குட்டியும் பிழைத்துக் கொள்ளுதல் ரொம்பவே பெரிய போராட்டம். 'இந்தப் பிரச்னை தீர வேண்டும் என்றால், பெண்ணைப் பேணிப் பராமரிக்க வேண்டும்' என்று அவளுடைய துணைவனுக்குத் தோன்ற வேண்டும்! இல்லையென்றால் அன்பாக, பாசமாக, பொறுப்பாக, மனைவியையும் குழந்தைகளையும் கட்டிக் காப்பாற்றத் தெரியாதவனின் மரபணுக்கள் பரவவே செய்யாதே!

ரொமான்ஸ் ரகசியங்கள் !

இயற்கை விடுத்த சவாலில் பாசமாக, ரொமான் டிக்காக குடும்பம் நடத்தத் தெரிந்தவர்கள் மட்டுமே ஜெயிக்க முடியும். இந்த சூட்சமம் தெரியாதவர்களுக்கு... எத்தனை குட்டிகள் பிறந் தாலும், அவற்றால் பிழைக்க முடியாமல் போகும். 'இதெல்லாம் சுத்த கப்சா. அந்தக் காலத்தில் வாழ்ந்த நம் கொள்ளுத் தாத்தா, கொள்ளுப் பாட்டி எல்லாம் இப்படி ரொமான்ஸா செய்து கொண் டிருந்தார்கள்? அவர்கள் பெற்ற குழந்தைகள் எல்லாம் பிழைக் காமலா போய்விட்டார்கள்?’

உதாரணத்துக்கு அந்தக் கால தாத்தாவையே எடுத்துக் கொள்வோம். வேலை வெட்டிக்குப் போகாமல், தம் மூதாதையரின் சொத்தை நம்பி கல் யாணம் செய்துகொண்டு, ஊர்வம்பு, அக்கப் போர், வெட்டி நியாயம் என்று தண்டமாக வாழ்ந் தார் தாத்தா. மனைவியை வெளியே அழைத்துப் போவது, ஜாலியாகப் பேசுவது, அவள் மீதும் தன் குழந்தைகள் மீதும் அக்கறை காட்டுவது என்று எந்தவிதமான பிணைப்பும் இல்லாமல் முழு நேர சாப்பாட்டு ராமனாகக் கிடந்தார். 'புருஷன் சரியில்லை' என்று சோகத்திலேயே பிள்ளைகளை பெரிதாக கவனிக்காமல் விட்டாள் மனைவி. அதனால்... முதல் மகன் குடிகாரன், இரண்டாவது ஊதாரி, மூன்றாவது பெண் சமர்த்தில்லாதது, நான்காவது அப்பாவை போலவே வெட்டிப் பேச்சு என்று... எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும், தரத்தில் எல்லாமே தோற்றுப்போன கேஸ்களாயின. அந்தக் கால தாத்தா - பாட்டிகளிடம் கேட்டுப் பாருங்கள், இப்படி பல கேஸ்களைப் பற்றிச் சொல்வார்கள்!

ஆடு, மாடு மாதிரி குட்டி போட்டுவிட்டு, மனிதர்களால் ஒதுங்கிவிட முடியாது. காரணம் ஆடு, மாடு போல மனிதர்கள் உடம்பால் வாழ்வதில்லை. இந்த உலகிலேயே அறிவால் வாழும் ஒரே ஜீவராசி மனிதன்தான். அந்த அறிவு, பிறந்த உடனேயே ரெடிமேடாக வெளிப்படுவதில்லை. சரியான விஷயங்களை அந்தக் குழந்தைக்கு சரியான வயதில் சொல்லித் தராவிட்டால், அதன் ஆற்றலே வெளிவராமல் போய்விடும் அபாயம் இருக்கிறது.

இப்படிக் குழந்தைக்கு இந்த ஞான ஒளியை ஏற்ற வேண்டும் என்றால், அந்தத் தாய் - தந்தை எவ்வளவு விஷயங்களை அதற்குக் கற்றுத் தர வேண்டி இருக்கும்? ஒரு நல்ல குழந்தைக்குத் தவறான தகவல்களை போதித்து வளர்த்தால்... பேரறிவாளிகூட... மத வெறியனாகவோ, சமூக விரோதி யாகவோ மாற முடியும். அப்படி எதுவும் நேராமல், ஒரு குழந்தை மனித சமூகத்துக்கு பயனுள்ளபடி வாழும் வித்தை களை கற்றுத்தருவது, அதன் தாய் - தந்தையரின் பணி!

இவ்வளவு கடுமையான வேலையை, சாமர்த்தியமாகச் செய்ய வேண்டுமென்றால், அது சுலபமான காரியமில்லை. இந்த உலகிலேயே மிகவும் கஷ்டமான, நேரம் நிறைய எடுக்கக் கூடிய, பாராட்டே கிடைக்காத வேலை எது தெரியுமா? பிள்ளை வளர்ப்பு! இதை ஒரு தாய் 24 ஙீ 7 சளைக்காமல் ஆசையாக, சந்தோஷமாக செய்ய வேண்டும் என்றால், அவள் மனம் நிறைவாக இருந்தால்தானே அது சாத்தியம்?

கஷ்டத்தில் வாழும் ஒரு பெண்ணால், எப்படி சிறந்த தாயாக இருக்க முடியும்? அவளால் சாப்பாடு வேண்டுமானால் ஊட்ட முடியும், ஆனால் குழந்தையின் அறிவை அபிவிருத்தி செய்ய முடியாது. திருப்தியாக வாழும் ஒரு தாயால்தான், சிரித்த முகமாக, சளைக்காமல் குழந்தையின் கேள்விகளுக்குப் பதில் சொல்லி, அது செய்யும் அவ்வளவு குறும்புகளை யும் பொறுத்துக் கொண்டு, அதற்கு பிடிக்கும்படி வாழ்வியல் வித்தைகளைச் சொல்லித்தர முடியும்.

கணவனின் அன்பு, ஆதரவு, அவன் தனக்காக மட்டும்தான் இருக் கிறான் என்கிற நம்பிக்கை, எந்த பிரச்னை வந்தாலும் இவன் என்னை யும் குழந்தைகளையும் காப்பாற்றி விடுவான் என்கிற தைரியம், நிறைய சிரிப்பு, சந்தோஷம், சின்ன சின்னப் பாராட்டுகள், சிம்பிளாக சில பரிசுகள், 'உன்னைப்போல ஒருத்தி இல்லை’ என்கிற புகழ்ச்சி... இவை எல்லாம் கிடைத்தால் அந்தப் பெண்ணின் பேட்டரி முழுமையாக ரீ-சார்ஜ் ஆகிவிடும், அவள் முழு வேகமாக ஓடி,  தன் தாய்மைப் பணிகளை நிறைவு செய்வாள்.

ஆனால், மனைவியின் மனதை ரீ-சார்ஜ் செய்யத் தெரியாத கணவனுக்கு வாழ்க்கைப்பட்டவள் என்ன செய்வாள்?

'சனியனுங்க, அப்படியே அப்பனை மாதிரியே வந்து வாய்ச்சுருக்குங்க’ என்று கரித்துக் கொட்டுவாள். கணவன் மேல் இருக்கும் கோபத்தில், குழந்தைகளை மொத்தி எடுப்பாள். 'இவனுக்கு பிறந்த இந்த மூஞ்சிகளுக்கு இது போதும்’ என்று விட்டேத்தியாக இருப்பாள். கணவனையும், சில சமயத்தில் அவனுக்குப் பிறந்த குழந்தைகளையும் நிராகரித்துவிட்டு... வேலை, ஊர்வம்பு, பக்தி, அம்மா வீடு, மகளிர் பாலிடிக்ஸ், இன்னொரு காதலன் என்று வேறேதோ ஒருவிதத்தில் தன்னை திருப்திப்படுத்திக் கொள்ள முயல்வாள். இதனால், அவளுக்கு, அவள் கணவனுக்கு, அவர்கள் குழந்தைகளுக்கும், ஏன்... இந்த ஒட்டுமொத்த சமூகத்துக்குமே இழப்புதான்.

இதெல்லாம் நேராமல் இருக்க, அவள் பேட்டரியை, அந்த  கணவன் கேரக்டர், ரீ-சார்ஜ் செய்திருக்க வேண்டும். எப்படி?

- நெருக்கம் வளரும்...