நமக்குள்ளே...!

##~## |
சில செய்திகளைப் படிக்கும்போது, அடிவயிற்றிலிருந்தே 'பகீர்' என திகில் பரவ ஆரம்பித்துவிடும்தானே! இந்தச் செய்தியைப் படித்தபோதும் அப்படியே!
'பி.பி.ஏ படித்த 24 வயது லாவண்யா - பி.இ. படித்த 27 வயது செந்தில்வினோ இருவரும் சென்னையில் அருகருகே இருக்கும் நிறுவனங்களில் பணியாற்றி வர, இருவருக்கும் இடையே காதல். ஏழு மாதங்களாக அது வளர்ந்த நிலையில்... திடீரென சத்தமில்லாமல் சொந்த ஊருக்குப் போய்விட்டார் செந்தில். ஒரு மாத காலமாக அவருடைய மொபைல் போனும் 'சுவிட்ச்டு ஆஃப்'!
பதறித் துடித்த லாவண்யா, செந்திலைத் தேடி கன்னியாகுமரி மாவட்டத்திலிருக்கும் அவருடைய சொந்த கிராமமான ஆளுவிளை போய் இறங்கிவிட்டார். காதலனைத் தேடிக் கண்டுபிடித்தவர்... திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியிருக்கிறார். செந்தில் தட்டி கழிக்கவே, தயாராக வைத்திருந்த விஷத்தை குடித்த லாவண்யா, சில நிமிடங்களில் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.'
காதல் தற்கொலைகள் இங்கே புதிதில்லை. விதம்விதமாக காதல் தற்கொலைகள் அரங்கேறியபடிதான் இருக்கின்றன. காதலித்தவரையே திருமணம் செய்துகொள்வது... மிகமிக மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றுதான். ஆனால், அது நடக்கவில்லை என்பதற்காக வாழ்க்கையையே முடித்துக் கொள்வதா?
வாழ்க்கை என்பது, காதலித்த நபரையே கைபிடித்து, டூயட் பாடும் இரண்டரை மணி நேர சினிமா இல்லை என்பதை, இன்னும் எத்தனை தற்கொலைகளுக்குப் பிறகுதான் புரிந்துகொள்ளப் போகிறார்களோ... இளம்தலைமுறையினர்.
நினைத்த நிமிடத்திலேயே, நினைத்ததை அடைய நினைப்பது; எதற்கெடுத்தாலும், பதற்றம் அடைவது; சின்ன விஷயங்களுக்குக்கூட, அதீதமாக கோபப்படுவது... என்றே வளர ஆரம்பித்திருக்கும் இன்றைய இளம்தலைமுறைக்கு தேவை, ஒரு சின்ன புரிதல்!
ஆம்... ஆசை மற்றும் எதார்த்தம் இந்த இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை, குழந்தைப் பருவத்திலேயே பசுமரத்தாணி போல பதித்துவிட்டால், காதல்தான் என்றில்லை... படிப்பு, விளையாட்டு, வியாபாரம் என்று எந்தச் சூழலிலும் விரக்தி அவர்களை தொட்டுக்கூட பார்க்காதல்லவா!
உரிமையுடன்

ஆசிரியர்