ஸ்பெஷல் 2
ரெகுலர்
ஸ்பெஷல் 1
Published:Updated:

என்னவரே...என்னவரே...

லலிதா சந்திரமோகன்படம் : வி.செந்தில்குமார்சந்திப்பு : ம.மோகன்

##~##

தொழில் உல கில் நிலைத்த பெயர் எடுத்திருப்பவர், 'ஹட்சன் அக்ரோ புராடக்ட்ஸ்’ சந்திரமோகன். 'அருண்’ ஐஸ்கிரீம் கம்பெனியைத் தொடங்கி... அடுத்தடுத்து 'ஆரோக்யா’ பால், 'ஹட்சன் ஃபுட் புராடக்ட்ஸ்’ என்று படிப்படியாக உயரம் கண்டிருப்பவர்!

சென்னை, ராயபுரத்தில் மூன்று பணியாட்களுடன், ஒரு நாளைக்கு 20 லிட்டர் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்து விற்பனையைத் தொடங்கிய எளிமையான மனிதர், இன்று நாடு முழுக்க 5,000 பணியாட்களுக்கும் மேலாக வேலை கொடுக்கும் அளவுக்கு உயர்ந்து, ஒவ்வொரு நாளும் 70 ஆயிரம் லிட்டர் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யும் அளவுக்கு ஆற்றலை வளர்த்து, தன் எல் லையை ஆரோக்கிய மாக விஸ்தரித்துக் கொண்டிருக்கிறார்.

''இவரின் மனைவி என்பதைக் காட்டிலும், பெருமைப்பட்டுக் கொள்ள பெரிய விஷயம் என்னிடம் எதுவுமே இல்லை!''

- ஆனந்தப் பூரிப்புடன் ஆரம்பிக்கிறார் லலிதா சந்திரமோகன்.

''பெற்றோர்கள் பார்த்து நிச்சயித்த திருமணம். 'நல்ல பையன். சென்னையில் சொந்தமா ஐஸ்கிரீம் கம்பெனி வெச்சுருக்கார்...' என்கிற இந்த இரண்டு விஷயங்களும்தான்... என் அம்மாவும், அப்பாவும் தங்கள் பெண்ணை இவர் வீட்டுக்கு மருமகளாக அனுப்பி வைக்கக் காரணங்கள். தூத்துக்குடியில் பிறந்தாலும், அப்பாவின் வேலை மாற்றல் காரணமாக, எட்டாம் வகுப்புக்குப் பின், விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் என்ற ஊர்லதான் வளர்ந்தேன். அதைச் சொந்த ஊராகக் கொண்ட இவரை, கைப்பிடிக்கும் சூழலை ஏற்படுத்திய அப்பாவின் பணியிட மாற்றலுக்கு இப்போதும் நான் நன்றி சொல்வதுண்டு.

என்னவரே...என்னவரே...

இவர், ஐஸ் ஃபேக்டரி தொழிலுக்காக 1970-ல் சென்னை வந்தவர். 73-ல் நிகழ்ந்த எங்களுடைய திருமணத்துக்குப் பிறகு... நானும் சென்னைவாசியானேன். திருமணம் முடிந்த இரண்டாவது வாரம். இரவு இரண்டு மணி நேரத்துக்கும் மேல் வீட்டில் பவர் இல்லை. ஒருவித அசௌகரியத்துடனேயே இருந்தவர், ஒருகட்டத்தில் சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு, 'ஐஸ் ஃபேக்டரிக்கு போயிட்டு வந்துடறேன்!’ என்று கிளம்பினார். மறுநாள்தான் வீடு திரும்பினார். பவர் இல்லாததால், கிரீம்களை ஐஸ் கட்டி வைத்துப் பாதுகாக்கப் போனதாகச் சொன்னவரிடம், 'சரி, எங்க படுத்திருந்தீங்க?’ என்றேன். 'ஃபேக்டரியில மூணு டேபிள் இருக்கு. ஒண்ணா சேர்த்துப் போட்டு தூங்கிட்டேன்!’ என்றார் எந்தச் சோர்வும் இன்றி.

'அசத்தலான ஐஸ்கிரீம் பிஸினஸ்மேனை கைப்பிடிக்கப்போறே... உனக்கென்ன ராணி மாதிரி வாழ வேண்டியதுதான்!’ என்று திருமணத்துக்கு முன் தோழிகள் கிண்டல் செய்வார்கள். எனக்கும் வாழப்போகும் வாழ்க்கை மேல் நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால்... இவருடைய டேபிள் தூக்கம், வியர்வை தினங்கள், இரவு - பகல் பாராத வேலை எல்லாவற்றையும் பார்த்தபோது... 'எந்த ஆடம்பர ஆசைகளும் இல்லாமல், அவரின் தொழில் கஷ்ட - நஷ்டங்களை பகிர்ந்து கொண்டு பக்குவமாக வாழ்க்கை நடத்த வேண்டும்' என்ற புரிதல் வந்தது. அவரின் முதல் மனைவி 'தொழில்’, அடுத்துதான் 'நான்’ என்கிற எண்ணத்தை அவரைப் போலவே நானும் வளர்த்துக் கொண்டேன். பிள்ளைகள், பேரக்குழந்தைகள் என்று கடந்து வந்திருக்கும் இந்த 39 வருடங்களிலும் அந்தப் புரிதலும் என்கூடவே பயணிப்பதுதான்... எங்கள் இல்லறத்தில் சந்தோஷம் எப்போதும் வளர்பிறையாக இருக்கக் காரணம்.

70-ல் 'அருண்’ ஐஸ்கிரீமைத் தொடங்கி... 84-ல் நம்பர் ஒன் இடத்தை அடைந்த அந்த 14 வருட உழைப்பு, ஒரு வேள்வி! 'வெளியில் பல இடங்களுக்குப் போறீங்க, முக்கியமானவங்கள பார்க்கறீங்க, கையில் ஒரு வாட்ச்கூட கட்டாம இருக்கலாமா?’ என்று நான் கேட்டுக்கொண்டே இருப்பேன். 'நிறுவனத்தை 'டாப்’ பொஸிஷனுக்கு கொண்டு வந்த பிறகு, வாட்ச் கட்டிக்கிறேன்!’ என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அது, 84-ல் நிறைவேறியபோது, நிறுவனத்தில் பணிபுரியும் அனைவருக்கும் கைக்கடிகாரம் பரிசளித்து, தானும் கட்டிக்கொண்டார். உழைப்பில் அவர் கொண்டிருக்கும் உறுதியும், தன் பணியாளர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவமும் அவரை இன்னும் மதிக்கச் செய்யும்.  

பொதுவாக, 'பிஸி’ பிஸினஸ் ஆண்கள் அனைவரும் குடும்பம் என்கிற பொறுப்பு முழுக்க மனைவியிடம் ஒப்படைத்துவிடுவது புதிது இல்லை. அது எங்கள் வீட்டிலும் நடந்தது. என்றாலும், சில முக்கிய விஷயங்களில் அவரின் நேரடி கவனம் தேவை என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அதில் ஒன்று, குழந்தைகளின் படிப்பு. எவ்வளவு பரபரப்பாக இருந்தாலும், ஒவ்வொரு மாதமும் பள்ளியில் நடக்கும் 'பேரன்ட்ஸ் மீட்டிங்’-க்கு இவரைத் தவறாமல் அழைத்துச் சென்றுவிடுவேன். பிள்ளைகளின் அந்தந்த வயது நிறை, குறைகளைக் கவனித்து, நன்றாக ஆளாக்கி, அவரவர்களுக்கான விருப்பங்களை இருவருமாக சேர்ந்து நின்றே ஏற்படுத்திக் கொடுத்திருக்கிற நிறைவு, பெற்றோர்களுக்கான நிம்மதி இல்லையா!

நேரம் கிடைக்கும்போதெல்லாம் 'ஃபேமிலி டூர்’ ஏற்பாடு செய்துவிடுவது, சாரின் சமர்த்துப் பழக்கம்! அப்போதெல்லாம் அவர் அத்தனை உற்சாகமாக இருப்பதைப் பார்க்க... கண் இரண்டும் போதாது எனக்கு. சமீபத்தில் யு.எஸ் ட்ரிப் போனபோதுகூட கேரம்போர்டு, செஸ், சமையலில் உதவுவது என்று சுறுசுறுவென இருந்தார். 'இதை எல்லாம் வீட்டில் ஒரு நாளாவது செய்திருக்கீங்களா..?’ என்றால், 'முடியாததாலதானே இந்த டூர் பிளான்!’ என்று சிரித்தார். நாங்களும் அதுதான் சான்ஸ் என்று அந்த நாட்களில் அவரை முழு குடும்பத் தலைவராக்கி, அப்பாவாக்கி, தாத்தாவாக்கி, அனைவரும் சூழ இருந்து கொண்டாடுவோம்.

புதிதாக ஐஸ்கிரீமோ, ஃபுட் புராடக்ட்ஸோ... எந்த வெரைட்டியாக இருந்தாலும், அதை அறிமுகப்படுத்துவதற்கு முன்... நான்தான் டேஸ்ட் செய்து சொல்ல வேண்டும். 'உன்னுடைய மார்க்தான் அந்த புராடக்ட்டுக்கு கிடைக்கிற ரிசல்ட். மார்க்கெட்டுக்கு கொண்டு போகலாமா, வேண்டாமானு அதை வெச்சுதான் முடிவெடுப்பேன்’ என்பார். 'சும்மா என்னை திருப்திப்படுத்தத்தானே இதெல்லாம்?!’ என்று கிண்டலடிப்பேன். 'என் உழைப்பின் சுகம், வலி ரெண்டையும் கூடவே இருந்து அனுபவிக்கற ஒரே ஜீவன் நீ. உன்னுடைய ஜட்ஜ்மென்ட் எப்படித் தவறாகும்!’ என்று அவர் சொல்லும்போது, ஒரே நேரத்தில் நூறு ஐஸ்கிரீம் சாப்பிட்ட சந்தோஷம் மனதில் பொங்கும்!

இப்படியான மகிழ்வுத் தருணங் களில் எல்லாம் தவறாமல் எனக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வரும். என் ஏழாம் வகுப்புத் தோழி பத்மாவதிக்கு, ஒவ்வொருவராக கைரேகை பார்த்துச் சொல்வதுதான் பிடித்த விளையாட்டு. என்னுடைய கையைப் பார்க்கும்போதெல்லாம், 'ஏய் லலி, இப்ப நீ இப்படி இருந்தாலும்,  பிற்காலத்துல நீ, நினைச்சுப் பார்க்க முடியாத வசதியோட வாழப் போறே’ என்பாள். அவள் விளையாட்டாகச் சொன்னது இன்று என் வாழ்க்கையாகி  இருக்கிறது!''