விகடன் தானே துயர் துடைப்பு அணி
##~## |
நொச்சிக்காடு... சமீபத்திய 'தானே' புயல் தாக்குதலால் நொறுங்கிக் கிடக்கும் கடலூர் மாவட்ட கிராமங்களில் ஒன்று.
கடலோரத்தில் வசிப்பவர்கள், மீன்பிடித் தொழில் செய்கிறார்கள். மற்றவர்கள், தினக் கூலிகள். அரை ஏக்கர், ஒரு ஏக்கர் என வைத்திருப்பவர்கள்... சவுக்கு போட்டு, வெட்டி விற்பனை செய்வதைத் தவிர, வேறு விவசாயம் எதுவும் செய்ய முடியாத நிலை.
கடந்த 2004-ம் ஆண்டு, சுனாமி தாக்குதலால் மோசமாகப் பாதிக்கப்பட்ட ஊர்களில் இதுவும் ஒன்று. 'பட்ட காலிலேயே படும்’ என்பது போல... இப்போது 'தானே’ தாக்குதல்.
நம்முடைய 'தானே’ துயர் துடைப்பு அணி இந்தக் கிராமத்தை வலம் வந்தபோது, ''ஆம்பளைங்க எங்கயாவது கூலி வேலைக்குப் போறாங்க. மாசம் முழுக்க வேலைக்குப் போனாலும் மூவாயிரம்கூட முழுசா பார்க்க முடியாது. இதை வெச்சுக்கிட்டு எங்களால எப்படி வாழ முடியும்? பெண்களும் உழைக்கத் தயாரா இருக்கோம். ஆனா, என்ன தொழில் பண்றதுனுதான் தெரியல'' என்று சோகமாக சொன்னார்கள் அந்த ஊரின் பெண்கள்.

நொச்சிக்காடு-நந்தன் நகர் பகுதித் தலைவரான சுதாகர், ஒரு கட்டடத்துக்கு நம்மை அழைத்துச் சென்றார். தரமான கான்கிரீட் கட்டடம். உள்ளே... உடைந்த பெஞ்ச், சேர், உதவாத பொருட்களே அதிகமிருந்தன.
''தனியார் தொண்டு நிறுவனம் நாலைந்து வருஷத்துக்கு முன்ன கட்டிக் கொடுத்தது. ஆனா, இந்த பில்டிங்கை வெச்சு என்ன பண்றதுனு தெரியாம, பூட்டிவெச்சுருக்கோம். இதைப் பயன் படுத்தி பெண்களுக்கு தொழில் பயிற்சி ஏதாவது கொடுங்க'' என்றார் சுதாகர்.
துரித வேகத்தில் நம்முடைய பணிகள் தொடங்கின. கட்டடத்தில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்தி, சுத்தமாக வெள்ளை அடித்து, மின் வசதியும் செய்யப்பட்டது. 'உஷா’ நிறுவனத்தில் இருந்து 20 புதிய தையல் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. மூன்று நாட்களில் பயிற்சி மையம் தயார். தையல் பயிற்சி கொடுப்பதற்காக கடலூரில் இருந்து விமலா, மீனா என இரண்டு பயிற்சியாளர்கள் வரவழைக்கப்பட, பயிற்சி ஆரம்பமானது (இந்த 20 மெஷின்களும் அங்கேயே நிரந்தரமாக இருக்கப் போகின்றன... அந்தப் பெண்கள் தங்களின் வாழ்வாதாரத்தை தேடிக்கொள்வதற்காக)!

ஒரு வாரத்துக்குப் பிறகு, அங்கே நாம் சென்றபோது... ''யாரும் லீவு எடுக்கறதே இல்லை. சரியா பத்து மணிக்கு வந்துடறாங்க. சாயந்திரம் அஞ்சு மணி வரைக்கும் ஆர்வமா கத்துக்கிறாங்க. ஜாக்கெட், சுடிதார், ஸ்கர்ட், சட்டை தைக்கக் கத்துக்கொடுக்கிறோம். ஒரு வாரத்தில் எல்லோர்கிட்டயும் நல்ல இம்ப்ரூவ்மென்ட் தெரியுது'' என்று பெருமையோடு சொன்னார் பயிற்சி ஆசிரியர்களில் ஒருவரான விமலா.
கடலூரில் பி.எஸ்சி படித்துவரும் நித்யாவுக்கு, இப்போது செமஸ்டர் லீவு. ''இதுவரைக்கும் நான் தையல் மெஷின்ல உட்கார்ந்ததுகூட கிடையாதுங்க. விகடன் மூலமா பயிற்சி கொடுக்குறாங்கனு சொன்னதும் இங்க கிளம்பி வந்துட்டேன். லீவு முடியறதுக்குள்ள நல்லா தைக்கக் கத்துக்குவேன். காலேஜ் முடிச்ச பிறகுகூட வேலை இல்லைனு கவலைப்பட வேண்டியது இல்ல பாருங்க'' என்றார் நித்யா.
''புயல்ல இருந்து எந்த வேலைக்கும் போகாமதான் இருந்தோம். வேலைக்கு போகணும்னாகூட கடலூருக்குத்தான் போகணும். தினமும் போயிட்டு வர, காசும் இல்ல. இப்ப ஊருக்கே வந்து தையல் கத்துக்கொடுக்குறதால தைரியமா அனுப்பிட்டாங்க. இனி... ராத்திரி, பகலா மெஷினை மிதிச்சே குடும்பத்தைக் காப்பாத்திடுவேன்'' என்றார் உஷாதேவி நம்பிக்கையுடன்.
''ப்ளஸ் டூ முடிச்ச பிறகு மேல படிக்க வைக்க வீட்ல வசதி இல்ல. முந்திரிக் காட்டு வேலைக்குப் போயிட்டு இருந்தேன். புயல் அடிச்சதுல அந்த வேலையும் இல்லாம போச்சு. இந்த நேரத்துலதான் கடவுள் மாதிரி வந்தீங்க. பத்தாயிரம் ரூபாய் பணமா கொடுத்து இருந்தீங்கனாகூட... ஒரே மாசத்துல செலவாகி இருக்கும். இப்போ எங்க வாழ்க்கைக்கே வழிகாட்டிட்டீங்க. எங்க எதிர்காலத்தையே மாத்தி அமைச்ச விகடனுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல'' என்று நெகிழ்ந்தார் சக்திபிரியா.
நன்றிகள் அனைத்தும் நம் வாசகர்களுக்கே!