மகேந்திரன்
என் மரியாதைக்குரிய ஆசிரியருக்கு...
##~## |
2012-ம் ஆண்டின் மே, 22-ம் தேதியை என் வாழ்வில் மறக்க முடியாத உன்னத நாளாக மாற்றிக் காட்டிய ஆச்சர்யத்தை நிகழ்த்தியிருக்கிறது தங்களின் 'அவள் விகடன்’!
இத்தனை வருடங்களாக எனக்குள் தவமிருந்த ஏக்கத்தைப் போக்கி, நான் தரிசிக்கத் துடித்துக் கொண்டிருந்த 'டாக்டர் சாரா’ எனும் எனது அன்புத் தாயின் முகத்தை, அன்றைய தினம் வெளியான இதழில் பதியச் செய்து, நான் காணச் செய்துவிட்டீர்கள்! இது, விகடனுக்கு மட்டுமே சாத்தியமான சாதனை! எனது ஆனந்தக் கண்ணீரைக் கொண்டுதான் இக்கடிதத்தையே எழுதுவது போன்ற உணர்வு எனக்கு.

ஒன்று நிச்சயம், இதைவிடப் பெரிதான மகிழ்ச்சி என் வாழ்வில் இனி சாத்தியமில்லை என்பது சத்தியம்.
இந்த அதிசயத்தை நிகழ்த்திட, தங்களின் அருமையான உந்துதலால், டாக்டர் சாராம்மாவின் குடும்பத்தினரைக் கண்டுபிடிக்கும் தீவிரமான அர்ப்பணிப்பில் மிகப்பெரும் வெற்றி கண்டுள்ள கி.மணிவண்ணனுக்கு எனது நன்றி உணர்வுகளை வெளிப்படுத்தும் வல்லமை கொண்ட வார்த்தைகளைப் போடுவது மிகமிகக் கடினம்!
எனக்கு இன்னுமோர் ஆச்சர்ய அனுபவம்... 'அவள் விகடன்' இதழை நான் பார்த்துக் கொண்டேயிருந்த பரவச விநாடிகளில்தான் நிகழ்ந்தது. டாக்டர் சாராம்மாவின் குடும்பத்தினர் இவ்வளவு விரைந்து என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொள்வார்கள் என்பதை நான் எதிர்பார்க்கவே இல்லை.
அருமை அம்மா சாரா அவர்களின் அன்பு மகள் ஜோதி, மகன் பெஞ்சமின் செரியன் இருவரும் என்னுடன் தங்களது உணர்வுகளை மிக வாஞ்சை யுடனும்... வியப்புடனும் பகிர்ந்து கொண்டு, 'விரைவில் சந்திக்க வேண்டும்' எனத் தீர்மானித்தபோதும்... இதற்கெல்லாம் 'அவள் விகடன்’தான் காரணம் என உணரும்போது... அவள் விகடனிடமும் என் தாய் சாராம்மாவின் அளவிட முடியாத அன்புள்ளத்தையே நான் காண்கிறேன்!
எனக்கு உயிர் கொடுத்த அந்தத் தெய்விகப் பெண்மணி என் முன்னே உயிருடன் காட்சி தருவது போன்ற பிரமையை எனக்குள் உருவாக்கிய ஓவியர் பாரதிராஜா மற்றும் இக்கட்டுரைக்காக உழைத்த அனைவருக்கும் என்றென்றும் என் இதயத்தில் நீங்காத இடம் உண்டு!
என்றுமில்லாத மகிழ்ச்சியுடன்,
