ஸ்பெஷல் 2
ரெகுலர்
ஸ்பெஷல் 1
Published:Updated:

முத்தம் கொடுத்துப் பசியாற முடியாது..!

பிரபல எழுத்தாளர் பிறப்பெடுத்த கதை ஓவியம்: பாரதிராஜா படம்: கே.ராஜசேகரன்

வணக்கத்துக்குரிய பெண்ணை நினைவுகூரும் பக்கங்கள்

கி.மணிவண்ணன்

##~##

ஒரு மாலைப்பொழுது. கரை புரண்டோடும் காவிரி ஆற்றின் படித்துறையில் அவளும் அவனு மாய் கால்கள் நனைய அமர்ந்திருக்கிறார்கள். கணுக் காலில் மினுங்கும் அவளது முத்துக் கொலுசைத் தொட்டு... வழிந்தோடுகிறது தண்ணீர்.

''நாம ஏன் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது?''

நெற்றியில் சுருண்டு விழும் ஒற்றை முடியை ஒதுக்கியவாறே... ''ம்... பண்ணிக்கலாமே..! இப்பவே கௌம்பலாம். எங்க போறோம்..? வீடு, சாப்பாடெல்லாம் எப்படி? சரி... கடன் வாங்கிக் குவோம். அடுத்த மாசம் என்ன செய்யிறது? பிராக்டிகலா யோசிச்சியா?''

தயங்காமல் பதில் சொல்கிறாள். அவன் திரும்பப் பேசவில்லை.

''முத்தம் கொடுத்து பசியாற முடியாது..! இன்னிக்கு ராத்திரி நமக்குள்ளே உறவு ஏற்பட்டுச் சுனா, காலையில நீ என்னைப் பார்க்குற பார்வை வேற. மறுத்துப் பேசறதால நான் ஒனக்குத் தப்பா தெரியலாம் வைத்தி. எதுக்காகவும் இந்த சிநேகிதத்தை நான் இழக்க விரும்பல. அதனால ரெண்டு வருஷம் இதைத் தள்ளிப் போடுவோம்.''

அவர்... எழுத்தாளர் பிரபஞ்சன். அந்தப்  பெண், அவரின் அன்புத் தோழி சுமதி. இந்தி எதிர்ப்பு தீவிரமான காலகட்டம். இடதுசாரி சிந்தனைகளோடு அவர் தி.மு.க-வில் ஈடுபட்ட கல்லூரிப் பருவம். ஒரு அரசியல் மேடையில் கவிதை பாடிய வரைப் பார்த்து அவள் கேட்டிருக்கிறாள்...

முத்தம் கொடுத்துப் பசியாற முடியாது..!

''வாழ்க..! வாழ்க..!னு கவிதை பாடுறீங்களே... உணர்ச்சி'வசப்பட்டு தமிழை வளர்க்க முடியுமா?''

பெரும்பாலோர் புரிந்துகொள்ள மறுக்கிற... அவருக்குள் புரிதலை உருவாக்கிய கேள்வி அது. முதலாமாண்டு மருத்துவம் படித்துக் கொண்டிருந்த சுமதி, தன் பெற்றோருடன் அந்தக் காவிரிக் கரையோர நகரத்தில் குடியிருந்திருக்கிறார்.

''இன்னும் சொல்லட்டுமா... ஒங்களுக்கு சுத்தமா கவிதையே வரல.''

முகத்துக்கு நேராக அவள் சொன்னது பிடிக்க வில்லை. என்றாலும், அவர் கர்வம் கலைந்தது. உணர்ச்சிகளை கடன் வாங்கி கவிதை பாடியவரை, கதை எழுதுவதற்காக மடைமாற்றி விட்டிருக்கிறார் சுமதி. பெண்மையின் மேன்மையை, அவர்கள் மீதான கரிசனத்தை தன் எழுத்துக்களில் பரவவிட்டிருக்கும் எழுத்தாளர் பிரபஞ்சன், நெகிழ்வுடன் பேச ஆரம்பிக்கிறார்.

''இந்தி எதிர்ப்புச் சிறைவாசத்தால ஒரு வருடம் படிப்பை இழந்த எனக்கு, சுமதியோட நட்பு ஆறுதலா இருந்துச்சு. லேடீஸ் ஹாஸ்டல்ல... அடிப்படை வசதியில்லாத பிரச்னை தொடர்பான போராட்டங்கள்ல பெண்களுக்கு ஆதரவா நான் இருந்ததால, என் மேல அவளுக்கு நல்ல மரியாதை. வெண்ணாற்றங்கரையிலும், விடுமுறை நாட்கள்ல திருவையாறு தியாகராஜர் சந்நிதி படித்துறையிலும் சந்திப்பு தொடர்ந்துச்சு. என்னோட கல்லூரிப் படிப்பு முடிஞ்ச அன்னிக்கு சாயங்காலம்தான் காதலைச் சொன்னேன்.''

பிரபஞ்சனின் அறை முழுவதும் நிரம்பிஇருக்கும் புத்தக வாசனை என்னைக் கிறங்க வைக்கிறது. சிகரெட்டை எடுத்து எனக்கும் ஒன்று நீட்டுகிறார். மறுத்ததும் புன்னகையோடு புகைத்துக் கொண்டே பேசுகிறார்.

முத்தம் கொடுத்துப் பசியாற முடியாது..!

''அப்புறம் நான் புதுச்சேரிக்கு வந்துட்டேன். என்னோட தம்பி எதிர்பாராதவிதமா இறந்துட்டான். அம்மாவுக்கும் ஒடம்பு சரியில்ல. எனக்கு கல்யாணம் ஏற்பாடு செஞ்சுட்டாரு அப்பா. அந்த நெலமையில நான் மறுக்க முடியல. என்னோட தோழி எனக்கு மனைவியாக முடியாதுங்கற நிலை உருவாயிடுச்சு!''

ஒரு புத்தகத்தைப் புரட்டுவதாய் தனது நினைவுகளின் ஆழ முடிச்சுகளை அவிழ்க்க ஆரம்பித்தவர், புருவம் உயர்த்தி,

'வாழ்வு நம் வசம் இல்லை. எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம். ஊசிதான் நம் வாழ்க்கை. நூல்தான் மனிதர்கள். எதன் வழியாக எங்கு செல்ல வேண்டும் என்கிற உரிமை நூலுக்கு மறுக்கப்படுகிறது... ஆகவே வாழ்த்துக்கள்!’

''இது, எனக்கு கல்யாணம் ஆனதை தெரிஞ்சுக்கிட்ட சுமதி அனுப்பின வாழ்த்து. மனைவிகிட்ட அவளைப்பத்தி கொஞ்சமா சொன்னேன். எலி பிறாண்டுவதைப் போல அவளுக்கு நெருடல் இருந்திருக்கலாம். ஆனா, பெருந்தன்மையோட இருந்தா. சுமதி எங்களுக்கு விருந்து வெச்சா. மனைவியை அறிமுகம் செஞ்சப்போ சுமதி கேட்ட கேள்விக்கு என்னிடம் இப்பவும் பதில் இல்ல.

'உன் மனைவியை எங்கிட்ட அறிமுகப்படுத்துன மாதிரி... உன் மனைவியோட சிநேகிதனை எனக்கு அறிமுகப்படுத்துவியா..?’

இந்தக் கேள்விக்கான பதிலைத்தான் இன்ன மும் என்னோட கதைகள்ல தேடிக்கிட்டிருக்கேன். சீக்கிரம் அந்த நிலையை அடைவேன். உயர்ந்த நிலைக்கு வர்றதுக்கு ஒரு பெண்ணோட தூண்டுதல் நிச்சயமா வேணும்...''

துளிர்க்கும் வியர்வையை அழுந்தத் துடைத்துக் கொள்கிறார்.

''அதுக்கப்புறம் நான் சென்னை வந்து பத்திரிகைகள்ல வேலைக்குச் சேரும்போதும் சுமதியோட ஆலோசனையைக் கேட்டுப்பேன். ஒரு பத்திரிகையில சேர்ந்தப்போ அவ சொன்னது இன்னமும் ஞாபகம் இருக்கு.

'வாழ்நாள் முழுக்க எதை எதிர்த்தும், விமர்சிச்சுகிட்டும் இருந்தியோ... அங்கேயே வேலைக்குப் போற. ஒண்ணு உன்னை இழக்கணும்... இல்லேனா சேருமிடத்துல அந்த வண்ணமா மாறணும்!’

சில வருஷத்துக்கு அப்புறமா விகடன்ல சேர்ந்தேன். சுமதிக்கும் கல்யாணம் ஆச்சு. ஆனா, தொடர்ந்து நாலு தடவை கர்ப்பம் கலைஞ்சு ருக்கு. ரொம்ப நாள் கழிச்சுதான் கர்ப்பப்பை புற்று நோய்னு தெரிஞ்சுது. திருமணம் ஆன எட்டாவது வருஷம், சுமதி உலகத்தைவிட்டே போயிட்டா...''

பிரபஞ்சனை உற்றுப் பார்க்கிறேன். கண்களில் துயரம் நிரம்பியிருந்தது.

''எந்த நிலையிலும் பெண்களுக்கு ஆதரவா எழுத்துக்கள்ல இயங்கணுங்கிறதுதான் சுமதி எனக்குக் கொடுத்த ஞானம்.''

அதற்கு மேல் அந்த அறையில் அவரால் இருக்க முடியவில்லை.

''வாங்க... நடந்து போய் ஒரு காபி சாப்ட்டு வருவோம்'' - அழைத்தார்.

''சமீபத்துல நான் கனடா கிளம்பும்போது கூட... 'இப்போ சுமதி உயிரோடிருந்தா... நீங்க சொல்லிட்டுப் போகலாம்’ - அன்பா சொன்ன மனைவிக்கு, எங்கிட்ட பதில் இல்ல...!''

வேப்ப மர நிழலில் நின்றோம்.

''அக்கறையோடு என்னை அணுகி... கேள்வி களால, விமர்சனத்தால அசைத்துப் பார்த்தவ சுமதி. புதுச்சேரி வரலாற்றை 'வானம் வசப்படும்’ங் கற தலைப்புல எழுத வெச்சது அவதான். அதுக்கு சாகித்ய அகாடமி விருது கெடைச்சப்போ சுமதி உயிரோட இல்ல...''

பேச்சில் ஏக்கம் நிறைந்திருந்தது. முதுமையை நோக்கிய பயணத்தில் ஆதாரமாயிருப்பது நினைவுகள்தானே..!

''ஒரு பேச்சாளனா, அரசியல்வாதியா ஆகியிருக்கக் கூடிய என்னை... ஒரு பொறுப்பான எழுத்தாளனா மாத்தினா. காலித்தனத்தோடு சுத்தினவன கண்டிச்சு திசை திருப்பினா. என்னோட எழுத்துக்கள்ல நல்ல பகுதிகள் இருக்குமானா... அதுக்கு ஒரே காரணம்... சுமதிதான்!''

கொஞ்சமாக மேகமூட்டங்கள் வெயிலை மறைத்தன. வரிசையில் நின்று காபி வாங்கித் தந்தார்.

''இப்படித்தான்... நான் காதல் சொன்னப்போ, 'வா... கிருஷ்ணய்யர் ஹோட்டலில் காபி சாப்பிடுவோம்..!’ என்றாள் சுமதி. அவளோட உடல்மொழி மரியாதைக்குரியது. பாந்தமா சேலை கட்டி, பாத விரல்கள் தெரியாம நடப்பா. பிறர் பேசறத அமைதியா கேட்டுட்டு, கடுமையான விமர்சனத்தை சிநேகமாக வைப்பா. அந்த அன்பான சுமதிதான் என் கதைகள்ல வர்ற நாயகி..!''

''இப்போ எப்படி அவங்கள நெனைக்கிறீங்க..?''

காபியை பாதியில் வைத்துவிட்டு, ''அம்மா, அப்பாவை நெனைச்சுப் பார்க்கறது எவ்வளவு சத்தியமானதோ... அது மாதிரிதான் சுமதியும். நொடிப்பொழுதுகளில் தோன்றி மறையும் வால் நட்சத்திரம் போல பேரழகுடன் என் வாழ்க்கையில வந்தவ, இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்திருக்கலாமோ? என் மனைவி இருந்திருந்தாலும் இந்தத் தவிப்பு இருக்கும். ஏன்னா... அவளும் சுமதியை நேசிச்சவ. எதை மையப்படுத்தி நான் இயங்குறேனோ... அந்த மையப்புள்ளிய அறிமுகப்படுத்தியவள் சுமதி. இப்போ அந்த புள்ளியாவே மாறிட்டா. என் படைப்புகளோட முழுத்தொகுப்பும் ஒரு நாள் வரும். அது சுமதிக்குத்தான் சமர்ப்பணம்..!''

''அடுத்து என்ன செய்யப் போறீங்க..?''

- ஆசுவாசமாகக் கேட்டேன்.

''நோய் தீவிரமாகி வலியால் துடிச்சப்போ தனிமையைத்தான் விரும்பினா சுமதி. அப்போ அவளோட சிந்தனைகளை டைரியில எழுதிக் கொடுத்தது... எனக்கு மிகப்பெரிய பொக்கிஷம். ஒவ்வொரு வருஷமும் தியாகராஜர் ஆராதனை நடக்கும்போதெல்லாம், திருவையாறு காவிரிக்கரையில நாங்க சந்திப்போம். அந்த சுவடுகளைத் தேடிப் பயணிக்கப் போறேன். அத வெச்சு ஒரு நாவல் எழுதணும். அதுல முதல் அத்தியாயம் சுமதியோட டைரிதான்!''

பையில் இருந்த டைரியை வாங்கிப் பார்த் தேன். அந்தக் கையெழுத்துக்களில் வலி தெரிந்தது.

வெயிலில் உதிரும் வேப்பம் பூக்களாய் மழை தூற ஆரம்பித்தது. மேலே எதுவும் பேசாமல் தனியே நடக்க ஆரம்பித்துவிட்டார் பிரபஞ்சன்.

- வருவார்கள்...