மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 279 -கலங்க வைக்கும் கட்டாய கல்யாணம் !

வாசகிகள் பக்கம்

 வாசகிகள் பக்கம்

##~##

என் நிம்மதியைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்று கொண்டிருக்கிறது, வீட்டில் தற்போது நடந்துவரும் கல்யாண ஏற்பாடுகள்!

வீட்டில் மூன்று பெண் பிள்ளைகள். நான்தான் கடைசிப் பெண். டிகிரி முடித்து, தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலையில் இருக்கிறேன். இரண்டு அக்காக்களையும்... ஒரே வீட்டைச் சேர்ந்த அண்ணன், தம்பிக்கு திருமணம் செய்து வைத்தோம். 'ஒற்றுமையாக வாழ்வார்கள்' என்று அனைவரும் நிம்மதியில் இருக்க, அவர்களோ எங்கள் நினைப்பில் மண் அள்ளிப் போட்டுவிட்டனர்.

என் டைரி - 279 -கலங்க வைக்கும் கட்டாய கல்யாணம் !

பொறாமை, ஈகோ, கோபம் என ஏகப்பட்ட ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, இரண்டு அக்காக்களும் ஓயாத போர் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கண்ணுக்கு அழகாக, கூட்டுக் குடும்பமாக இருந்தவர்கள்... இப்போது தனித்தனியாக சென்றுவிட்டார்கள். இருவரும் பேசியே மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிறது. இவர்களை நினைத்து... எங்கள் வீட்டிலும், அவர்களுடைய மாமியார் வீட்டிலும் அத்தனை வருத்தம்.

இந்நிலையில்தான், அதே குடும்பத்தின் கடைசி வாரிசுக்கு என்னை மணம் முடிக்க பேச்சை ஆரம்பித்திருக்கிறார்கள் என் பெற்றோர். 'நம்ம வீட்டுல மூணு பொண்ணு... அவங்க வீட்டுல மூணு பையன்... கடைசிப் பொண்ணையும் அங்கயே முடிச்சுட்டோம்னா ரொம்ப சிறப்பா போயிடும்!’ என்று அவர்கள் பேசப் பேச, எனக்கு வெறுப்பு பொங்குகிறது!

'ஏற்கெனவே, இப்படி நினைத்து ஒரே வீட்டுக்கு அனுப்பிய இரண்டு அக்காக்களும் பரம வைரியாக மாறிக் கிடக்கிறார்கள். இப்போது நானும் அதே வீட்டுக்கா..?' என்று நினைத்தாலே... அச்சமாக இருக்கிறது. என் அக்காக்களுக்கும் இதில் உடன்பாடு இருக்கிறதா என்பதை வெளிப்படையாக அறியமுடியாத சூழலில்... இரு வீட்டுப் பெரியவர்களோ, ''அதெல்லாம் போகப் போக சரியாயிடும்... நீர் அடிச்சு நீர் விலகுமா..?'' என்று தத்துவம் பேசுகிறார்கள்... என்னை சமாதானப்படுத்த!

என் அக்காக்களை எப்படி அனுசரிப்பது... ஒருவருக்குப் பிடித்து, மற்றவருக்குப் பிடிக்காதவராகப் போய்விட்டால் என்ன செய்வது... அல்லது, அவர்களைப் போலவே நானும் திருமணத்துக்குப் பின் 'சண்டைக் கோழி' என மாறிவிட்டால் என்னவாகும்?

இந்தக் குழப்பங்களும், தயக்கங்களும் திருமணம் பற்றிய அச்சத்தை எனக்குள் அதிகரிக்க... ''இந்த வரன் வேண்டாம்...'' என்று வெளிப்படையாகவே கூறிவிட்டேன். ஆனால், அதையும் மீறி கட்டாய கல்யாண ஏற்பாடுகளில் தீவிரமாகிக் கொண்டு இருக் கிறார்கள்.

என்ன செய்யட்டும் நான்..?!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

 சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 278ன் சுருக்கம்

'காவல்துறை எனும் பொறுப்பான துறையில் இருக்கும் என்னவர், மூத்தமகளின் வயதுடைய ஒரு பெண்மணியுடன் தற்போது குடும்பம் நடத்துகிறார். உயரதிகாரிகளிடம் புகார் செய்தபோது, 'இனி அப்படி நடந்து கொள்ளமாட்டேன்’ என்று நடித்தவர், தற்போது குடும்பத்தைவிட்டே ஒதுங்கிவிட்டார். பிறந்தவீட்டின் தயவு இருந்ததால்... நான்கு பெண் குழந்தைகளை படிக்க வைத்து, மூவருக்கு திருமணத்தையும் முடித்துவிட்டேன். ஆனால், கடைசி மகளுக்குத் திருமணம் செய்ய வழி தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறேன். இத்தனை துயரத்தில் நான் உழன்று கொண்டிருக்க, இன்னும் ஓராண்டில் ரிட்டயர் ஆக இருக்கும் நிலையிலும், எந்தக் கவலையும் இல்லாமல், வேறொருத்தியுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த நபரை தண்டிக்க மனது துடிக்கிறது. என்ன செய்யட்டும் தோழிகளே...?''

வாசகிகளின் ரியாக்ஷன்...

சட்டத்தை நாடு!

இத்தனை தூரம் உனக்கு அநீதி இழத்த கணவனை, சட்டப்படி தண்டிப்பதே சரியானதாக இருக்கும். மனித உரிமை அமைப்புகள் அல்லது இலவச சட்ட உதவி மையங்களை நாடினால்... நிச்சயமாக உனக்கு உதவுவார்கள். இதன் மூலம் கணவன் என்கிற உறவை நிலைநாட்டுவதைவிட, கட்டிய மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகளை அவனை செய்ய வைப்பதில்தான் உன் வெற்றி அடங்கியிருக்கிறது. இதுதான் நீ அவனுக்கு கொடுக்கும் உச்சகட்ட தண்டனை தோழி!

- என்.ரங்கநாயகி, கோயம்புத்தூர்

தண்டிக்காமல் விடாதே!

குட்ட குட்ட குனிவது வாழ்க்கையல்ல தோழி. உனக்கு எந்த ஒரு நன்மையும் பயக்காத அவனை விட்டு வைக்காதே. பதவி தரும் போதையில் தானே நடுத்தெருவில் விட்டுச் சென்றான் உன் கணவன். அவனை சட்டத்தின் மூலம் தண்டித்து நிராதரவாக்கு. மூன்று பிள்ளைகளை கரையேற்றிய உனக்கு இன்னும் ஒருவரை கரையேற்றுவதா பெரிது? நிச்சயம் அதற்கு வழி கிடைக்கும்!

 - அனிதா ஹரி, சேலம்

பென்ஷனையே கட் செய்யலாம் !

என் டைரி - 279 -கலங்க வைக்கும் கட்டாய கல்யாணம் !

 

இந்த விவகாரம் தொடர்பாக தஞ்சாவூரைச் சேர்ந்த வழக்கறிஞர் டி.முருகேசனிடம் கேட்டபோது, ''சகோதரிக்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பு நிறையவே இருக்கிறது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மூலமாகவே போதுமான அளவுக்கான நிவாரணத்தை பெற முடியும். முதலில் புகார் மனு அளிக்க வேண்டும். உடனடி விசாரணையை அடுத்து, இலாகாப்பூர்வமான ஒழுங்கு நடவடிக்கை கட்டாயம் இருக்கும். குறைந்தபட்சம், டிரான்ஸ்ஃபர் செய்வார்கள். இதன்பிறகும் அவர் மாறாமல் இருந்தால்... இன்க்ரிமென்ட் கட் செய்வது, தொடங்கி சஸ்பென்ட் வரைகூட போகலாம். அவருக்கு பென்ஷன் கிடைக்காத அளவுக்குக்கூட நடவடிக்கை எடுக்க முடியும்'' என்று சொன்னார்.