மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 281

கொல்லப்பட்ட மகள்...தாமதிக்கும் நீதி... தப்பிக்கும் மருமகன்!

வாசகிகள் பக்கம்

 ##~##

பறிபோன என் மகள் உயிருக்கு நியாயம் கேட்டு நிற்கும் நிராதரவான மூதாட்டி நான்!

எனக்கு வயது 72. என் கணவர் இறந்து 20 வருடங்களாகின்றன. எனக்கு மூன்று மகன்கள், ஒரு மகள். ஆசிரியை வேலை பார்த்த என் மகளுக்கு, 28 வயதில் திருமணம் முடிந்தது. அந்த நிம்மதியை அனுபவிப்பதற்குள், பிரச்னை கசிந்தது. அந்த மாப்பிள்ளைக்கும், அவனைவிட வயதில் மூத்த ஒரு டாக்டர் பெண்மணிக்கும் ஏற்கெனவே தொடர்பு இருந்திருக்கிறது. அது தொடர்ந்தும் இருக்கிறது. திருமணமான சில நாட்களிலேயே இதைத் தெரிந்துகொண்ட என் மகள் கேட்டபோது, 'வயசுல பெரியவங்கள அபாண்டமா பேசாதே’ என்று வாயை அடைத்திருக்கிறான்.

ஆனால், தொடர்ந்த நாட்களில் அவர் களின் தப்பான உறவு உறுதிபட்டது. இந்த அயோக்கியத்தனத்தைப் பொறுக்க முடியாத என் பெண், கணவனிடம் சண்டையிட் டிருக்கிறாள். ஆனால், பதிலாக கிடைத்தது அடி, உதைதான்! போலீஸில் புகார் செய்ய, அவனுடைய பணபலம் மற்றும் செல்வாக்கு காரணமாக நடவடிக்கை இல்லை. இன்னொரு பக்கம், என் மகள் மீதான உடல், மன துன்புறுத்தல்களும் தொடர்ந்தன.

என் டைரி - 281

ஒரு கட்டத்தில், என் மகள் மீதுதான் தவறு என்பதுபோல் சித்திரித்து, அவன் விவாகரத்து கேட்டான். ''தப்பை நீங்க பண்ணிட்டு, என்னைக் குற்றவாளியாக்கி விவாகரத்து கேட்டா, நான் ஏன் சம்மதிக்கணும்..?'' என்று மகள் உறுதியாக மறுத்துவிட, தினமும் அடி, உதை என சித்ரவதைப் படுத்தப்பட்டாள். உச்சபட்சமாக, என் மகளுக்கு மயக்க ஊசி போட்டு, வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டரை திறந்துவிட்டிருக்கிறான். தெளிந்து, தட்டுத்தடுமாறி எழுந்து மகள் லைட்டை போட, அதிலிருந்து வந்த மின்பொறி பட்டு தீப்பிடித்து, உடல் கருகி இறந்தேவிட்டாள் என் மகள்.

அவனை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். சில மாதங்களுக்குப் பிறகு ஜாமீனில் வெளியே வந்தவன்... இப்போது எங்களை மிரட்டிக் கொண்டிருக்கிறான். சம்பவம் நடந்து பலகாலம் ஆயிற்று. இப்போது கேஸை வாபஸ் வாங்கும்படி எங்களை மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள் அவனும் அவனைச் சார்ந்தவர்களும். 'ஆள், அதிகாரம் என பலத்தோடு இருப்பவனை எதிர்க்க வேண்டாம்' என நினைக்கும் என் மகன்கள், இந்த விஷயத்தில் ஒதுங்கியே நிற்க நினைக்கிறார்கள். இதனால் எனக்கு எந்த சப்போர்ட்டும் இல்லை. என்றாலும், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்நிலையிலும்... மகளின் சாவுக்கு நீதி கேட்டுக் காத்திருக்கிறேன் இந்தத் தாய்!

நியாயம் கிடைக்க வழி இருக்கிறதா எனக்கு..?!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

 சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 280ன் சுருக்கம்

என் டைரி - 281

''திருமணமான ஆறு மாதத்தில் கருத்தரித்திருந்த என்னை, விளம்பரங்களில் வரும் அழகுக் குழந்தைகள் எல்லாம் வசீகரித்தன. ஒரு நாள் பஸ்ஸில் சென்றபோது, கரு கலைந்து போக... உலகமே சூன்யமாகிப் போனது. அடுத்த குழந்தைக்காக காத்திருந்து... காத்திருந்து... ஏமாற்றமே மிஞ்சியது. ஊர் பேச்சுக்கு பயந்து, வெளிமாநிலத்துக்கு வேலைமாற்றல் வாங்கி, என்னையும் அழைத்து வந்துவிட்டார் கணவர். 'எப்படியும் நமக்கு குழந்தை பிறக்கும்' என்கிற நம்பிக்கையையும் தந்து கொண்டிருக்கிறார். ஆனால், 'இனி நமக்கு குழந்தை பிறக்காது' என்ற எண்ணம் எனக்குள் மேலோங்க, குழந்தையை தத்தெடுக்க நினைக்கிறேன். இது என் கணவருக்குப் பிடிக்கவில்லை. 'குழந்தை வேண்டும்' என்கிற என் தவிப்பை அவருக்கு எப்படி புரிய வைப்பது..?''

வாசகிகள் ரியாக்ஷன்...

எத்தனையோ வாய்ப்பிருக்கிறதே!

தத்து விஷயம் கணவருக்கு ஏன் பிடிக்கவில்லை என்கிற காரணத்தை தெரிந்துகொள். அவர் நிலை தவறு என்றால், அவரை தெளிவுபடுத்து. திருமணமாகி 7 வருடம் என்பது ஒரு பெரிய விஷயமில்லை. செயற்கை முறையில் எவ்வளவோ இடங்களில் குழந்தைப்பேறு பெற வாய்ப்பிருக்கிறது. அதில் முயன்று... நகமும், சதையுமாக உங்கள் வாரிசையே நீங்கள் பெற முடியுமே!

- எஸ்.கௌரிலஷ்மி, ஸ்ரீரங்கம்

நீயே கெடுத்துக் கொள்ளாதே!

திருமணமாகி ஆறு மாதங்கள் தாண்டினாலே... ஒரு மாதிரியாக பார்க்கும் உலகம் இது. ஓராண்டு முடிந்தால்... 'உன் தங்கையை கட்டி வை!' என்று அடுத்த திருமணத்துக்கு அடிபோட ஆரம்பித்துவிடும் இப்படிப்பட்ட சமுதாயத்தில் உன் கணவருக்கு கோயில் கட்டி கும்பிடலாம் என்றே சொல்ல வேண்டும். அவரை உன் குழந்தையாக நினைத்து வாழ்க்கையை இனிமையாக நகர்த்து. ஒருவேளை அவருடைய மனம் தானாகவே மாறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. அதற்குள்ளாக... உன்னை குழந்தைபோல் பார்த்துக்கொள்ளும் தாயுள்ளம்கொண்ட உன் கணவரை நோகடித்து... உன் வாழ்க்கையையும் நீயே கெடுத்துக் கொள்ளாதே!

- நீ.மட்டுவார்குழலி, பிச்சாண்டார்கோவில்

தத்து எடுங்கள்... வாழ்வு கொடுங்கள்!

என் டைரி - 281

நெல்லை அழகப்பன், முன்னாள் பெஞ்ச் உறுப்பினர், இளைஞர் நீதிமன்றக் குழுமம், சென்னை: குழந்தையை தத்து எடுப்பது நல்ல விஷயமே! காரணம்... ஆதரவற்ற ஒரு குழந்தைக்கு வாழ்வும் கிடைக்குமே! எனவே, கணவரிடம் நயமாக பேசி, தத்து எடுப்பதன் அவசியத்தை புரிய வையுங்கள். அதன்மூலம் இல்லற வாழ்வை அர்த்தமுள்ளதாக்க முடியும்!

தத்து எடுக்க வேண்டுமானால்... குறைந்தபட்சம் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். தம்பதியின் மொத்த (கூடுதல்) வயது 90 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். குழந்தையை வளர்க்க போதிய வருமானம் இருக்க வேண்டும். இத்தகைய தகுதிகள் இருந்தால்... அரசால் அங்கீகரிக்கப்பட்ட தத்தெடுப்பு மையத்தை அணுகி பதிவு செய்யலாம். ஆன்லைனிலும் பதிவு செய்யலாம். இதையடுத்து, 'உங்கள் வீட்டில் குழந்தை வளர்வதற்கு தேவையான ஆரோக்கிய சூழல் இருக்கிறதா?’ என்று அந்த மையத்தினர் நேரடியாக ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்வார்கள். அதன் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும்.

தமிழ்நாட்டில், 22 தத்தெடுப்பு தொண்டு நிறுவனங்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மேல் விவரங்கள் பெற... இயக்குநர், சமூக நலத்துறை அலுவலகம், 58, அருணாச்சலா தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2 என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண் 044:28454638. இணைய முகவரி http://www.tn.gov.in/adoption.