ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
Published:Updated:

அவள் தந்த வெற்றி !

துரத்தி வந்த விதி...விரட்டி அடித்த சவுதா !கு.ராமகிருஷ்ணன் படங்கள்: ர.அருண் பாண்டியன்

 ##~##

'கடுமையான உழைப்பாளி, நல்ல திறமைசாலினு      என்னை எல்லாரும் சொல்லு வாங்க. ஆனா, என் கஷ்டம் தான் இன்னும் நீங்கின பாடில்லை...’

- இப்படியான ஆதங்க பெருமூச்சுகள் கேட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. சரியான வழிகாட்டுதல் இல்லாததால்தான் இவர்களுக்கான வெற்றிக்கோடு, கண்களுக்கு எட்டாத தூரத்திலேயே நீடிக்கிறது. இவர்களுக்கு வழிகாட்டவே, கலங்கரை விளக்கமாக... 'மகளிர் திருவிழா', 'நீங்களும் தொழிலதிபராகலாம்!’ என்பது போன்ற தலைப்புகளில் தொழில் தொடங்குவதற்கான நேரடி பயிற்சி வகுப்புகளை, நிபுணர்கள் மூலமாக 'அவள் விகடன்’ நடத்தி வருகிறது. இதில் கலந்துகொண்ட பெண்களில் பலரும், வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்... சவுதா பேகம்.

தஞ்சாவூர் அருகேயுள்ள வல்லத்தைச் சேர்ந்த இவர், தன் வாழ்வில் நீண்ட நெடிய சோதனைகளை சந்தித்து,  கடும் போராட்டங்களுக்குப் பிறகு மீண்டு வந்திருக்கிறார். ''எங்க அப்பா ஒரு விவசாயி. என்னையும் சேர்த்து குடும்பத்துல மொத்தம் எட்டு பேர். நான் ஏழாவது வரைக்கும்தான் படிச்சு முடிச்சேன். உடனே கல்யாணமும் ஆயிடுச்சு. நான், என் கணவர், மாமனார், மாமியார், அவரோட சகோதரர்னு பெரிய குடும்பம். ஆனா, அதுக்கேத்த வருமானம் இல்லை. கணவர் நடத்தின டீக்கடையில குறைவான வருமானம் மட்டுமே கிடைச்சதால... ரொம்பவே கஷ்டப்பட்டோம். இதுக்கிடையில என் மாமியார் கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் படுத்த படுக்கையாவே கிடந்தாங்க. அவங்களுக்கான எல்லா பணிவிடைகளையும் நான்தான் கவனிச்சுக்கிட்டேன்.

அவள் தந்த வெற்றி !

இதெல்லாம் ஒரு பக்கம்னா... 'குழந்தை இல்லை'ங்கற ஏக்கம் இன்னொரு பக்கம் என்னை வாட்டி எடுத்துச்சு. பார்க்கறவங்க எல்லாம் அதையே கேப்பாங்க. ஹாஸ்பிட்டல்... ஹாஸ்பிட்டலா ஏறி இறங்கினேன். ஏழு வருஷத்துக்கு பிறகு... ஆண் குழந்தை, பிறகு ஒரு பெண் குழந்தைனு ரெண்டு குழந்தைங்க பொறந்துச்சு. ஆனா, சந்தோஷத்தைவிட, பணக் கஷ்டம் இன்னும் பல மடங்காச்சு.

தாக்குப் புடிக்கவே முடியாத சூழல்ல, சொந்தக்காரங்ககிட்ட ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கி, வீட்டுக்காரரை வெளிநாட்டுக்கு அனுப்பினேன். ஒரு கம்பெனியில குறைவான சம்பளத்துக்கு மாடா உழைச்சார். அது அவரோட செலவுக்கே சரியா இருந்துச்சு. இங்கே எனக்கு பயங்கரமான பணக்கஷ்டம். ரம்ஜான், பக்ரீத் சமயங்கள்ல சொந்தக்காரங்களுக்கு பிரியாணி, புரோட்டா செஞ்சு கொடுப்பேன். இதுமட்டுமில்லாம முஸ்லிம்கள் சாப்பிடக்கூடிய பலாகாரங்களான ஹாஜாபுரி, பதர்பேனி எல்லாம் செஞ்சு கொடுப்பேன். தீபாவளி, ஆடி மாதிரியான விசேஷ சமயங்கள்ல முறுக்கு, சுருள்பணியாரம்னு செஞ்சு கொடுத்து, அதுல கிடைச்ச வருமானத்துல, படாதபாடு பட்டுதான் குடும்பத்தை ஓட்டினேன்.

வெளிநாட்டுல இருந்த கணவர், 'இங்கேயே வேறொரு நல்ல கம்பெனிக்கு மாறிக்குறேன்... அதுக்கு 50 ஆயிரம் பணம் தேவைப்படுது’னு கேட்டார். மறுபடியும் சொந்தக்காரங்ககிட்ட கடன் வாங்கி அனுப்பினேன். ஆனாலும், வாழ்க்கையில சந்தோஷம் வந்தபாடில்லை. ஒரு கட்டத்துல கணவருக்கு ரொம்ப உடம்பு முடியாமப்போக, திரும்பி வந்துட்டார். ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு உடம்பு மெலிஞ்சிருக்க...  தனியார் ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சுக்கிட்டு போயி, டெஸ்ட் பண்ணி பார்த்தப்பதான் தெரிஞ்சுது... கேன்சர்னு. எவ்வளவு போராடியும் அவரைக் காப்பாத்த முடியல. பல நாட்கள் சின்ன அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன். 'கிட்டத்தட்ட 17 வருசமா படாதபாடு பட்டுட்டே... இனியாவது நல்ல வாழ்க்கை அமையட்டும்’னு என் கணவரோட உறவினர்களே, எனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வெச்சாங்க.

அவள் தந்த வெற்றி !

ரெண்டாவது கணவரோட பேர் ஜாபர் அலி. ஆட்டோ ஓட்டி அவர் சம்பாதிக்குற காசு... குடும்பச் செலவுகளுக்குப் போதும். ஆனா, நான் ஏற்கெனவே வாங்கியிருந்த கடன்களை அடைக்க..? எப்பதான் விடியும்னு இருந்தப்போதான், அவள் விகடனும் பெரியார் தொழில்நுட்ப வணிக காப்பகமும் சேர்ந்து நடத்தின 'நீங்களும் தொழிலதிபர் ஆகலாம்’ பயிற்சி முகாம்... வல்லம், பெரியார் பல்கலைக்கழகத்துல, 2010 நவம்பர்ல நடந்துச்சு. அதுல நான் கலந்துக்கிட்டேன்''

- இதுவரை சோகம் மட்டுமே நிரம்பியவரின் வாழ்க்கையில், இங்குதான் வசந்தம் ஆரம்பிக்கிறது.

''முறுக்குப் பிழிய, இயந்திரம் எல்லாம் இருக்குனு அங்கதான் தெரிஞ்சுக்கிட்டேன். நேரம் மிச்சம்... உடலையும் வறுத்திக்க வேண்டியதில்லை. இதுமட்டுமில்லாம, சுருள் பணியாரம், எள்ளடை, தேங்காய் முறுக்குனு இன்னும் விதவிதமான பலகாரங்களை செஞ்சு, மக்களை ஈர்க்குற மாதிரி பாக்கெட்ல போட்டு விற்பனை செஞ்சா... மிகப்பெரிய அளவுல லாபம் பார்க்கலாம்ங்கற யோசனையையும் அங்கதான் சொன்னாங்க. காலேஜ் கேன்டீன், பொருட்காட்சிகள்லயும் நல்ல வரவேற்பு கிடைக்கும்னு சொன்னாங்க. தமிழ்நாடு முதலீட்டு கழகம் மூலமா 70 ஆயிரம் ரூபாய் லோனும் கிடைச்சுது.

நவீன இயந்திரங்கள் வாங்கவும், தரமான மூலப்பொருட்களை குறைவான விலையில வாங்கவும், என்னோட ஸ்நாக்ஸ் அயிட்டங்களை பெரிய அளவுல விற்பனை செய்யவும் பெரியார் டி.பி.ஐ-யைச் சேர்ந்த அருணா மேடம்,    ராமசாமி தேசாய் சார் இவங்கள்லாம் நிறைய உதவிகள் செஞ்சாங்க. நான் தயாரிச்ச ஸ்நாக்ஸ் அயிட்டங்களை என்னோட கணவர் ஆட்டோவுல கொண்டு போயி காலேஜ் கேன்டீன், பேக்கரி, மளிகை கடைகளுக்கு சப்ளை பண்ணிடுவார். எல்லா செலவுகளும் போக, மாசம் 25 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்குது. அவள் விகடனாலதான் எனக்கு வாழ்க்கையில முதல் முறையா சந்தோஷமும், இந்தளவுக்கு மிகப்பெரிய வெற்றியும் கிடைச்சுருக்கு!''

- நன்றியுடன் நம் முகம் பார்த்தார் சவுதா பேகம்!

பதிவு செய்யுங்கள் தோழிகளே!

'அவள் விகடன்' நடத்தும் பயிற்சி வகுப்புகள், 'அவள் விகடன்' இதழில் வெளியாகும் தன்னம்பிக்கை கட்டுரைகள் போன்றவற்றின் மூலமாக, இன்றைக்கு வெற்றிப் படிக்கட்டில் ஏறி... வீறுநடைபோட்டுக் கொண்டிருப்பவரா நீங்கள்? உங்களின் வெற்றிப் பயணம்,

மேலும் பல தோழிகளுக்கு வழிகாட்டியாக இருக்கும்தானே! உங்களைப் பற்றி 'அவள் விகடன்' இதழில் பதிவு செய்யக் காத்திருக்கிறோம். உங்களின் பெயர்,

முகவரி, தொடர்பு எண்கள், இ-மெயில் முகவரி, செய்துவரும் தொழில், குடும்பம் பற்றி

எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அல்லது 044-66808003 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு உங்கள் குரலிலேயே பதிவு செய்யுங்கள். இ-மெயில் மூலமாகவும் அனுப்பி வைக்கலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'அவள்' தந்த வெற்றி!
அவள் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை-600 002
இ-மெயில் முகவரி: aval@vikatan.com