ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
Published:Updated:

அன்று ஒரே ஒரு கடை... இன்று இந்தியாவுக்கே சப்ளை !

இரா.முத்துநாகுபடங்கள்: பா.காளிமுத்து

##~##

''நாங்க ஒரு மளிகைக் கடை வெச்சுருந்தோம். கடைக்கு கடலை மிட்டாய் சப்ளை பண்றவர், திடீர்னு வராமப் போனதால... கடலை மிட்டாயை வீட்டுலயே பிடிச்சு கடையில வெச்சோம். அங்க ஆரம்பிச்சது... இப்போ கடலை மிட்டாய் தொழில்ல இந்தியா முழுக்க சப்ளை பண்ற அளவுக்கு வளர்ந்திருக்கோம். 'ஏதோ சினிமா கதை போலவுல இருக்கு..?!’னு எல்லாரும் ஆச்சர்யப்படும்போது, அவுங்களோட சேர்ந்து நாங்களும் எங்களை நினைச்சு ஆச்சர்யப்பட்டுக்குறோம்!''

- வாய்விட்டுச் சிரிக்கிறார் வள்ளிமயில். இந்தியா முழுக்க இன்று சப்ளை பாய்ந்து கொண்டிருக்கும் 'பாரத் கடலை மிட்டாய்’ நிறுவனத்தின் நிர்வாகி.

மதுரை, ஊமச்சிகுளத்தில் உள்ள அவர் நிறுவனத்தில் மெல்லிசையாக ஒலிக்கும் பக்திப் பாடல்களைக் கேட்டபடியும், எங்கு திரும்பினாலும் புகைப்படத்தில் சிரிக்கும் காந்திஜியை பார்த்தபடியும் காத்திருந்தோம். மிட்டாய் தயாரிப்புக்கான கலவை போடுவதிலிருந்து, பேக்கிங் செய்வது வரை அந்த நிறுவனத்தில் அனைவரும் பெண்கள் என்பதை நாம் ஆச்சர்யத்துடன் கவனிக்க, மேற்பார்வையில் இருந்தார் வள்ளிமயில். கடலை, எள் என்று குவித்து வைக்கப்பட்டிருந்த மூலப்பொருட்களின் தன்மையை கையால் நசுக்கிப் பார்த்தவர், 'சரி!’ என தலை ஆட்டினார். அடுத்து, கருப்பட்டி வட்டுகளை தன் நாக்கும் மூக்கும் சோதித்து 'ஓ.கே' சொல்ல, திருப்தியுடன் நம்முன் வந்து அமர்ந்தார்.

அன்று ஒரே ஒரு கடை... இன்று இந்தியாவுக்கே சப்ளை !

அறுபதை கடந்த வயதின் பக்குவத்தை வார்த்தைகளிலும் வெளிப்படுத்துகிறார் வள்ளிமயில். ''சொந்த ஊரு திண்டுக்கல். ஆரம்பத்துல அங்கதான் மளிகைக் கடை வெச்சுருந்தோம். என் வீட்டுக்காரர் கணேசன் கூடப் பிறந்தவங்க மூணு பொண்ணுங்க, ஒரு பையன். எங்களுக்கு கல்யாணம் ஆன கொஞ்ச நாள்ல என் மாமனார் இறந்துட்டதால, குடும்பச் செலவு மொத்தமும் மளிகைக் கடையை நம்பித்தான். என் வீட்டுக்காரர் ஒரு காந்தியவாதி. அதனால் கடையில குறைந்த லாபத்துக்கே பொருட்களை விற்கணும்னு உறுதியா இருந்தார். இதனால 'நியாய விலைக் கடை'னுதான் ஊருல சொல்லுவாங்க.

கடை பக்கத்துல பள்ளிக்கூடம் இருந்தது. இப்ப மாதிரி விதவிதமா மிட்டாய் இல்லாத அந்தக் காலத்துல, பிள்ளைங்க எல்லாம் கடலை மிட்டாயத்தான் விரும்பி வாங்கிச் சாப்பிடுமுங்க. ஒரு தடவை, எங்க கடைக்கு மிட்டாய் போடுறவருக்கு உடம்புக்கு முடியாம போக, சரக்குப் போட ஒரு மாசம் ஆகும்னு சொல்லிட்டாரு. இருப்பு மிட்டாயும் தீர்ந்து போச்சு. தெனமும் கடலை மிட்டாய் வாங்க வந்துட்டு சின்னதுங்க ஏமாந்து திரும்பிப் போனது மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு.

அன்று ஒரே ஒரு கடை... இன்று இந்தியாவுக்கே சப்ளை !

மறுநாள், கடையில இருந்த நிலக்கடலை பருப்பை எடுத்து வறுத்து, சுக்கு தட்டி போட்டு, வட்டு கருப்பட்டியை காய்ச்சி, கடலை உருண்டை பிடிச்சு வெச்சிருந்தேன். மளிகைக் கடைக்கான சரக்கை மதுரையிலஇருந்து வாங்கிட்டு வந்த என் வீட்டுக்காரர் வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் கடலை மிட்டாயைப் பார்த்துட்டு, 'என்ன நம்ம வீட்டுக்கு காந்தி வரப்போறாரா, கடலை உருண்டை இருக்கு..?’னு சொல்லிக்கிட்டே ஒண்ண எடுத்து வாயில போட்டாரு. 'பிரமாதம்! இத செஞ்ச கைக்கு, தங்க வளையல் வாங்கிப் போடணும். யாரு கொடுத்தா?’னு கேட்க, நான் விஷயத்தை சொன்னேன். 'இனி நம்ம கடைக்கு நாமளே மிட்டாய் தயாரிப்போம்!’னு சொன்னார்''

- அந்த இரவில்தான் ஆரம்பித்திருக்கிறது அவர்களுக்கான வெளிச்சம்.

''வீட்டில் இருந்த என்னோட மூணு நாத்தனார், நான்... எல்லாருமா சேர்ந்து கடலை மிட்டாய் போட்டு கடையில வெச்சு வித்துட்டு இருந்தோம். திடீர்னு ஒருநாள் என் வீட்டுக்காரர், 'இதையே நாம இன்னும் பெரிய அளவுல செஞ்சு, திண்டுக்கல், மதுரைனு கடைகளுக்குப் போடுவோமா..?’னு கேட்டார். அது நல்ல யோசனையா பட, வீட்டுல இருந்த ஆளுங்களே ராத்திரி பகல்னு வேலை பார்த்தோம். என் வீட்டுக்காரர் ரயில்ல சரக்கை எடுத்துட்டுப் போய் மதுரையில இருக்கற கடைகளுக்குப் போட்டு வசூல் பண்ணிட்டு வருவார். நானும் என் கொழுந்தனும் திண்டுக்கல்ல இருக்கிற கடைகள்ல போடுவோம். ரெண்டு வருசம் வரவுக்கும் செலவுக்கும் சரியா இருந்துச்சு''

அன்று ஒரே ஒரு கடை... இன்று இந்தியாவுக்கே சப்ளை !

- தொழிலில் ஒரு சின்ன ஏணி இப்போது கிடைத்திருக்கிறது இவர்களுக்கு.

''ஒருநாள், மதுரைக்குப் போயிட்டு திரும்பி வந்தவரு, 'காந்தி படம் போட்டு ஏமாத்துறவங்கதான் அதிகம். ஆனா, கணேசா உன் சரக்கு சுத்தமா இருக்கு. கடலை உருண்டையோட எள் மிட்டாயும் போட்டுக் கொடுனு விருதுநகர் வியாபாரிகள் கேட்டாங்க. சரினு சொல்லிட்டு வந்திருக்கேன். சரக்கு கொடுக்கறது உங்க கையிலதான் இருக்கு!’னு சொல்ல, எங்களுக்கு சந்தோஷம் தாங்கல.

விருதுநகருக்கு போய் சம்சாரிககிட்ட நேரடியா எள், கடலையை வாங்கிட்டு வருவார். கருப்பட்டிக்கு பேர் போன வேம்பாருக்கு போய் அங்கேயே மொத்த சாமான் வாங்கிட்டு வருவார். சரக்கோட தரமும் ருசியும் சக்கை போடு போட, ஆர்டர்கள் குவிஞ்சுது. நாத்தனார்களை நல்லபடியா கல்யாணம் பண்ணிக் கொடுத்தோம். ஒரு கட்டத்துல சப்ளை செய்ய முடியாத அளவுக்கு ஆர்டர் குவியவே... நாத்தனார்கள் மூணு பேரும், 'இந்தத் தொழில்ல சேர்ந்துக்குறோம்!’னு எங்க வீட்டோடயே இருந்து வேலைகள் பார்த்துக் கொடுத்தாங்க'' என்றவர், 'குடிசைத் தொழில் டு கம்பெனி’யான கதையை தொடர்ந்தார்...

அன்று ஒரே ஒரு கடை... இன்று இந்தியாவுக்கே சப்ளை !

''இனியும் குடிசைத் தொழிலா பண்ண முடியாதுங்கற அளவுக்கு வியாபாரம் பெரிசாகவே... திண்டுக்கல் வீடு, இடத்தை எல்லாம் வித்துட்டு 18 வருஷத்துக்கு முன்ன ஊமச்சிகுளத்துல இந்த இடத்தை வாங்கி கம்பெனி கட்டினோம். 50 பெண்களுக்கு வேலை கொடுத்தோம். தமிழ்நாடு முழுக்கவே சப்ளையை விரிவுபடுத்தினோம். இந்த கம்ப்யூட்டர் தலைமுறையைக் கவர கவச்சியான பேக்கிங்குக்கு மாறியிருக்கோம். மிட்டாயையும் வழக்கமான தடிமன் வடிவத்தை மாத்தி, மெல்லிசா கொடுக்கிறோம். எங்களோட தயாரிப்பு இப்போ இந்தியா முழுக்க பரவிட்டு இருக்கு'' என்றவர், காந்தியின் ’ராம ராஜ்ஜியம்’ புத்தகத்தை கையில் எடுத்துக் கொண்டார்.

''கோடிக்கணக்கா முதலீடு செய்து பத்து பேருக்கு வேலை கொடுக்கற பன்னாட்டு நிறுவனத்தைவிட, சில லட்சங்கள் முதலீடு செய்திருக்கிற நாங்க தினமும் நூறு பேருக்கு, அதுவும் பெண்களுக்கு வேலை கொடுக்கிறோம். இதுதான் காந்தியின் மனித ஆற்றல் தத்துவம். இதை நாங்க செயல்படுத்த முடிஞ்சதுக்கு மூல காரணம் என் வள்ளிதான்!''

- கணேசன் முத்தாய்ப்பாய் முடிக்க, சந்தோஷமும் பெருமிதமும் வள்ளிமயிலின் முகத்தில்!