ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
Published:Updated:

அட அத்திப்பூ !

எஸ்.ஷக்தி படங்கள்: க.ரமேஷ்

##~##

''பண வரவுக்காக மட்டுமில்லாம, மன நிறைவுக்காகவும் பிஸினஸ் பண்றது அத்தனை சந்தோஷமான விஷயம்..! மக்களுக்குப் பிடிச்சதுனு மட்டுமில்லாம... என்னோட மனசுக்குப் பிடிச்சதையும் நாடு முழுக்க அலைஞ்சு திரிஞ்சு வாங்கி விற்பனை பண்ணிட்டிருக்கேன். இந்த டீலிங் ரொம்ப சக்சஸ்ஃபுல்லா போயிட்டிருக்குது!''

- ரசித்துப் பேசுகிறார் தமிழ்ப்ரியா.

ஈரோடு நகரிலிருக்கும் பெரியார் நகரின் வழியே செல்லும் எந்தக் கண்களும் 'அத்திப்பூ’ ஷோரூமை தவிர்க்க முடியாது. பிளிறத் தயாராக நிற்கும் யானை, புன்னகையுடன் அமர்ந்திருக்கும் புத்தர், வெப்பம் உமிழாத சூரியன் என்று வாசலிலேயே ரசனைகள் நிறைந்து வழிகின்றன.

நான்கு எட்டு வைத்து உள்ளே சென்றால்... பிரமிப்பு உங்களை ஆக்கிரமிப்பது உறுதி! கரிய நிறத்தில் ஓங்கி நிற்கும் பழங்குடியினர் சிலைகள், புன்னகைக்கின்றனவா அல்லது பரிகாசம் செய்கின் றனவா... எனப் புரிந்துகொள்ள முடியாத சுடுமண் குதிரைகள், மரமும் இரும்பும் சேர்ந்து தயாரான அரியணை டைப் இருக்கைகள் என்று வகை வகையாக நிறைந்து கிடக்கின்றன. நாம் லயித்துப் போய் பார்த்துக் கொண்டிருக்கையில் விநாயகர் சிலைகளுக்கு இடையிலிருந்து முகம் காட்டி ''ஹலோ!'' சொல்கிறார், 'அத்திப்பூ’ கைவினை அங்காடியின் உரிமையாளர் தமிழ்ப்ரியா. இவர்,  ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி- யான கணேசமூர்த்தியின் (ம.தி.மு.க.) மகள் என்பது கூடுதல் தகவல்.

அட அத்திப்பூ !

ரசனையான ஒரு தொழிலை வெற்றிகரமாக எடுத்துச் செல்லும் சந்தோஷத்தை நம்மிடம் பேசினார் தமிழ்ப்ரியா! ''சின்ன வயசுல இருந்தே கலை மற்றும் பாரம்பரியமான பொருட்கள் மேல எனக்கு நிறைய ஈர்ப்பு. எட்டாவது, ஒன்பதாவது படிக்கும்போதிருந்தே எழிலான பொருட்களை கலெக்ட் பண்ண ஆரம்பிச்சேன். கல்லூரிப் படிப்பு, திருமணம், குழந்தைனு லைஃப்ல அடுத்தடுத்த நிலைக்கு போனாலும், இந்த குணம் கூடவே வந்துட்டிருந்துச்சு.

எம்.பி.ஏ. படிச்ச எனக்கு, என்னோட ரசனையை பிஸினஸாக்குற எண்ணம் ஆரம்பத்துல இல்லை. ஆனா, அப்பா எம்.பி-யானதும் முதல் தடவையா டெல்லி போயிருந்தேன். டெல்லி டூரிஸத்தோட கைவினைப்பொருள் மையத்தை பார்த்து பிரமிச்சுட்டேன். அங்கதான் இந்த பிஸினஸ் பொறி உருவாச்சு...''

- சீரான இடைவெளிகள் நிரப்புகிறார் பேச்சில்.

அட அத்திப்பூ !

''ஊர் திரும்பினதும்... கிட்டத்தட்ட ஏழெட்டு மாசங்கள் பொறுமையா ஆராய்ச்சி பண்ணினேன். நம்மோட பிஸினஸ் சென்டருக்குள்ளே வரக்கூடிய ஒவ்வொரு பொருளும் ஒரிஜினலா, அதுக்கு பிரசித்தமான பகுதியில இருந்து வரவழைக்கப்பட்டதா இருக்கணும்ங்கிறத பாலிஸி மேட்டரா வெச்சுக் கிட்டேன். இந்தியா முழுக்க இருக்க அந்த மாதிரியான பகுதிகளுக்கு நேரடியாவே போய், தயாரிப்பாளர்களா பார்த்து பேசி, கல்யாணத் துக்கு நகை வாங்குற மாதிரி பொறுக்கி எடுத்து வாங்கினேன். அதையெல்லாம் வெச்சு போன வருஷம் இந்த 'அத்திப்பூ' அங்காடியைத் துவக்கினேன்.

ரவி, சூர்யானு எனக்கு இந்த புராஜெக்ட்ல உதவுறதுக்கு ரெண்டு பேர் இருக்காங்க. கஷ்டப்பட்டு நாங்க சேகரிக்கிற பொருட்களை, கஸ்டமர்கள் 'சூப்பர்!’னு பாராட்டி வாங்கிட்டு போறப்ப எல்லா வலியுமே பறந்துடும்'' என்றவர், இரண்டு கஸ்டமர்களை அட்டெண்ட் செய்ய அவகாசம் வாங்கிச் சென்று, மீண்டும் வந்தார்.

''தமிழ்நாட்டைப் பொறுத்த வரைக்கும் தெற்குப் பக்கம் பனை ஓலையில செய்யப்படுற சின்னக் கூடைகள், கிலுகிலுப்பைகள் கிடைக்கும். ஆனா, இந்தத் தொழில் அழிஞ்சுட்டு வர்றது பெரிய வருத்தம். ஒரிஜினல் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளும் இப்போ கிடைக்கறதில்லை. இந்த தொழில்ல நிரந்தர வருவாயோ, வளர்ச்சியோ இல்லாததால கூலி வேலை, ஆட்டோ ஓட்டுறதுனு போயிட்டுஇருக்காங்க!'' என்றபோது தமிழ் ப்ரியாவின் குரலில் ஆதங்கம்.

''வெறும் பத்து ரூபாய் மதிப்புள்ள குங்குமச் சிமிழ்ல இருந்து ஒரு லட்ச ரூபாய் மதிப்புடைய தூரி (நான்கு தூண்களுடன் கூடிய ஊஞ்சல்) வரைக்கும் இங்கே இருக்குது. இந்த பிஸினஸ்ல பண வரவு, மன நிறைவு ரெண்டுமே இருக்கிறது பெரிய சந்தோஷம். இனி, தென்இந்தியா முழுக்க குறைஞ்சது பதினைஞ்சு கிளைகளை ஆரம்பிக்கணும். 'அத்திப்பூ’வுக்குனு மிகப்பெரிய பிராண்ட் நேம் உருவாக்கணும்''

- கனவு சொல்லி முடிக்கிறார் கலைக் காதலி!

வாழ்த்துக்கள்!