ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
Published:Updated:

ரொமான்ஸ் ரகசியங்கள்!

டாக்டர் ஷாலினி !படங்கள்: அருண் டைட்டன்

##~##

இந்தப் பெண்ணின் கதையைக் கேளுங்கள்!

அவள் பெயர் கண்ணகி. முதலிரவு அன்று அவளிடம் நிறைய நேரம் பேசினான் கணவன். ''நான் ரொம்ப மாடர்ன்... ஸோ, எங்கிட்ட ஃப்ராங்கா பேசு. நான் புரிஞ்சுப்பேன்'' என்று ஆரம்பித்து இத்யாதி இத்யாதி பேசிவிட்டு, இறுதியாகக் கேட்டான்... ''நீ யாரையாச்சும் லவ் பண்ணிருக்கியா..?''

நாகரிகமான எவனாவது, இதை முதல் இரவன்று கேட்பானா? அப்போதே  பெண்ணுக்கு இது உரைத்திருக்க வேண்டாமா? கண்ணகி என்று பெயர் வைத்தாலே ஏமாளியாகத்தான் இருப்பார்களோ என்னவோ... தன் மனதை அவனிடம் திறந்து வைத்தாள்.

''ம்... என் கிளாஸ்மேட், என்னை லவ் பண்ணினான்.''

''நீயும் அவனை லவ் பண்ணியா?''

''ம்.''

அடுத்தடுத்து அவன் மனதில் கேள்விகள் முளைத்தன. இவளாவது 'இல்லை’ என்று பதில் சொல்லி, பேச்சை  நிறுத்தியிருக்கலாம். ஆனால்...

''லவ் பண்ணிங்கனா... எவ்வளவு தூரம் போனீங்க..?''

''தனியா எங்கேயுமே போனதில்லை. காலேஜுல பார்த்துக்கறதோட சரி.''

''நான் கேட்டது, செக்ஸ் ஏதாவது..?''

''சே சே... அதெல்லாம் இல்ல.''

''கட்டிப் பிடிக்கிறது, கிஸ்..?''

''ஒரே ஒரு தடவை... நாங்க காலேஜ் டிரிப் போனப்போ கிஸ் கொடுத்தான்.''

அவ்வளவுதான். 'எங்கே கிஸ் கொடுத்தான், எப்படி கொடுத்தான், எத்தனை தடவை கொடுத்தான்' என்று கேள்விகளாக பறக்க, குரல் நடுங்க எல்லாவற்றுக்கும் பதில் சொன்னாள்.

''ஒரே ஒரு தடவை. லைட்டா லிப்ஸ்ல. வேற எப்பவும் இல்ல.''

''அப்ப, உனக்கு என்ன தோணுச்சு?''

''பயமா இருந்துச்சு.''

''பிடிச்சிருந்ததா?''

அரண்டு போனாள் கண்ணகி.

''ஏன் இவ்வளவு கேட்கறீங்க..? உங்களப் பத்தி நான் எதுவுமே கேட்கலையே?''

ரொமான்ஸ் ரகசியங்கள்!

''நான் ஆம்பள. தப்பு பண்ணினாலும் பரவாயில்லை. நீ பொம்பளை. சரி விடு. இதுக்கு மேல வேற ஒண்ணும் நடக்கலைனா போதும்!'' என்று, அத்தோடு விட்டான்.

ஆனால், முதல் இரவில் கண்ணகியுடன் அவன் உறவாடவில்லை. தொடர்ந்த ஒரு வாரமும் அவளை அவன் தொடவில்லை. அதன் பிறகு, தேன்நிலவுக்குச் சென்றபோதுதான், முதன் முதலில் ஒரு முத்தமிட நெருங்கினான். முத்தமிட்டு நிமிர்ந்தவன் சட்டென அவள் கண்கள் பார்த்துக் கேட்டான்...

''அவனும் இப்படித்தான் கொடுத்தானா?''

அவன் கண்களில் கனன்ற உணர்வு... கண்ணகிக்கு அப்போதுதான் புரிய ஆரம்பித்தது. 'நானே வம்பை விலை கொடுத்து வாங்கிட்டேனோ..?’

எத்தனைபேர் இந்தக் கண்ணகி போல் வெகுளியாக இருந்திருக்கிறீர்கள் தோழிகளே..?! பெண்களிடம் இருக்கும் பொதுவான, மிக மோசமான கெட்ட பழக்கம்... தேவையில்லாமல் பேசி, சிக்கலில் சிக்கிக்கொள்வது. அதுவும் தனக்கே தனக்கென்று ஓர் ஆண் கிடைத்துவிட்டான் என்கிற எண்ணம் குடிகொண்டால் போதும், 'ஒட்டுமொத்த வாழ்க்கை வரலாற்றையும் அப்படியே அக்குவேறு ஆணிவேறாக ஒப்பித்தே ஆவது!’ என்பது மாதிரி வேண்டாத சென்டிமென்ட் இவர்களை ஆட்டிப் படைக்கிறது.

சின்ன வயதில் தன்னைத் தொடக்கூடாத இடத்தில் கிள்ளி வைத்த எதிர் வீட்டு அங்கிள் முதல், முதன்முதலில் தனக்கு முத்தம் கொடுத்த டியூஷன் வீட்டு அண்ணன், தன்னுடைய சின்ன வயது காதல், துரத்தி துரத்தி காதலித்த கல்லூரித் தோழன்... எல்லா சமாசாரத்தையும் உளறிக் கொட்டுவதில் பெண்கள் ரொம்பவே ஸ்பெஷலிஸ்ட்! ஆனால், ஆண்கள் இப்படி வெளிப்படையாக இருப்பது ரொம்ப ரொம்ப அபூர்வம்! ஆணோ... பெண்ணோ... பல பேர் பருவ வயதில் இப்படிப்பட்ட அனுபவங்களைக் கடந்துதான் வந்திருப்பார்கள்.

ரொமான்ஸ் ரகசியங்கள்!

'ஏன்... அதை எல்லாம் சொல்லக் கூடாதா? உறவென்று வந்துவிட்டால் உண்மையாக இருக்க வேண்டாமா?’

- கேள்விகள் மனதில் தோன்றுகிறதா?

அதற்காக... உறவின் முதல் சில வாரங்களிலேயே, உங்கள் வாழ்வில் நடந்தவை என்று கண்டதையும் சொல்லி, பாவம் அவன் மனதை காயப்படுத்தாதீர்கள்.

ரொமான்ஸ் ரகசியங்கள்!

எதையும் பேசுவதற்கு முன்பு, இது அவசியம்தானா? இதைச் சொன்னால் என்ன பயன்? இது எந்த விதத்திலாவது இந்த உறவை பலப்படுத்த உதவுமா? துணைவர்களாக, பெற்றோர்களாக இன்னும் மெருகேறுவோமா? என்று மனதுக்குள் யோசியுங்கள். அங்கே 'ஆம்' என்று பதில் வந்தால் மட்டும் எதையும் சொல்லி வையுங்கள்.

உங்கள் வாழ்வில் எது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். உங்கள் மனதில் எது வேண்டுமானாலும் உதயமாகலாம். அதை எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம், உங்கள் மனநல மருத்துவர் ஒருவருக்கு மட்டும்தான் உண்டு. அதுவும் உங்கள் சிகிச்சைக்கு அது உதவும் என்றால் மட்டும்தான். மற்றபடி தாயும் பிள்ளையும் என்றானாலும்கூட, பர்சனல் வேறு; பப்ளிக் வேறு.

சிலர், புரியாத வயதில் 'எல்லை' களை மீறி நடந்திருக்கலாம். சிலர், ஒருவரை அல்லது சிலரை விரும்பி இருக்கலாம். ஓரளவுக்குத் தொட்டுப்பழகி இருக்கலாம். இதனால் உங்கள் காதலனுக்கு, கணவனுக்கு என்ன வந்தது? இதனால் மனைவியின் கடமைகளை நீங்கள் செய்வதில் ஏதாவது குறை வந்துவிடுமா? அல்லது நீங்கள் ஒரு நல்ல தாயாகவோ, மருமகளாகவோ இருக்கத் தவறிவிடுவீர்களா?

உங்கள் காதலன் அல்லது கணவன் என்கிற ஸ்தானத்தை ஒருவன் வகிக்கிறான் என்றால், அவனை உடனே உங்கள் எஜமானன், குரு, நீதிபதி என்றெல் லாம் நினைத்து விடாதீர்கள்.

தன் மனைவியை, வேறு யாரும் பார்வையால்கூட தொட்டிருக்கக் கூடாது என்று நினைக்கும் ஓர் இம்மெச்சூர் ஆசாமியாக அவன் இருக்கத்தான் நம் கலாசாரம் அவனை பயிற்றுவிக்கிறது. அவன் யார், எப்படிப்பட்டவன், எதை, எப்படி எடுத்துக் கொள்ளும் தன்மை படைத்தவன் என்பதெல்லாம் அவனோடு ரொம்ப காலம் பழகிய பிறகுதானே தெரியும்! 'நாம் சொல்லும் தகவலைத் தாங்கிப் பிடித்து உள்வாங்கிக் கொள்ளும் கொள்ளளவு அவன் மனதுக்கு இருக்கிறதா?' என்று ஆழம் பார்க்காமல் வாய்க்கு வந்ததை உளறிக் கொட்டினால்... அது எவ்வளவு பெரிய பின்விளைவு களை ஏற்படுத்தும் தெரியுமா?

காலப்போக்கில் அவனுடைய கண்ணியமும் புரிந்து கொள்ளும் பக்குவமும் தெரியவரும்போது, அவசியம் இருந்தால் உங்கள் வரலாற்றின் சில பக்கங்களை அவனோடு பகிர்ந்து கொள்ளலாம். அப்போதும் அது ஒரு மாற்று மட்டுமே. கட்டாயம் இல்லை.

எப்போது வேண்டுமானாலும் பிரிந்து போகும் சுதந்திரம் இருவருக்குமே உண்டு. பிரிந்த பிறகு, நீங்கள் சொல்லி வைத்த ரகசியங்களைக் கொண்டே உங்களை அடுத்தவர் அச்சுறுத்த முடியும். அதுமாதிரி எவ்வளவோ சம்பவங்களை தினமும் பார்க்கிறோமே.

அதனால், எடுத்த எடுப்பிலேயே எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறேன் பேர்வழி என்று பழைய குப்பைகளைக் கிளறிக் கொட்டாதீர்கள். அதைப் பற்றிப் பேசி நேரத்தை வீணடிக்காமல், சந்தோஷமாக வாழ முயலுங்கள். அளந்து பேசி, ஆனந்தமாக இருக்க முயலுங்கள்.

- நெருக்கம் வளரும்...

படங்களில் இருப்பவர்கள்  மாடல்களே