ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
Published:Updated:

மரம் காக்க...சிரம் தந்தாள் !

ஆர்.ஷஃபி முன்னா படங்கள்: எஸ்.சபா

##~##

இந்த உலகில் நடந்த வீர உயிர்த் தியாகங்கள் கணக்கில் அடங்காதவை. சுமார் 280 ஆண்டுகளுக்கு முன், அப்படி சுற்றுச்சூழலை காக்க ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண் முன்னெடுத்த தியாகம், 363 உயிர்களின் தியாகத்துடன் முடிவடைந்தபோது... மொத்த மக்களும் ஸ்தம்பித்து வியந்தனர். அதை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் செப்டம்பர்-25 அன்று 'கேஜர்லி மேளா’ எனும் பெயரில் அஞ்சலி நிகழ்ச்சி நடக்கும். ஜோத்பூர் அருகேயுள்ள கேஜர்லி கிராமத்தில் இதற்காக இந்த ஆண்டு கூடிய பல்லாயிரக்கணக்கான மக்களுடன் நாம் கலந்துகொண்ட அனுபவம்... மகானுபவம்!

ராஜஸ்தானின் பிகானேர் எனும் ஊரில் பிறந்த குரு ஜம்பேஷ்வர் என்பவரால் கி.பி 1,455-ல் உருவானது பிஷ்னோய் எனும் சமூகம். விலங்குகளை நேசிப்பது மற்றும் வனவளத்தை காப்பது உட்பட 29 கொள்கைகளைக் கொண்டது இச்சமூகம். இந்தக் கொள்கைகள், அம்மக்களின் வாழ்க்கையிலும்  கடைப்பிடிக்கப்படுகின்றன என்பதற்கு சாட்சிதான், கி.பி 1,731-ல் கேஜர்லி யில் நடந்த அம்ருதாதேவியின் அரிய தியாகம்!

ஜோத்பூரை ஆட்சி செய்த மார்வார் மகாராஜா அபய்சிங், கோட்டை கட்டுவதற்காக வன்னி மரம் (கேஜர்லி) வெட்டி வரச்சொன்னார். அமைச்சரான கிரிதர்தாஸ் பண்டாரி, படையுடன் சென்று, ஜோத்பூரை சுற்றி வாழும் பிஷ்னோய் சமூகத்தினரின் பகுதியில் இருந்த மரங்களை வெட்டத் துவங்க, தன் வீட்டில் வெண்ணெய் கடைந்து கொண்டிருந்த ஐம்பது வயது அம்ருதாதேவி அதிர்ச்சி அடைந்தார். தன் மூன்று மகள்களுடன் அங்கு வந்தவர், மரம் வெட்ட கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

மரம் காக்க...சிரம் தந்தாள் !

பணம் கொடுப்பதாக அமைச்சர் ஆசை காட்டியும், அம்ருதா மசியாத நிலையில், 'உன் தலையை சீவிவிட்டு மரங்களை வெட்டுவேன்' என்று மிரட்டினான் பண்டாரி. 'ஒரு மரத்தைக் காக்க என் தலை சீவப்படுகிறது எனில்,  சந்தோஷமே!’ என்றவள், வன்னி மரத்தை கட்டிப்பிடிக்க, ஈவு இரக்கம் இல்லாத பண் டாரி, தலையை சட்டென சீவிவிட்டு,   மரங்களை வெட்டத் துவங்கினான். இதைக் கண்டு கலங்காத மூன்று மகள்களும் அம்மா போலவே மரங்களைக் கட்டிப்பிடிக்க... அவர்களின் தலைகளும் சீவப்பட்டன. ஓடோடி வந்த அம்ருதாவின் கணவர் ராமோஜியும் தலை சீவப்பட்டு உயிரிழந்தார்.

விஷயம் தீயாகப் பரவ... அக்கம்பக்கம் இருந்த 84 கிராமங்களில் வாழ்ந்த பிஷ்னோய் சமூகத் தினர்  அம்ருதா வழியிலேயே மரங்களை காக்க முடிவெடுக்க, பலரின் தலைகளும் வரிசையாக சீவப்பட்டன. 363 பேரின் தலைகள் சீவப்பட்ட நிலையில், பதறிப்போய் ஓடிவந்த மன்னர் அபய்சிங், பிஷ்னோய் சமூகத்தினரிடம் வருந்தி மன்னிப்பு கேட்டதுடன், 'இப்பகுதியில் உள்ள வனம் மற்றும் விலங்குகள் அனைத்தும் இனி அணுவளவும் பாதிப்பின்றி காக்கப்படும்' என உத்தரவிட்டார்.

மரம் காக்க...சிரம் தந்தாள் !

அம்ருதாதேவியின் தியாகம்... பிஷ்னோய் சமூகத்தின் மிகப்பெரிய திருநாளாக ஆண்டுதோறும் நினைவுகூரப்படுகிறது. ஜோத்பூரிலிருந்து அகமதாபாத் செல்லும் நெடுஞ்சாலையில் 30 கி.மீ தொலைவில் இருக்கிறது கேஜர்லி. ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பிஷ்னோய் சமூக மக்களால், அன்றைய தினம் திணறிக் கொண்டிருந்தது கேஜர்லி.

சம்பவ இடத்தில்... குரு ஜம்பேஷ்வரின் பழங்கால கோயில், அருகில் அம்ருதா தேவி மற்றும் உயிர்த் தியாகம் செய்த 363 பேர்களுக்காக கட்டப்பட்டுள்ள நினைவுத்தூண் ஆகியவற்றில் அஞ்சலி செலுத்துகின்றனர். இவர்களின் நினைவாக அங்கு வைக்கப்பட்டுள்ள 363 வன்னி மரங் களை பக்தியுடன் தரிசித்து வனம் மற்றும் விலங்குகளை காக்க உறுதிமொழி எடுக்கின்றனர்.

''அம்ருதாதேவியின் வீரத் தியாகத்தை எங்கள் குழந்தைகளுக்கு சிறு வயது முதலாக ஊட்டுகிறோம். அவரைப் பற்றிய தாலாட்டுப் பாடல்களும் பல உள்ளன. பிஷ்னோய் திருமணங்களில், அம்ருதாதேவி மற்றும் அவருடைய மகள்களின் வீர வரலாற்றை புதுமண மக்களுக்கு பண்டிதர் விரிவாக எடுத்துக் கூறி, வனங்களைக் காப்பதன் முக்கியத்துவத்தை தவறாமல் நினைவுகூர்வார்.எங்கள் பெண் குழந்தைகளுக்கு, தியாகம் செய்தவர்களின் பெயர்களே பெரும்பாலும் வைக்கப்படுகின்றன'' என நம்மிடம் பெருமிதத்தோடு சொன்னார் உதய்பூரிலிருந்து வந்திருந்த கங்கா.

மரம் காக்க...சிரம் தந்தாள் !

சுத்தமான சைவ உணவை உண்ணும் பிஷ்னோய் சமூகத்தினர் வாழ்க்கை, இயற்கையை அதிகமாக நம்பி வாழ்கின்றனர். வயல்களிலும் பெரும்பாலும் இயற்கை உரங்களை இடும் இவர்கள், அடுப்பில் சமைக்க சாணி மூலமாக தயாராகும் வரட்டி மற்றும் காய்ந்த மரங்களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். நீல நிறம் தயாரிப்பதற்காக மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதனால், அந்த நிற ஆடைகளையே அணிவதில்லை.

இச்சமூகத்தின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட மத்திய மற்றும் மாநில அரசுகளின் வனத்துறைகள், 'அம்ருதாதேவி' பெயரில் வருடந்தோறும் சிறப்பு விருதுகளை அளிக்கின்றன. அவர் பெயரில் நினைவுத் தூண்கள், வளைவுகள், ரவுண்டானாக்கள் என பலவும் ராஜஸ்தானில் நிறுவப்பட்டுள்ளன!

''மொத்தத்தில் அம்ருதாதேவி என்றால், வீரமும் தியாகமும் என்று பொருள் எங்கள் மாநிலத்தில்!''

- வன்னி மரத்தடியில் நின்று சொல்லும் பிஷ்னோய் பெண்களின் முகங்களில் பெருமிதம்!

வரதட்சணை கேட்டால்...திருமணமே ஆகாது!

பாரம்பரிய வழக்கப்படி கிட்டத்தட்ட அரை கிலோ தங்க நகைகள் அணிந்திருந்த கல்லூரி மாணவியான அம்ரி, ''கை, கழுத்து, நெத்திச்சுட்டி, மூக்குத்தி என பழம்பெரும் டிசைன்களே இன்றும் அணிவோமே தவிர, எங்கள் சமூகத்தில் புது ஃபேஷனுக்கு இடம் இல்லை. அதற்காக நகைகளைப் பார்த்து, நாங்கள் வரதட்சணை அதிகம் தருவோம் என எண்ணி விடாதீர்கள். தப்பி, தவறி வரதட்சணை கேட்டுவிடும் ஆண்களில் பலர் காலம் முழுக்க மணமாகாமல் இருப்பார்களே தவிர, அவர்களுக்கு ஒரு நயாபைசாவும் கிடைக்காது. வனம் மற்றும் விலங்குகளை காக்க வீரத்தியாகம் புரிந்த குடும்பம் அல்லது கோத்ரங்களை சேர்ந்தவர்களை மணம்புரிய எங்களில் பலர் சிறப்பு விருப்பம் காட்டுவது உண்டு!'' என்கிறார்.