ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
Published:Updated:

வாழ்க்கை அஞ்சலை பாட்டி

நா.சிபிச்சக்கரவர்த்தி படங்கள்: ப.சரவணகுமார்

##~##

'என்ன இந்த வாழ்க்கை...?’ என்று வெதும்புபவர்கள், அஞ்சலை பாட்டி, தன் வாழ்வில் கடந்து வந்திருக்கும் நினைத்துப் பார்க்க முடியாத துயரங்களையும், அவற்றையெல்லாம் கடந்து, இன்றும் தன் பேரப் பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் துடிப்பையும் கேட்டால், 'நாமும் சோதனை எது வந்தாலும் சோர்ந்து போகாமல் வாழ வேண்டும்' என்கிற வைராக்கியம் பொங்கும்!

பேசப்பழகிய மூன்று, நான்கு வயதுகளிலேயே பெற்றோர் கைவிட்டுவிட்டார்கள்... விரும்பி மணந்தவன், நிறைமாத கர்ப்பிணியாக தவிக்கவிட்டு ஓடிவிட்டான்... ஒரே மகளை படாதபாடுபட்டு வளர்க்க, அவளை மணந்தவன், அப்பெண்ணின் வாழ்வையே முடித்துவிட்டான்... பிளாட்பாரமே வீடு... இத்தனை துன்பங்களும் அஞ்சலைக்கு. ஆனால், ஒவ்வொரு கட்டத்திலும் மிச்சமிருக்கும் வாழ்க்கையில் நம்பிக்கை வைத்தே நகர்ந்திருக்கிறார். இதோ... இப்போதும் தன் மகளின் நான்கு குழந்தைகளுக்காகவே சென்னையில் மீன்பாடி வண்டி மிதித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலை பாட்டி... இருளே வாழ்வாகிப்போனாலும் நாளை விடியும் என்ற நம்பிக்கையில்!

''பூக்கடை போலீஸ் ஸ்டேஷன் பக்கத்துல இருக்குற அந்தக் குப்பைத் தொட்டிக்கு ரெண்டு அடி தள்ளிதான் நான் பொறந்தேன். இந்த 52 வயசுலயும் இந்த இடத்தைச் சுத்திதான் என்  வாழ்க்கை. 'இந்த வயசுல மாடிப்படி  ஏறவே எங்களுக்கு ஒரு தொண தேவைப்படுது. நீ மீன்பாடி வண்டி ஓட்டி, பூக்கட்டினு ஒத்தையாளா மூணு பேரன், ரெண்டு பேத்திகளையும் பார்த்துக்குறியே..?’னு சில பெருசுங்க ஆச்சர்யமா கேட்பாங்க.

வாழ்க்கை அஞ்சலை பாட்டி

எங்கப்பாவுக்கு மூணு பொண்டாட்டி. தண்ணி அடிச்சுட்டு, சித்தன் போக்கு... சிவன் போக்குனு திரிவாரு. அம்மாவும் எங்கிட்ட பாசமா இருந்ததில்ல. சின்ன வயசுல பசி பார்த்து சாப்பாடு கொடுக்கக் கூட ஆள் இருந்ததில்ல. எங்க ஏரியாவுல இருந்தவங்களப் பார்த்து நானும் பூக்கட்ட பழகிகிட்டேன். ஏழு வயசுலயே பூக்கட்டிக் கொடுத்து, என் பசியை நானே ஆத்திக்கக் கத்துக்கிட்டேன். ரோட்டு ஓரமா எங்கயாச்சும் தூங்கிக்குவேன்.

பதிமூணு வயசிருக்கும்... அந்தத் தெருவுல என்னைய மாதிரியே சுத்திக்கிட்டு திரிஞ்ச 16 வயசு நாகப்பன் என்னையக் கல்யாணம் பண்ணிக்கிட்டான். 14 வயசுல நான் நெறமாசமா இருக்கும்போது, ஓடிப்போயிட்டான். நானே ஒத்தையாளா ஆஸ்பத்திரிக்குப் போய் புள்ளையப் பெத்துத் தூக்கிட்டு வந்த துயரம், சொல்லி மாளாது. அந்தக் கொழந்தையோட சிரிப்பு, என்னோட எல்லா சாபத்தையும் மறக்க வெச்சது. 'இவளுக் காச்சும் வாழ்க்கையில அத்தன சந்தோஷமும் கெடைக்கணும்...’னு உசுரா வளர்த்தேன். பிளாட்பாரத்துல கெடந்தாலும்...இஸ்கூல்ல சேர்த்தேன். நாயா பேயா ஒழச்சேன்.

என் கெட்ட நேரம், என்ன விடல. ஓடிப்போன அவங்கப்பன் திரும்பி வந்தான். நான் சம்பாதிக்கிற அஞ்சு, பத்தையும் புடுங்கிட்டுப் போய் குடிச்சான். 'படிச்சு கலெக்டர் உத்தியோகமா பார்க்கப்போற?’னு மக படிப்பைக் கெடுத்தான். அவ வாழ்க்கையும் சீரழிஞ்சிடக் கூடாதுனு,  அல்லும் பகலுமா சேர்த்த காசுல, நாலு பவுன் போட்டு கல்யாணம் முடிச்சேன்.

வாழ்க்கை அஞ்சலை பாட்டி

ரெண்டு வருஷம் நல்லாதான் வாழ்ந்தாங்க. பேத்தி திவ்யா பொறந்தா. நாளாக ஆக, 'அத வாங்கிட்டு வா, இத வாங்கிட்டு வா’னு என் மகள அவ புருஷன் அடிச்சு அனுப்புவான். நானும் ஓடி ஓடி வண்டி இழுத்து காசு கொடுத்து அனுப்புவேன். திவ்யாவுக்கு அப்புறம் சந்தியா, அஜய், அஜித்னு அடுத்தடுத்து மூணு புள்ளைங்க. நாலு புள்ளையாகிப் போச்சு. அவனோ... குடிக்கிறது, பொண்டாட்டிய அடிக்கறது, இன்னொரு பொண்ணோட தொடர்பு, 'புள்ளையால தோஷம்'னு ஜோசியர் சொன்னான்கிறதுக் காக பேரன கொல்லப் பார்த்ததுனு அத் தனை கொடுமையும் மொத்தமா செஞ்சான். பணத்தைப் பார்த்துட்டா...  பொண்ண நல்லா வெச்சுக்குவான்னு சேர்த்து வெச்ச அத்தனை பணத்தையும் கொடுத்துட்டு வந்தேன். ஆனா, கடைசியில என் புள்ளய மண்ணெண்ணை ஊத்தி எரிச்சு கொன்னேபுட்டான் படுபாவி...''  

- உதடுகள் துடிக்க, கண்ணீர் கசியும்   கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டார் அஞ்சலை.

வாழ்க்கை அஞ்சலை பாட்டி

''நான் கொடுத்த காசை வெச்சே... என் பொண்ணு தற்கொலை செஞ்சுகிட்டதா கேஸை மாத்திட்டான். போலீஸ் கால்ல விழுந்து, 'பேரக் குழந்தைங்கள கூட்டிட்டுப் போறேன்...’னு அழுதேன். 'ஒனக்கே கஞ்சிக்கு வழியில்ல... நீ எப்படிப் பார்த்துக்குவ?’னு கேட்டாங்க. 'என் ஒடம்புல தெம்பிருக்கிற வரைக்கும் ஒழச்சு கஞ்சி ஊத்துவேன்...’னு கூட்டிட்டு வந்தேன்.

காலையில 4 மணிக்கே மீன்பாடி வண்டி ஓட்டக் கௌம்பிடுவேன். மதியம் வந்து பூக்கட்டி வித்து கொடுப்பேன். நான் பட்டினியா கிடக்கலாம்... ஆனா, பேரப்புள்ளைகள ஒருநாளாச்சும் பட்டினியா விடலாமா... மாட்டவே மாட்டேன். அந்தக் குழந்தை களும் இந்த பாட்டியோட கஷ்டம் புரிஞ்சு நடந்துக் குங்க. ஸ்கூலுக்கு போகுதுங்க. தெருவெளக்குலதான் பாடம் படிக்குங்க. என் மொத பேத்தி திவ்யா போன வருஷம் பத்தாவது பரீட்சையில 427 மார்க் எடுத்துச்சு. உங்க பத்திரிகையில அதப் பாராட்டி எழுதியிருந்ததப் பார்த்துட்டு, நெறய நல்ல மனசுக்காரங்க உதவி செஞ்சாங்க. அரேபியாவுல இருந்து வந்த ஷபீக் தம்பி, 'பிளாட் பாரத்துல இருக்க வேண்டாம்'னு சொல்லி, கொருக்குப் பேட்டையில ஒரு வாடகை வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்து எங்கள அங்க இருக்கச் சொன்னாரு. வயசுப் பொண்ணுங்கள நடுரோட்டுல தூங்க வைக்கிறமேனு தெனம் தவிச்சதுக்கு, நல்ல விமோசனம் கிடைச்சிடுச்சு.

சொந்தக்காரப் பையன் மணியை, அவங்க வீட்டுல ஸ்கூலை நிப்பாட்டிட்டு வேலைக்கு அனுப்பினாங்க. நல்லா படிக்கிற பையன். அவனையும் சேர்த்து நாம படிக்க வைப்போம்னு கூட்டியாந்துட்டேன். இப்போ அஞ்சு புள்ளைகளும் எம்பொறுப்பு.

'உனக்கு ரெண்டு தடவ ஹார்ட் அட்டாக் வந்திருக் கில்ல..? நான் டாக்டருக்குப் படிச்சு உன்னைப் பார்த் துக்குறேன் பாட்டி!’னு திவ்யா சொன்னப்போ, இப்போவே நடந்துட்ட மாதிரி என் பிறவி விமோசனம் ஆயிடுச்சு. 'அக்கா மாதிரி நாங்க எல்லாருமே நல்லா படிப்போம் பாட்டி...’னு மத்த புள்ளைங்களும் என் கண்ணைத் தொடச்சுவிட்டு சொல்லும்போது, இந்த சந்தோஷத்துக்கு இன்னும் எத்தன கஷ்டமும் தாண்டலாம்னு மனசு தெடமாகுது. 'நீயா... நானா?'னு விதி எங்கூட நடத்துன போராட்டத்துல, நான் இப்ப ஜெயிச்ச மாதிரிதான் தோணுது!''

- பேரக் குழந்தைகளை இழுத்து அணைத்துக்   கொண்டு, கண்ணீர் மல்க சிரிக்கிறார் அஞ்சலை பாட்டி!  

வாழ்க்கை மிக அழகானது!