இரா.முத்துநாகு படங்கள்: சக்தி.அருணகிரி
##~## |
இந்த ஆயுட்பயணத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள், புயல்கள் பல இருக்கலாம். ஆனால், அதையெல்லாம் தாண்டி வந்தவர்களுக்கே வாழ்க்கை வசந்தமாகியிருக்கிறது. அப்படி பொருளாதாரம், புகுந்த வீட்டு உறவுகள், பிடிவாதம், குடி, கடன் என பல பிரச்னைகளையும் கடந்து, இல்லறத்தை செலுத்திக் கொண்டிருக்கும் 'ஆண்டு அனுபவித்த' குடும்பத் தலைவிகள், தங்கள் வாழ்க்கையின் ஆழத்தை 'அவள்’ வாசகிகளிடம் பகிர்ந்துகொள்ள புதுசுக்கெல்லாம் புதுசாக உதயமாகிறது 'புகுந்த வீடு!’
சின்னச் சின்னக் காரணங்களுக்காக எல்லாம், வாழ்க்கை துணையைப் பிரியும் இந்தத் தலைமுறை தம்பதிகளுக்கு, இத்தொடர் ஒரு நடைமுறை வழிகாட்டியாக இருக்கும்!
28-ம் ஆண்டு திருமண நாளைக் கடந்திருக் கும் சீனியர் தம்பதி, தேனி - அல்லிநகரத்தைச் சேர்ந்த வனஜா - அங்கையன்! இரண்டு சம்பந் தங்கள் முடித்து, பேரன் பேத்தி எடுத்திருக்கும் இந்த ஜோடி, தங்கள் வாழ்க்கையின் மேடு பள்ளங்களை அசைபோட்ட அனுபவம், நம் தமிழ்க் குடும்பங்களின் கண்ணாடி!

''ஓடைப்பட்டிதான் சொந்த ஊரு. அல்லி நகரத்துல எங்க அக்காவை கட்டிக் கொடுத்த வகையில, அவங்க உறவு மூலமா என்னைப் பெண் பார்க்க வந்தாங்க இவங்க...'' எனும்போது, அந்த பதின் வயதுக்கே செல்கிறார் வனஜா.
''கல்யாணமான புதுசுல எல்லாரும் 'பட்டிக் காடு பட்டிக்காடு’னு கிண்டல் பண்ணுவாங்க. அதனால அக்கம்பக்கம்னு யார்கூடவும் பேசத் தயக்கம். மளிகைக் கடை வெச்சுருந்த வீட்டுக் காரர், காலையில கடைக்குப் போனா... மதியம் சாப்பிட வருவார். மறுபடியும் கடைக்குப் போற வரு... ஊரே தூங்கினதுக்கு அப்புறம்தான் வருவார். இதனால, பொழுது போகாம வீட்டுக் குள்ள இங்கயும் அங்கயுமா நடந்துக்கிட்டே இருப்பேன். என் மாமியார், ' எப்பப் பார்த்தாலும் குட்டி போட்ட பூன மாதிரி நடந்துக்கிட்டே இருக்க’னு திட்ட, அதுக்கு நான் ஒண்ணச் சொல்ல, பதிலுக்கு அவங்க ஒண்ணச் சொல்ல... இப்படித்தான் ஆரம்பிச்சது எங்களோட முதல் சண்டை. தொடர்ந்து சின்னச் சின்ன சண்டை களா முளைக்க ஆரம்பிச்சுது.
என் வீட்டுக்காரர் எங்க பஞ்சாயத்துக்குள்ள வர மாட்டார். ஆனா, மாமனார் எனக்குதான் சப்போர்ட் பண்ணினார். அதுக்கும், 'வந்ததும் வராததுமா மாமனாரை கைக்குள்ள போட்டுக் கிட்டியா..?’னு பேசுவாங்க என் மாமியார். 'மாமி யார்னா கொடுமைக்காரியா இருப்பாங்கனு சொல்லுவாங்களே... அது இதுதானா?'னு மனசுக் குள்ள நினைச்சுக்குவேன். இதுக்கு இடையில என் மூத்த பொண்ணு நாகலட்சுமி பிறக்க, பிரச வத்துக்குப் பிறந்த வீட்டுக்குப் போயிட்டு வந் தேன்'’ என்று வனஜா சொல்லிக் கொண்டிருக் கும்போதே... அங்கையன் வந்தமர்ந்தார்.
''நான் மட்டும் பேசினா எப்படி, நீங்க ஏதாச்சும் சொல்லுங்க...''
''ம்... ம்... நீயே பேசு. பொய் ஏதாச்சும் சொல்றி யானு நான் கேட்டுக்கிட்டு இருக்கேன்..!''
''இதென்ன பரீட்சை பேப்பரா... ஐயா திருத்துறதுக்கு?!''
''பரீட்சைனு சொன்னவொடன ஞாபகம் வருது. நீ எட்டாவது பாஸா பெயிலானு இப்பயாச்சும் சொல்லு!''
''என் படிப்பைக் கேட்டா கட்டிட்டு வந்தீங்க..? என்னையப் பார்த்தவொடன, 'கட்டுனா இந்தப் பொண்ணைத்தான் கட்டுவேன்’னு ஓடைப்பட்டி ஓடை மணல்ல மொட்ட வெயில்ல ஒத்தக் கால்ல நின்னுல்ல கட்டிட்டு வந்தீங்க..?!''
ஜோடியின் சந்தோஷப் பேச்சின் இடையே வந்த மகள் நாகலட்சுமி, ''அட, உங்க வாழ்க்கை யைப் பத்திப் பேசச் சொன்னா, பாரதம் படிக்கி றீங்க..!'' என்று மீண்டும் மடை திருப்ப, தொடர்ந்தார் வனஜா.
''பேத்தியைப் பார்த்தாவது என் மாமியார் எங்கூட சமாதானமா நடந்துக்குவாங்கனு நினைச்சேன். ஆனா, அப்பவும் அவங்க மூக்காயி வேசத்தை (கொடுமைக்கார மாமியாராம்) கலைக்கல. அப்படி என்னதான் இவங்களுக்கு நாம ஆகாதது செஞ்சோம்னு மனசுக்குள்ள புலம்பினேன். அப்பதான் தெரிஞ்சுது... எங்க வீட்டுல அஞ்சு பவுன் நகையை கொறச்சு போட்டதுதான் காரணம்ங்கிறது.
'இவரும், ஏன் இப்படிப் பேசுறீங்கனு அம்மாவ கேட்க மாட்டேங்குறார், கைப்புள்ளய வெச்சுக் கிட்டு, இப்படி அவங்க கரிச்சுக் கொட்டுறத வாங்கிக்கிட்டு, என்ன வாழ்க்கை இது..?’னு நொந்து, ஒரு கட்டத்துல எங்க அம்மா வீட்டுக்கே போயிட்டேன். என்னைய வந்து பார்த்த என் மாமனார், 'அவ குணம் அப்படித்தாம்மா. மனசுல வெச்சுக்காதம்மா...’னு வந்து கூப்பிட, நானும் திரும்பி வந்துட்டேன். ஆனா 'போகும்போது இருந்த ரோஷம் வரும்போது இல்லையோ..?’னு அதையும் மாமியார் குத்திக்காட்டிப் பேசினாங்க.
இப்படியே ரெண்டு, மூணு முறை அம்மா வீட்டுக்குப் போறதும், இவங்க வந்து கூட்டி வாரதுமா இருந்தது. என்னோட இந்த செயல் எனக்கே வெட்கமாப் போக, 'இனி எதுவா இருந்தாலும், இங்கயே இருந்துதான் சமாளிக் கணும். அம்மா வீட்டுக்குப் போகக் கூடாது’னு முடிவெடுத்தேன். மௌனமா இருக்கப் பழகிக்கிட்டேன். ஆனா... என் கொழுந்தனுங்க அவங்க அம்மாவைக் கண்டிக்க, 'இந்த வீடே இவ பக்கம் சாய்ஞ்சிருச்சு’னு என் மேல அவங்களுக்கு இன்னும் வெறுப்பு அதிகமாச்சு.

ஒரு நாள் ரொம்ப ஆவேசமாகி மாட்டுக் கொட்டத்துல தனியா சமைச்சு சாப்பிட்டு, அங்கேயே படுத்துக்கிட்டாங்க. அவங்க பிடிவா தத்துக்கு நான் பொறுப்பு இல்லைனாலும், என் மனசு பொறுக்கல. 'நான் என்ன தப்பு செஞ்சுருந் தாலும் மன்னிச்சிருங்க... தயவுசெஞ்சு வீட்டுக்கு வாங்க...’னு போய் அழுதேன். இதை எதிர் பார்க்காத மாமியாரும் கட்டிப்பிடிச்சு அழுதது நானே எதிர்பார்க்காதது. எந்திரிச்சு வந்துட்டாங்க.
'இந்த வீட்டுல அவங்க நமக்கு முன்ன வந்த வங்க. அவங்க சொல்லுக்கு நாம மறுதலிச்சு பேசாம இருந்திருந்தா இத்தனை வருசம் இம் புட்டு மனகஷ்டமில்லாம இருந்திருக்கும்’ என்பதை நான் புரிஞ்சுக்க நாலு வருஷமாச்சு!''
அதன்பின் தீர்ந்துவிட்டதா மாமியார், மருமகள் போர்..?
''கொஞ்சநாள் சுமுகமாத்தான் இருந்தோம். ஆனா, ரெண்டாவது பெண் குழந்தை பிறந்தப்போ, 'ரெண்டும் பொட்டையா பெத்துப் போட்டுட்டாளே’னு மறுபடியும் முருங்கை மரம் ஏறிடுச்சு. இந்தக் களேபரங்களுக்கு இடையில, மாமியாருக்குப் பிடிக்காதபோதும், என் தங்கச்சி செல்வியை, கொழுந் தனுக்கு கல்யாணம் முடிச்சார் மாமனார்.
தங்கச்சிக்குப் போட்ட நகை களோட, எனக்கும் அந்த சமயத் துல அஞ்சு பவுன் செஞ்சு கொடுத் தாங்க எங்க வீட்டுல. அதை கையில வாங்கின மாமனார், 'இதுக்காகத்தானேடி வனஜாவ இப்படி கரிச்சுக் கொட்டி அழ வெச்சே..?’னு கேட்டு, எல்லாரும் இருக்கும்போது என் மாமியார் மேல தூக்கி எறிஞ்சார். அவங்க உக்கிப் போயிட்டாங்க. நான் ஓடிப் போய் அவங்களைக் கட்டிப்பிடிச்சு, 'மாமா குணம்தான் தெரியுமில்ல... விடுங்க அத்தை!’னு சொல்லி சமாதானப் படுத்தினேன். அப்ப என் மாமியாரோட கண்ணுல முதல் முறையா என் மேல ஒரு பாசம் தெரிஞ்சுது...''
- ஒரு நொடி தன் கணவர் முகம் பார்த்தவர், தொடர்ந்தார்.
''கடைசி காலத்துல மறுபடியும் அவங்க மனசு என்னை ஏத்துக் காமப் போயிடுச்சு. 'உன் கையால கஞ்சி வாங்கிக் குடிக்கமாட் டேன்’னு மறுபடியும் தனியா போயிட்டாங்க. அப்படியிருந்தும் அவங்க ரொம்ப முடியாம இருந் தப்போ, நான்தான் பார்த்தேன். ஆனா, சாகப்போகும் போதுகூட என்னை ஒரு நல்ல வார்த்தை சொல்லாம உசிர விட்டது இப்ப வும் ஈரக் கொலையை அறுத்துக் கிட்டே இருக்கு...'' என்று வனஜா நா தடுமாற, சட்டென சமாளித்துத் தொடர்ந்தார் அங்கையன்.
''மனச்சாட்சியா சொல்லுறேன். எங்கம்மாவுக்கு இவ நல்லதுதான் செஞ்சா. அவங்களுக்குள்ள மாமி யார் குணம் 'போகமாட்டேன்!’னு உட்கார்ந்துகிட்டதுதான் பிரச்னை. ஆனா, ஒருநாளும் இவளுக்கு சப்போர்ட் செய்தோ, அம்மாவைக் கண்டிச்சோ நான் பேசினதில்ல. ஒரு கட்டத்துல என்னோட நிலைப் பாட்டைப் புரிஞ்சுக்கிட்டு, எங் கம்மாவோட சேர்த்து என்னையும் அனுசரிச்சுக்கிட்டா. அதனாலதான் எங்களுக்கு இன்னிக்கு இந்த அழகான வாழ்க்கை மிஞ்சியிருக்கு. ரெண்டு பொண்ணுங்களுக்கும் சம்பந்தம் முடிச்சு, பேரன், பேத்தினு சந்தோஷமா இருக்கோம்!'' என்று நம்மிடம் சொன்ன அங்கையன்,
''எங்கப்பா இறக்கும்போது, 'நீ நல்லா இருப்ப தாயே!’னு வாழ்த்தி னாரே... அதை நீ சொல்லலை!'' என்று எடுத்துக்கொடுக்க, புன்னகை மீட்டுத் தொடர்ந்தார் வனஜா.
''என் மாமியார்கூட அல்லல் பட்ட ஆரம்பகாலத்துல, 'மாமி யார்னா இப்படித்தான் இருக்க ணுமா..? நமக்கு ஒரு மகன் பொறந்தா, நம்ம மருமகளத் தாங்கித் தாங்கிப் பார்த்துக்கணும். நாம அனுபவிச்சதை எல்லாம் அவளை அனுபவிக்கக் கூடாது!’னு தோணும். ரெண்டும் பொண்ணா பிறந்ததுல அந்த ஏக்கம் இப்பவும் எனக்கு இருக்கு. என் பொண்ணுங்களுக்கு, 'வாழப் போற எடத்துல எல்லா உறவுகளும் வேணும்னு நினைக்கணும், எல்லாரோடயும் அனுசரிச்சுப் போகணும்!’ங்கிற பாடத்தைத்தான் சொல்லி அனுப்பியிருக்கேன். அது எல்லாருக்குமான பாடமும்தான்!''
- அங்கையன் முகம் பார்த்து முடித்தார் வனஜா!