ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
Published:Updated:

நல்ல மாணவன்... ஆசிரியர் பொறுப்பா... பெற்றோர் வளர்ப்பா..?

கரு.முத்து படங்கள்: கே.குணசீலன்

##~##

'வீட்டில் ஒழுங்காக படித்துக் கொண்டு வராவிட்டால்... பெற்றோரிடம் சொல்வேன்' என்று கண்டித்த ஆசிரியையை, வகுப்பறையிலேயே கத்தியால் குத்திக் கொன்றான் ஒரு மாணவன்.

நன்றாகப் படித்து நேர்மையான ராணுவ அதிகாரியாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டு கண்டிப்புக் காட்டிய தந்தையை, துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் அளவுக்கு மனதில் வெறியேறிப் போயிருக்கிறான் ஒரு மகன்.

இதையெல்லாம் பார்த்துவிட்டு, 'இன்றைய மாணவ சமூகத்தின் போக்கு சொல்லிக் கொள்ளும்படி இல்லை' என்ற விரக்தி பேச்சுகளே எங்கும் எதிரொலிக்கின்றன. 'இதற்குக் காரணம், மாணவர்கள் மட்டுமல்ல... அவர்கள் உலகத்துக்கு மிக நெருக்கமாக இருக்கும் ஆசிரியர், பெற்றோர் இருதரப்பும் காட்ட வேண்டிய கண்டிப்பிலும் கனிவிலும்   ஏற்பட்டிருக்கும் பழுதும்தான்’ என்பது கல்வியாளர்களின் கணிப்பாக இருக்கிறது.

அதைப்பற்றி இங்கே விரிவாகப் பேசுகிறார், சூர்யவதி. தஞ்சாவூர், தாமரை இன்டர்நேஷனல் பள்ளியின் முதல்வராக இருக்கும் சூர்யவதி, இந்தியாவின் கார்ப்பரேட் நகரங்கள் பலவற்றின் பள்ளிகளிலும், நாகார்ஜுனா, அம்பானி கம்பெனிகளின் பள்ளிகளிலும் மலேசியாவிலும் ஆசிரியர் - முதல்வர் என்று பணியாற்றி, அனுபவங்களைப் பெற்றிருப்பவர். அவை அத்தனையும் எதிரொலிக்கின்றன,  அவருடைய வார்த்தைகளில்!

நல்ல மாணவன்... ஆசிரியர் பொறுப்பா... பெற்றோர் வளர்ப்பா..?

''இன்றைய ஆசிரியர் பயிற்சிக் கூடங்கள் பதிவேடுகள், துணைக் கருவிகள், பாடத்திட்டம் என்று ஒரு குறுகிய வட்டத்தில் செயல்பட்டு, புத்திசாலியான மற்றும் எந்திரத்தனமான ஆசிரியர்களைத்தான் உருவாக்குகின்றன. சமூக மதிப்பீடுகள், அதை மாணவர்களிடம் போதிக்க வேண்டிய ஆசிரியரின் கடமைகள் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளாமல், கலைப்பாடங்கள் போலவே ஆசிரியர் கல்வியும் கற்பிக்கப்படுகிறது. கற்பவர்களும் தங்களை ஆசானாக உணராமல், கல்லூரி மாணவர்களாகவே உணர்கிறார்கள்.

ஆசிரியர் வேலை பெற்ற பலரும் மிகப்பெரிய சவாலாக நினைப்பது... வகுப்பில் உள்ள எல்லா மாணவர்களையும் எல்லா பாடத்திலும் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆசிரியர்களும் நல்லாசிரியராக  முடிவதில்லை, மாணவனையும் குணநலம் மற்றும் சமூக அக்கறையுள்ளவனாக உருவாக்க முடியவில்லை.

சாப்பிடும், தூங்கும் நேரம் போக மீதமுள்ளதில் அதிக நேரம் ஆசிரியரிடம்தான் குழந்தை இருக்கிறது. அதைப் பயன்படுத்தி, மாணவனை சாதாரணமாக கவனித்தாலே, வகுப்புக்கு ஒவ்வாத அவனுடைய சூழல் ஆசிரியருக்குத் தெரிந்துவிடும். அவனை அழைத்து கனிவாக பேசினாலே... தீர்ந்தது பிரச்னை.

முன்பு நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த இன்டர்நேஷனல் பள்ளி ஒன்றில்... பல நாட்டு பெரிய மனிதர்களின் பிள்ளைகளும் படித்தார்கள். ஒரு நாட்டினுடைய தூதரக அதிகாரி மகனும் அவர்களில் ஒருவன். ஏழாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த அவன், வகுப்பு நேரத்தில் அடிக்கடி பேனாவை கீழே போடுவதும்... குனிந்து எடுப்பதுமாகவே இருப்பான். அவனுடைய நோக்கம்... மினி ஸ்கர்ட் அணிந்திருக்கும் மாணவிகளின் உள்ளாடைகளை பார்ப்பதுதான். சம்பந்தபட்ட மாணவியிடம் அன்றைய தினம் அவள் அணிந்திருக்கும் ஜட்டியின் கலரை சொல்லி கிண்டல் செய்வதையும் தொடர்ந்திருக்கிறான். ஒரு கட்டத்தில் இது தெரியவரவே, எனக்கு பகீர் என்றது. என்றாலும், அவனை நேரடியாகக் கூப்பிட்டு கண்டிக்கவில்லை. 'யாருடைய மனதும் புண்படும்படி நாம் நடந்து கொள்ளக் கூடாது' என்பதை ஒரு குட்டிக்கதை மூலம் சொன்னேன். எல்லோர் மனமும் புண்படும்படி நடந்துகொள்ளும் உன்னை, கெட்டவனாகவே மற்றவர்கள் நினைக்கிறார்கள் என்பதையும் நாசூக்காக புரிய வைத்தேன். அதிலிருந்து பேனா கீழே விழுவதேயில்லை. ஆசிரியர் நினைத்தால் நல்வழிப்படுத்திவிட முடியும் என்பதை அனுபவத்தில் நான் உணர்ந்த சம்பவம் இது'' என்ற சூர்யவதி,

நல்ல மாணவன்... ஆசிரியர் பொறுப்பா... பெற்றோர் வளர்ப்பா..?

''தேவையான இடங்களில் பாலியல் பற்றி வெளிப்படையாக விவாதிக்க வேண்டும். இல்லைஎன்றால், அரைகுறையாக தெரிந்து கொண்டு அதைப்பற்றியே சிந்தித்து விவாதித்து மாணவர்கள் கவனம் சிதறிவிடுவார்கள். இதையும் வகுப்பறையில்தான் நான் தெரிந்துகொண்டேன்.

ஒரு நாள், போர்டில் குதுப்மினார் படம் வரைந்தேன். அப்போது மாணவிகள் பக்கமிருந்து வெட்கம் கலந்த கிசுகிசுப்பு குரல்கள். மாணவர்களைப் பார்த்து கேலிச்சிரிப்பு சிரித்ததோடு... 'பக்கம் 360' என்றும் சத்தமாகச் சொல்லிக் கொண்டிருந்தனர் கேர்ள்ஸ். 'ஏதோ நடக்கிறது' என்று விட்டுவிட்டேன். இன்னொரு நாள்... தாஜ்மகால் படம் வரைந்தபோது... மாணவர்கள் மத்தியிலிருந்து சலசலப்பு. கூடவே... 'பக்கம் 360' என்ற குரல்கள்.

பிறகு, ஒரு மாணவியை தனியே அழைத்து விசாரித்தபோதுதான் கின்னஸ் புத்தகத்தில் 360-ம் பக்கத்தில் உலகின் மிகப்பெரிய ஆண் உறுப்பையும், பெண் மார்பகத்தையும் போட்டிருப்பதை பற்றி சொன்னாள். அவை... குதுப்மினார் மற்றும் தாஜ்மகால் போல இவர்களுக்கு உருவகமாகிஇருப்பதை தெரிந்து கொண்டேன். மறுநாள், அந்த உறுப்புகள் பற்றி விவரமாக, அறிவியல்பூர்வமாக விளக்கங்களை எடுத்து வைத்தேன். அதிலிருந்து, மாணவர்கள் மத்தியில் அவை பற்றிய கேலிகள் குறைந்து விட்டன.

ஆக, மாணவர்களின் மனநிலை என்ன என்பதை ஆசிரியர் அறிந்து கொண்டு விட்டாலே மிகத் தெளிவான மாணவர்களை உருவாக்கிவிட முடியும்'' என்றவர், அடுத்ததாக பெற்றோர்களின் பங்களிப்புப் பற்றிப் பேசினார். அது, அடுத்த இதழில்...