ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
Published:Updated:

அவள் - ஹெல்ப் லைன்

படம்: தே.தீட்ஷித்

##~##

மருத்துவம், மணவாழ்க்கை, தாம்பத்யம், குழந்தை வளர்ப்பு, உறவுச் சிக்கல்கள், சட்டம், நுகர்வோர் உரிமை, கல்வி, போட்டித் தேர்வுகள், வேலைவாய்ப்பு, ஆன்மிகம், நாத்திகம், விசா, வீட்டுக்கடன்... இப்படி மனதில் ஏற்படும் அத்தனை கேள்விகளுக்கும் உள்ளங்கைக்குள் பதில் படிக்கக் கிடைத்தால்..?! இதோ வருகிறது... 'அவள் ஹெல்ப்லைன்’!

''என் மனைவிக்கு இது தலைப்பிரசவம். மகப்பேறு மருத்துவர் மாதாந்திரம் ஸ்கேன் செய்கிறார். இது தவிர, மாமியார் வீட்டிலும் குடும்ப மருத்துவர் மூலமாக ஸ்கேன் பார்க்கிறார்கள். கர்ப்பிணிப் பெண்களுக்கு இத்தனை ஸ்கேன்கள் ஆரோக்கியமானதா? அவர்களுக்கான அத்தியாவசியமான ஸ்கேன்கள் எத்தனை?''

கே.ஆர்., சென்னை

டாக்டர் த.கதிரவன், ரேடியாலஜிஸ்ட், பெரம்பலூர்:

''நீங்கள் குறிப்பிடும் ஸ்கேன் அல்ட்ராசவுண்ட் வகையைச் சேர்ந்தது. குழந்தையின் வாராந்திர வளர்ச்சியைக் கண்காணிக்க மகப்பேறு மருத்து வரின் பரிந்துரையின் பேரில் இந்த ஸ்கேன் எடுக்கப்படும். மருத்துவ அவசியத்தின் பொருட்டே எடுக்கப்படுவதால், இதில் எண்ணிக்கை குறித்து கவலைப்படத் தேவையில்லை. அதேசமயம், அல்ட்ராசவுண்ட் ரகத்தில் வரக்கூடிய டாப்ளர் ஸ்கேன் மட்டும் ஆரம்ப மாதங்களில் தவிர்த்தாக வேண்டும். விரைவும் வெப்பமும் சற்று வீரியமுமாக அமையும் டாப்ளர் ஸ்கேன், 5-வது மாதம் துவங்கி பார்ப்பதில் பிரச்னை இல்லை. அதற்கு முன்பாக வேண்டாம். சிசுவின் வளர்ச்சி சீராக இல்லை என்றாலோ, பனிக்குட நீரின் அளவு குறைந்தாலோ, பேறுகாலத்தில் மட்டுமே எட்டிப் பார்க்கும் நீரிழிவு, பி.பி பாதிப்புகள் தாய்க்கு வந்தாலோ முன்கூட்டியே கண்காணித்து உரிய சிகிச்சை மேற்கொள்ள இந்த டாப்ளர் ஸ்கேன் அவசியம்.

அவள் - ஹெல்ப் லைன்

ஆரோக்கியமான தாய் - சேய் மருத்துவ கவனிப்புக்கு நான்கு தவணையிலான அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைகள் போதுமானது. நாட்கள் தள்ளிப்போனதும் சிறுநீர் சோதனையை அடுத்து உறுதிபடுத்துதலுக்காக முதல் ஸ்கேன் மேற்கொள்ளப்படும். கர்ப்பப்பைக்கு வெளியே கருத்தரிப்பு நடந்திருந் தாலும் இந்த முதல் ஸ்கேன் காட்டிக் கொடுத்துவிடும்.

11 மற்றும் 14 வாரங்களுக்கு இடையே இரண்டாவது ஸ்கேன் பார்க்கப்படும். சிசுவின் கழுத்துத்தோல் தடிமனை ஆராய்ந்து டவுன் சிண்ட்ரோம் உள்ளிட்ட மரபணு பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டு, உரிய மேல் சிகிச்சைக்கு இந்த இரண்டாவது ஸ்கேன் உதவும்.

18 மற்றும் 24-வது வாரங்களுக்கு இடையே மூன்றாவது ஸ்கேன் பரிந்துரைக்கப்படும். அங்கஹீனம், இதயக்கோளாறு உள்ளிட்ட உறுப்பு வளர்ச்சி பாதிப்புகள் இருப்பின் உரிய சிகிச்சைக்கு இந்த ஸ்கேன் வழி செய்யும்.

34 வாரங்களுக்குப் பிறகு நிறை மாதத்தில் எடுக்கப்படும் நான்காவது ஸ்கேன், சிசுவின் பொசிஷன், பனிக்குட நீர் இவற்றை ஆராய்ந்து பிரசவத்தை தீர்மானிக்க உதவும். இவை தவிர்த்து ஏதேனும் பிரச்னை அல்லது சந்தேகம் இருந்தால் மட்டுமே தொடர் கவனிப்பு மற்றும் கருவிலேயே சிசுவுக்கு அவசியமான சிகிச்சை இவற்றின் அவசியம் கருதி கூடுதல் ஸ்கேன்கள் தீர்மானிக்கப்படும்.

அவள் - ஹெல்ப் லைன்

கவனிக்க வேண்டிய விஷயம்... ஸ்கேன் மட்டு மல்ல, மருந்து மாத்திரைகள், எக்ஸ்ரே என எந்த வொரு பரிசோதனையோ சிகிச்சை நடவடிக்கையோ சம்பந்தப்பட்ட மகப்பேறு மருத்துவரின் மேற்பார்வை மற்றும் ஆலோசனையின்றி மேற் கொள்வது கூடாது!''

''என் முழு சம்மதத்தின் பேரிலேயே என்னுடைய திருமணம் நடந்தது. ஆனால், கணவர் நெருக்கம் காட்டும்போது மட்டும் அடிக்கடி இனம்புரியா இறுக்கமும் விறைப்புமாக என்னையும் மீறி எனது உடல் உடன்பட மறுக்கிறது. இதை எவருடனும் பகிர முடியாமல் நான் தவிக்க, கணவரோ பொறுமையிழக்க, ஆறே மாதத்தில் என்னுடைய திருமண வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது. புதுமண வாழ்க்கை லகுவாக நான் என்ன செய்ய வேண்டும்?''

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி, திண்டுக்கல்

க.சிவக்குமார், ஃபேமிலி தெரபிஸ்ட், சென்னை:  

''தாம்பத்ய அந்தரங்கத்தில் சுணக்கம் எழுவது சகஜமானது. இருவருமாக கலந்து பேசினால் இந்தக் குறையை எளிதில் களையலாம். இதில் தயக்கம் காட்டுவது இல்லறத்தில் விரிசலை அதிகமாக்கும்.

தாம்பத்யத்துக்கு உலை வைக்கும் தனிப்பட்ட காரணங்கள் இருவரில் ஒருவரிடமோ அல்லது இருவரிடமோ இருக்கலாம். வெளியாரிடமும்கூட இருக்கலாம். மனரீதியாக மட்டுமன்றி உடல் ரீதியாகவும் காரணம் அமைந்திருக்கக் கூடும்.

வெறுப்பு அல்லது வெறுக்கும் அம்சம் அமைந்திருக்கும் ஆண், கவரக்கூடிய அம்சம் இல்லாதது, பழகும் தன்மை, சுகாதாரம் இவற்றில் அலட்சியம் காட்டுவது என காரணங்கள் வரிசைகட்டும். தனிப்பட்ட விரக்தி மற்றும் மனச்சோர்வு நோய் உங்களுக்குள் பொதிந்திருந்தாலும், அதன் எதிரொலியாக இந்த பாதிப்பு வரலாம்.

அவள் - ஹெல்ப் லைன்

மோசமான தந்தையின் வளர்ப்பு, குழந்தைப்பருவத்தில் குடும்ப ஆண்களால் பாலியல் துன்புறுத்தல், மரியாதைக்குரியவர்களை ஏடாகூடமாக பார்த்ததில் பாலியல் மீதான அருவருப்பு என மனதில் ஒளிந்துகொண்டு உங்களையும் அறியாது இம்சிக்கும் விநோத காரணங்கள் இருக்கலாம்.

உடலின் மறைவான இடத்திலிருக்கும் கட்டி, புண் குறித்தான அருவருப்பும், ஒரு சில ஹார்மோன் சுரப்புகளின் தகராறு போன்ற பிரச்னைகள்கூட, ஆண் - பெண் கூடலில் விருப்பு, வெறுப்பை விதைக்கக் காரணமாகும். கூட்டுக்குடும்பத்தில் இருப்பவர்களில் சிலர் அசூயை காரணமாக கூடலை வெறுப்பார்கள்.

உடல்ரீதியாக நெருங்குவதற்கு முன்பு மனரீதியான நெருக்கத்தை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். நெருக்கத்துக்கு தடையாக இருப்பவற்றை இருவருமாக அமர்ந்து பேசி அகற்றுங்கள். கோயில், பிக்னிக், ஷாப்பிங், ஹோட்டல் என சேர்ந்தே அடிக்கடி அவுட்டிங் செல்லும் வாய்ப்புகளை உருவாக்குங்கள். நேரம் ஒதுக்கி பரஸ்பரம் பிடித்ததை செய்ய முயற்சியுங்கள்.

வாழ்வியல் திறன்களில் பாலியல் அறிவும் அவசியமானது என்பதை உணர்ந்து அதற்கான முதிர்ச்சியான ஆலோசனைகளை வாசியுங்கள். உறவுக்கு முந்தைய முன்விளையாட்டுகளில் மும்முரம் காட்டுங்கள். இவை எதுவும் கைகொடுக்காது போனால்... குடும்ப நல ஆலோசகர் முன்பாக இருவரும் ஒரு சேர அமர்ந்து மனம்விட்டுப் பேசுங்கள். ஃபேமிலி தெரபி மற்றும் செக்ஸ் தெரபியை உள்ளடக்கிய கவுன்சலிங்கில் உங்கள் இல்லறத்துக்கான மலர்ச்சி நிச்சயம் உண்டு.''

''என் தாத்தா மற்றும் தந்தை சேர்த்த சொத்துக்களைப் பிரித்துத் தர மனமின்றி, ஏராளமாக எனது சகோதரனே வைத்துக் கொண்டிருக்கிறார். 'வரதட்சணை, சீர் செனத்தியெல்லாம் செய்திருக்கோமே' என்று பட்டியலிட்டு, குடும்ப உறவினர்களை சமாளித்து வருகிறார். இந்த வாதங்கள் கோர்ட்டில் எடுபடுமா?''

- ஆர்.ரமாபிரபா, திருநெல்வேலி-1

வழக்கறிஞர் ஜெயந்திராணி, திருச்சி:

''இந்து சொத்துரிமைச் சட்டம், பிறக்கும் குழந்தைகள் அனைவருமே வாரிசுகள் என்று அறுதியிடுகிறது. பூர்விக சொத்து என்பதில் அப்பா, மகன், பேரன் என மூன்று தலைமுறையினருக்கும் உரிய உரிமை உண்டு. இதில் பால் பேதம் கிடையாது. தந்தையின் சுயசம்பாத்தியமாக இருப்பின், உயில் உள்ளிட்ட ஆவணங்கள் எதுவும் இல்லையெனில், ஆண் வாரிசுகளைப் போல பெண் வாரிசுகளுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு. வரதட்சணை மற்றும் பெண்ணுக்கான சீர்வரிசை இத்யாதிகள் போன்ற வாதங்கள், நீதிமன்றத்தில் நிற்காது.

அவள் - ஹெல்ப் லைன்

மேற்கல்வி உள்ளிட்ட வாய்ப்புகளில் மகனை விட மகளின் உரிமை மழுங்கடிக்கப்படுவது இன்னமும் பெரும்பாலான குடும்பங்களில் தொடர்வதே. திருமணச் செலவும் பெரும்பாலான சமூக வழக்கப்படி மாப்பிள்ளை வீட்டார் செலவே. இதுதவிர கல்யாணமாகாதவர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், விவாகரத்தானவர்கள், விதவையானவர்கள் என பெண் வாரிசுகளின் சொத்துரிமைக்கு அழுத்தம் கொடுக்கும் காரணங்கள் இப்போது ஏராளம் உண்டு.

சொத்து உரிமை கோரும் பெண்ணுக்கு 1989-க்கு முன்பாக திருமணம் முடிந்திருக்கக் கூடாது. பாகம் கோரப்படும் சொத்து தொடர்பாக, அதன் பாகஸ்தர்கள் மத்தியில் ஆவணரீதியாக பாகப்பிரிவினை நடந்திருக்கக் கூடாது என்கிற இந்த இரண்டு முக்கியமான விஷயங்களையும் உறுதிபடுத்திக் கொண்டு தெம்பாக கோர்ட் படியேறலாம்!''