ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
Published:Updated:

தரிசனம் ப்ளஸ் சிகிச்சை...

தரிசனம் ப்ளஸ் சிகிச்சை...

தரிசனம் ப்ளஸ் சிகிச்சை...
##~##

சென்னை, அசோக் நகர், ஆஞ்சநேயர் கோயில்... தயிர் சாதத்துக்கு ரொம்ப ஃபேமஸ். கூடவே... இலவச மருத்துவ முகாம்களுக்கும்தான்! ஆம்... தரிசனம் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, அந்த வளாகத்திலேயே இன்னொருபுறம் இலவச மருத்துவ முகாம் நடத்திக் கொண்டிருந்தனர் மருத்துவர்கள் மைதிலி மற்றும் கீதாஞ்சலி.

''பக்தர்களோட மனசு ஆரோக்கியத்தை ஆஞ்சநேயர் பார்த்துக்குவார். உடம்பு ஆரோக்கியத்துக்கு, அவரோட அனுமதியோட நாங்க பொறுப்பேற்று இருக்கோம்!'' என்று புன்னகைத்தவர்களிடம்,

''வித்தியாசமா இருக்கே..!'’ என்று பேச அமர்ந்தோம்!

மைதிலி கடந்த ஆறு மாதங்களாக இந்த இலவச மருத்துவ முகாமில் பங்களித்து வருபவர். ''நான் ஆயுர்வேத டாக்டர். எங்கப்பா மெடிக்கல் ஷாப் வெச்சுருக்கார். கல்லூரியில் படிச்சுட்டு இருக்கும்போதே, அப்பாவோட நண்பரின் யோசனைப்படி அசோக்நகர்ல  இருக்கிற ஸ்ரீஅருளாசி விநாயகர் கோயில்ல மெடிக்கல் கேம்ப் நடத்திட்டு இருந்தேன். அதைப் பார்த்துட்டு, ஆஞ்சநேயர் கோயில் நிர்வாகத்தில் இருந்து, இங்கயும் இலவச மருத்துவ முகாம் நடத்த சொன்னாங்க. ஆறு மாசத்துக்கு முன்ன முதல் மெடிக்கல் கேம்ப் ஆரம்பமாச்சு. நாட்களாக ஆக, பக்தர்கள்கிட்ட நல்ல வரவேற்பு'' என்றவர்,

தரிசனம் ப்ளஸ் சிகிச்சை...

''உடம்புல நிறைய அவஸ்தை இருந்தாலும், பொருளாதார சிக்கல், பிள்ளைகளுக்குச் சிரமம் கொடுக்கக் கூடாதுனு நினைக்கறதுனு பல காரணங்களால பல முதியோர்கள், பல அவஸ்தைகளையும் வெளியில சொல்லாம சுமக்கறாங்க. அப்படிப்பட்டவங்க, நிம்மதிக்காக இந்தக் கோயிலுக்கு வரும்போது, இந்த இலவச மருத்துவ முகாம் அவங்களுக்கெல்லாம் ரொம்பவே சௌகரியமா இருக்கு. உடல் சுகவீனங்களைச் சொல்லி சிகிச்சை எடுத்துக்கறாங்க. ஏழை, எளியவங்களும் பலன் அடையறாங்க. இப்போ என்னோட ஃப்ரெண்ட்ஸ் பலரும் இந்தச் சேவையில் இணைய ஆர்வமா இருக்காங்க'' என்றார் மைதிலி பெருமையோடு.

பொதுநல மருத்துவரான கீதாஞ்சலி, மூன்று மாதங்களுக்கு முன் இச்சேவையில் இணைந்திருக்கிறார்.

''நானும், கணவரும் இந்தக் கோயிலுக்கு வர்றது வழக்கம். மூணு மாசத்துக்கு முன்ன வந்தப்போ, 'இலவச கண் சிகிச்சை முகாம்' நடந்துட்டு இருந்ததைப் பார்த்தோம். 'நீயும் இந்த மாதிரி பொது மருத்துவத்துக்கு இலவச கேம்ப் போடலாமே..?’னு கணவர் சொன்னார். உடனே கோயில் நிர்வாகத்தை சந்திச்சு விருப்பத்தை சொன்னோம். அடுத்த வாரமே இலவச மருத்துவ முகாம் நடத்த

ஏற்பாடு பண்ணிட்டாங்க. வசதியில்லாத பலரும் இதன் மூலமா பலனடையறதும், அதுக்கு நானும் ஒரு கருவியா இருக்கறதும் ரொம்ப நிறைவா இருக்கு'' என்றவர்,

தரிசனம் ப்ளஸ் சிகிச்சை...

''ஒவ்வொரு மாசமும் ரெண்டாவது சனிக்கிழமை காலையில எட்டு மணியில் இருந்து, மதியம் ஒரு மணி வரை டாக்டர். மைதிலி நடத்துவாங்க. அதுக்குப் பிறகு சாயந்திரம் 5 மணி வரைக்கும் நான் நடத்துவேன். ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்ஸை கோயில் நிர்வாகமே வரவழைச்சு, ஐ கேம்ப் மாதிரியான ஸ்பெஷல் கேம்ப்களயும் அப்பப்ப நடத்துறாங்க. எல்லா முக்கியக் கோயில்களோட நிர்வாகமும் இப்படி ஒரு நன் முயற்சி எடுக்கணும். சேவையில் ஆர்வமுள்ள மருத்துவர்கள் அதுக்கு உதவணும். மக்கள் சேவைதானே மகேசன் சேவை!''

- கீதாஞ்சலி வேண்டுகோள் வைக்க, ஆமோதிக்கிறார் மைதிலி!

- சா.வடிவரசு
படங்கள்: ஜெ.வேங்கடராஜ், க.கோ.ஆனந்த்