மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பிஸினஸ் கேள்வி - பதில்

வாருங்கள்.. வழிகாட்டுகிறோம் !

##~##

சுயதொழில் தொடங்கும் துடிப்போடு இருக்கும் பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் பல. அவற்றையெல்லாம் களையும் வழிகாட்டுதல், அவர்களின் முக்கிய தேவையாக இருப்பதை, 'அவள் விகடன்’ நடத்திய 'நீங்களும் தொழில் அதிபர் ஆகலாம்'  தொழில் பயிற்சி முகாம்களில் அழுத்தமாக அறிந்தோம். பெண் தொழில்முனைவோருக்கு ஏற்படும் சந்தேகங்களை, அவர்கள் கேள்விகளாகக் கேட்க, அதற்கான தெளிவான பதில்களை உங்கள் 'அவள் விகடன்’ வாயிலாக கொடுப்பதற்காகவே இந்த 'வாருங்கள்... வழிகாட்டுகிறோம்’ பகுதி!  

சந்தோஷம்தானே சகோதரிகளே..?!

பிஸினஸ் கேள்வி - பதில்

இங்கே உங்கள் கேள்விகள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி கொஞ்சம் தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது. 'நான் வீட்டில் சும்மா இருக்கிறேன்... ஏதாவது சுயதொழில் செய்ய விவரம் சொல்லுங்கள்...’ என பொதுவாக, இலக்கில்லாத கேள்வியாக இருக்கக் கூடாது. உங்கள் கேள்வி, பல பெண்களின் மனதில் ஏற்படும் கேள்வியாக இருக்க வேண்டும். நீங்கள் பெறும் பதிலானது, மற்ற பெண்களையும் தொழில் துவங்கச் செய்ய ஒரு தூண்டுகோலாக இருக்க வேண்டும்.

தொழில், அதற்கான தொழில்நுட்ப விவரங்கள், இலவச மற்றும் கட்டண பயிற்சி கிடைக்கும் இடங்கள், பயிற்சி தரும் நிறுவனங்கள், தொழிலுக்கான மூலப்பொருட்கள், அவை கிடைக்கும் இடங்கள், வங்கிக் கடன்கள், திட்ட அறிக்கைகள், உற்பத்தி பொருளின் விலை நிர்ணயம், விற்பனை வாய்ப்புகள், லாபம், மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நிதி மற்றும் மானியம் என்று ஏ டு இசட்... கேள்விகளை எழுப்புங்கள். சில திட்டங்கள், தொழில் துவங்கும் பெண்களுக்காகவே உள்ளன. சில வங்கிகள் தொழில்முனைவோருக்கென தனித்திட்டங்களை வைத்துள்ளன... இப்படி பிரத்யேகமாக இருக்கும் விஷயங்கள் பற்றியும் கேளுங்கள்!

பிஸினஸ் கேள்வி - பதில்

உங்கள் கேள்வியும், அதற்கு 'அவள்’ தரப்போகும் பதிலும் உங்களை ஒரு வெற்றிகரமான தொழில் அதிபராக உயர்த்துவதற்கான முதல் புள்ளியாக இருக்கும் என்பது நிச்சயம். இவ்வளவு நாட்களாக எங்கே செல்வது, யாரை அணுகுவது என்று வழி தெரியாமல் இருந்த உங்களுக்கு பதில் மட்டும் அல்ல... நீங்கள் துவங்க நினைக்கும் தொழிலுக்கான வழிகாட்டல்களும் இங்கே கிடைக்கப் போகிறது.

'பூஜ்ய'த்தில் இருந்த பல பெண்களை, தொழில்முனைவோராக்கி... 'ராஜ்ய'த் துக்கு அழைத்துச் சென்றுள்ளது நம் இதழில் வெளியான 'பூஜ்யத்திலிருந்து ராஜ்யத்துக்கு...' என்ற வெற்றித் தொடர்! அதை ஒருங்கிணைத்து தந்தவர்... தஞ்சாவூர், வல்லம், பெரியார் தொழில்நுட்ப வணிக காப்பகத்தின் திட்ட இயக்குநர் சி.ராமசாமி தேசாய். இங்கு அவர்தான் உங்கள் கேள்விகளுக்கு பதில் மட்டும் அல்லாமல், உங்களது கனவை நினைவாக்குவதற்கான உதவிகளையும் செய்யக் காத்திருக்கிறார்.

சாதாரணமாகவே ஆசிரியர் இலாகாவுக்கு வந்திருக்கும் சில கேள்விகளுக்கு இங்கே பதில் தந்து, தொடரோட் டத்தை ஆரம்பிக்கிறார் ராமசாமி தேசாய்...

''முதுநிலை பட்டம் பெற்றுள்ளேன். என் தொழிலுக்கு மூலதனமாக சுமார் 20 லட்சம் வரை தேவைப்படுகிறது. நான் யாரை அணுகி கடன் பெறுவது? கண்டிப்பாக கடன் கிடைக்குமா... அல்லது அலையவிடுவதுதான் நடக்குமா?''

பத்மாவதி, சேலம்

பிஸினஸ் கேள்வி - பதில்

''பட்டதாரி மற்றும் இளைஞர் என்ற தகுதியோடு இருப்பவர்களுக்காக தமிழக அரசு, 'நீட்ஸ்' என்கிற பெயரில் புதிய தொழில்முனைவோர்- தொழில்கள் மேம்பாட்டு திட்டம் ((Needs - New Entrepreneur cum Enterprise Development Scheme) ஒன்றை கொண்டு வந்துள்ளது. நீங்கள் இந்தத் தகுதியோடு இருப்பதால்... இத்திட்டத்தின் கீழ் கடன் பெறலாம். திட்டத்தை பற்றி முழுமையாக அறிந்துகொள்ள உங்களுடைய மாவட்ட தொழில்மைய மேலாளரை அணுகி விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இத் திட்டம் மூலம் நீங்கள் துவங்க உள்ள தொழில்களுக்கு தேவை யான அனைத்து உதவிகளை யும் தமிழக அரசு செய்து தரும். சுமார் 1,000 தொழில் அதிபர் களை இத்திட்டத்தின் மூலம் உருவாக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் எண்ணம். இந்த மூலதனத்தில் இருந்து 25% சதவிகிதம் மானியமும் வழங்கப் படும். இத்திட்டத்தை விரைவில் அமல்படுத்த உள்ளனர்.

அங்கே போய் நின்றதுமே கடன் கிடைக்க வேண்டும் என நினைத்தீர்களானால்... உரிய திட்ட அறிக்கை, நீங்கள் தொடங்கவிருக்கும் தொழிலில் அனுபவம் அல்லது பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்கள் என்று தேவையான ஆதாரங்கள் அனைத்தையும் கையில் வைத்திருக்கத் தவறக் கூடாது. இப்படி உரிய ஆவணங்கள் இல்லாமல், 'கடன் கிடைக்கவில்லை, ரெகமெண்டேஷன் இருந்தால்தான் கிடைக்கும்' என்றெல்லாம் அவநம்பிக்கையோடு பலரும் பேசிக்கொண்டுஇருப்பார்கள். அதில் அர்த்தம் ஏதுமில்லை என்பதை அனைவருமே உணரவேண்டும்.''

''கோவை மாவட்டம் கிராமப்புறத்தை சேர்ந்தவள் நான். எங்கள் மாவட்டத்தில்  உள்ள தொழில் பயிற்சி மையங்களைப் பற்றி கூற முடியுமா?''

சகாயமேரி, பல்லடம்

''கோவையில் உங்களுக்கு பயிற்சி அளிக்க பல நிறுவனங்கள் உள்ளன. கிராமப்புறத்தைச் சேர்ந்தவர் என்பதால், நீங்கள் கனரா வங்கியின் கிராமிய சுயதொழில் மையத்தை அணுகலாம். இப்பயிற்சி நிறுவனத்தில் வருடம் முழுவதும் பயிற்சி, இருப்பிடம், சாப்பாடு என அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. அவர்களுடைய பயிற்சி அட்டவணையைக் கேட்டுப் பெற்று, அதிலிருந்து உங்களுக்கு தக்க பயிற்சியை தேர்ந்தெடுத்து, அதில் சேரலாம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏதாவது ஒரு வங்கியின் பயிற்சி மையம் உண்டு. கோவையைப் பொறுத்தவரை, 'கனரா வங்கியின் டாக்டர் அம்பேத்கர் சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், புதுப்புதூர், SRKV போஸ்ட், பெரிய நாயக்கன்பாளையம் (வழி), கோயம்புத்தூர்' என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளுங்கள். போன் நம்பர் - 0422-2692080.''

பிஸினஸ் கேள்வி - பதில்