ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
Published:Updated:

இங்கே மாற்றுத்திறனாளிக்கு மட்டுமே வேலை !

இங்கே மாற்றுத்திறனாளிக்கு மட்டுமே வேலை !

##~##

புன்னகையுடன் வந்து அமர்கிறார், 'சகாயத்தா’ நிறுவனத்தின் உரிமையாளர் அர்ச்சனா. பிறவியிலேயே மூளை முடக்குவாத நோயுண்ட மாற்றுத்திறனாளி!

சென்னை, அபிராமபுரத்தில் இருக்கும் இவரின் நிறுவனத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு கைவேலைப்பாடு பயிற்சி கொடுத்து, வேலையும் கொடுக்கிறார். ஆர்ட் ஃப்ரம் வேஸ்ட் பொருட்கள், ஜூட் பேக், மெழுகுவத்தி உள்ளிட்ட பல பொருட்களை தயாரிப்பில் பிஸியாக இருந்த தன் பணியாளர்களை விசாரித்துவிட்டு, நம்முன் வந்து அமர்ந்த அர்ச்சனாவின் பேச்சில் ஆளுமை!

''பிறந்தப்போவே... மூளை முடக்குவாத நோய் தாக்கிடுச்சு. ஆரம்பத்தில் அழுது தவிச்சாலும், என்னையும் ஆளாக்கணும்னு முடிவு பண்ணி சிறப்புக் குழந்தைகளுக்கான 'வித்யாசாகர்

ஸ்பாஸ்டிக் சொஸைட்டி’ பள்ளிக்கூடத்துல சேர்த்தாங்க எங்கம்மா. அங்கதான் என்னோட கற்றல் ஆரம்பிச்சுது. சில மாதங்கள்லயே, 'உங்க பொண்ணை நீங்க தாராளமா நார்மல் பள்ளியிலயே படிக்க வைக்கலாம். புரிஞ்சுக்கற ஆற்றல் அவளுக்கு இருக்கு’னு சொல்லி அனுப்பி வெச்சுட்டாங்க. சந்தோஷமான அம்மா, மயிலாப்பூர்ல இருக்கிற வித்யாமந்திர் ஸ்கூல்ல சேர்த்தாங்க. மற்ற ஸ்டூடன்ட்ஸைவிட எந்த வகையிலயும் பின் தங்கிடாம என் படிப்பாற்றல் இருந்துச்சு.

இங்கே மாற்றுத்திறனாளிக்கு மட்டுமே வேலை !

படிப்பு, வேலை என்பதைவிட... சமுதாயம், சேவைனுதான் அதிகமா யோசிச்சிருக்கேன். அதனால ப்ளஸ் டூ முடிச்சதும் எம்.ஓ.பி. வைஷ்ணவா காலேஜ்ல பி.ஏ, சோஷியாலஜி சேர்ந்தேன். அப்போ இருந்தே ஏதாவது ஒரு அமைப்போட சேர்ந்து சமூக சேவைகள் செய்வேன். இது எனக்குள்ள இருந்த சமுதாயப் பற்றை இன்னும் அதிகமாக்குச்சு. 'மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க்'ல எம்.எஸ்சி, சைக்காலஜி முடிச்சேன்'' எனும் அர்ச்சனா... கொஞ்ச நேரத்துக்கு மேல், மற்றவர்களின் துணையில்லாமல் எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது. காரணம்... அவரைத் தாக்கியிருக்கும் மூளை முடக்குவாத நோயின் வேலைதான்! ''2006-ல படிப்பை முடிச்சதோட, உடனடியா வேலை தேட ஆரம்பிச்சேன். ஒய்.ஆர்.ஜி. கேர்-ல ரிசர்ச் கவுன்சலரா வேலை கிடைச்சுது. ஒரு வருஷத்துக்குப் பிறகு, வீட்டுலயே 'ஈ.எஸ்.கே லேர்னிங் சென்டர்’ நிறுவனத்தைத் தொடங்கி, சிறப்புக் குழந்தைகளுக்கு சாஃப்ட் ஸ்கில் மற்றும் மோட்டிவேஷன் கிளாஸ்கள் எடுக்க ஆரம்பிச்சேன். அதையே... பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்ல நார்மல் மாணவர்களுக்கும் எடுக்க ஆரம்பிச்சேன். பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள்ல சாஃப்ட் ஸ்கில் பயிற்சியாளராவும் இருக்கேன்.

லேர்னிங் சென்டர் ஆரம்பிச்சதுக்கு காரணம், கற்றல்ல குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு, ஒரு எதிர்கால பாதுகாப்பு கிடைக்க நம்மால் முடிஞ்சதை பண்ணணும்ங்கிற அக்கறையிலதான். என்னோட அம்மா மதுமதி, 'தமிழ்நாடு ஸ்பாஸ்டிக் லேர்னிங் சென்டர்’ல 16 வருஷமா வேலை பார்த்தவங்க. அவங்களோட வழிகாட்டலும் எனக்கு பக்கபலம். எங்கிட்ட வர்ற குழந்தைகளுக்கு, குறைஞ்சது ரெண்டு வருடங்கள் பயிற்சி கொடுப்பேன். அதுக்கு அப்புறம்... நார்மல் ஸ்கூல்ல சேர்ந்து படிக்கலாம்.

பொதுவா... மாற்றுத்திறனாளிகளோட பெற்றோர், கோர்ஸ் முடிச்சு போறப்ப... மனசுல ஒரு தெம்போட தங்களோட பிள்ளை களை அழைச்சுட்டுப் போவாங்க. ஆனா, ஒருநாள் எங்கிட்ட ஒரு அம்மா, 'எங்களுக்கு அப்புறம் யார் எங்க குழந்தைகளைப் பார்த்துப்பாங்க? இந்தப் பசங்களோட வாழ்வாதாரத்துக்கு ஒரு வழி கிடைச்சுட்டா, அவங்களே... அவங்கள பார்த்துப்பாங்க. ஆனா, அது சாத்தியமானு தெரியல’னு புலம்பிட்டுப் போக... அது எனக்குள்ள ஒலிச்சுட்டே இருந்துச்சு. 'நாமளே ஏன் இவங்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தர முயற்சி எடுக்கக் கூடாது?'னு தோணுச்சு. அதுல உருவானதுதான்... சகாயத்தா'' என்ற அர்ச்சனா, அதன் செயல்பாடுகளைச் சொன்னார்.

இங்கே மாற்றுத்திறனாளிக்கு மட்டுமே வேலை !

''ரெண்டு வருஷத்துக்கு முன்ன, மூணு குழந்தைகளோட ஆரம்பிச்ச 'சகாயத்தா'வுல... ஜூட் பேக், கேண்டில், ஹேண்ட்பேக், துணிப் பை தயாரிக்க பயிற்சி கொடுத்து வேலையும் கொடுக்கிறேன். வேஸ்ட் பேப்பர்ல சேர், டேபிள்னு ஃபர்னிச்சர் தயாரிக்கறதுக்கும் பயிற்சி கொடுக்கிறேன். இப்போ... மூளை முடக்குவாதம், மனவளர்ச்சி குன்றியவர்கள்னு பத்து பேர் வேலை பார்க்கறாங்க. தங்களோட குறைகளை மறந்து வேலைகள்ல கவனம் செலுத்துறாங்க. வியாபாரமும் ஆர்டர் எடுத்து செய்ற அளவுக்கு வளர்ந்திருக்கு. எல்லாத்துக்கும் மேல, இவங்களுக்கு எல்லாம் சொந்தக் கால்ல நிக்கற தன்னம்பிக்கையும், அவங்க பெற்றோர்களுக்கு

நிம்மதியும் கிடைச்சுருக்கு'' என்றவர்,

''15 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் யாரும் என்னை அணுகலாம். வேலைவாய்ப்புக்கான பயிற்சியும், வேலையும் வழங்குறதோட அவங்க வருங்காலத்துக்கு தேவையான தன்னம்பிக்கையும் வழிகாட்டலும் கிடைக்கும்!'' என்று உறுதி கொடுக்கும் அர்ச்சனாவுக்கு, 'பஜாஜ் அலையன்ஸ்’ நிறுவனம் இந்த ஆண்டுக்கான 'மோஸ்ட் இன்ஸ்பிரேஷனல் உமன்’ விருதை வழங்கி கௌரவித்துள்ளது!

- சா.வடிவரசு
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்