கடவுளிடம் கூட கிடைக்காது !
##~## |
'வலது கை கொடுப்பது... இடது கைக்குத் தெரியக் கூடாது!’ என்று சேவை செய்து வருபவர், ராஜாமணி அம்மாள். ஆனால், அவரை அனைவருக்கும் அறிமுகப்படுத்துவதால், அவரின் சேவை விதையை... மற்றவர்களின் மனங்களிலும் விதைக்கலாமே என்பது என் ஆவல். இந்தக் காரணத்தைச் சொல்லித்தான் ராஜாமணி அம்மாளிடம் அனுமதி பெற்றேன் இக்கட்டுரைக்கு!
'தானத்தில் சிறந்தது எது?' என்றால்... 'அன்னதானம்', 'கல்விதானம்', 'கண்தானம்' என ஒவ்வொருவரும் ஒன்றைச் சொல்வார்கள். ஒருவர் பயன்பெற, மனமுவந்து மற்றொருவர் செய்யும் எல்லா தானங்களுமே சிறந்ததுதான். தேவைக்கேற்பவே தானங்கள் முன்னுரிமை பெறுகின்றன என்பதுதானே உண்மை!
அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ராஜாமணி முத்துசாமி அம்மாளுக்கு வயது 76. ஒரு முதியவரின் வலியும், வேதனையும், தேவையும் இன்னொரு முதியவருக்குத்தானே அதிகம் தெரியும்..? அதனால்தான் இவரின் சேவை மனது, பெரும்பாலும் முதியவர்களின் உலகைச் சுற்றியே சிந்திக்கிறது.
விருதுநகரில் தனியார் நடத்திவரும் முதியோர் இல்லத்தில் குடில்கள், கட்டில்கள், விசேஷ நாட்களில் உணவு, உடைகள், முதியோர்களுக்கான பராமரிப்புச் செலவுக்கான வைப்பு நிதி என... அவர்களின் தேவை அறிந்து, உணர்ந்து செய்து வருகிறார். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஏழை நோயாளிகளுக்கு, சிகிச்சை, மருந்து, உணவு என தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறார்.
நான் அவரைச் சந்தித்தவேளையில், முதியோர் இல்லத்துக்கு தருவதற்காக வாஷிங் மெஷினும், ஒரு பீரோ நிறைய ஆன்மிகப் புத்தகங்களும் தயார் செய்து கொண்டிருந்தார்.

''விவேகானந்தர், 'இப்பூமியில் மனிதனாகப் பிறந்த நீ, இங்கு வாழ்ந்ததற்கான மகத்தான அடையாளம் என ஏதாவது ஒன்றை விட்டுச் செல்'னு சொல்வார். சொத்து, சொகம்னு சேர்த்து வெச்சுட்டுப் போறதைவிட, நாம போனதுக்கு அப்புறமும் மத்தவங்களோட மனசுல இருக்கிறமாதிரி புண்ணியம் சேர்த்துட்டா போதும் எனக்கு. ஏதோ என்னால ஆனதை செஞ்சுட்டு இருக்கேன்.
உதவற குணம், சின்ன வயசுலயே என்கிட்ட ஒட்டிக்கிட்டது. அந்தக் காலத்துல ஸ்கூல் ஹாஸ்டல்ல தங்கி எஸ்.எஸ்.எல்.சி. வரை படிச்சேன். எங்க அப்பா என் செலவுக்கு மாசம் 200 ரூபாய் அனுப்புவார். அப்போ ஒரு பவுன் தங்கத்தோட விலையே 60 ரூபாதான். அதனால, செலவு போக மீதி பணத்தை, கூட படிக்கற பிள்ளைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ், புத்தக ஃபீஸ்னு முடிஞ்ச உதவிகளை செய்வேன்.

மரக்கடை பிஸினஸ்ல பிரபலமா இருந்த முத்துசாமி நாடார்தான் என் கணவர். எங்களுக்குக் குழந்தை இல்லை. அவரும்... படிப்பு, திருமணம்னு இல்லாதவங்களுக்கு உதவுறதுல... சந்தோஷப்படறவர். அதனால, ரெண்டு பேருமே ஜாடிக்கேத்த மூடியா... செயல்பட ஆரம்பிச்சுட்டோம். அவரோட மறைவுக்குப் பிறகு, என்னோட மாமியார் தெய்வானை கீழே விழுந்து அடிபட்டுட்டாங்க. அவுங்கள பராமரிக்க முடியாம எல்லாரும் சிரமப்பட்டாங்க.. அப்பத்தான், 'வயசாகிட்டா, கடைசி காலத்துல யார் கையையும் எதிர்பார்க்காம இருக்கணும்'னு தோணுச்சு. தனசாமி - பரிமளாதேவி முதியோர் இல்லம் பற்றி கேள்விப்பட்டு... உதவிக்கிட்டிருக் கேன். கோடிக்கணக்குல சொத்து இருக்குது. ஆனாலும், வயசான காலத்துல யாரையும் எதிர் பார்த்து வாழாம, நானும் முதியோர் இல்லத் துக்குதான் போக முடிவெடுத்திருக்கேன்...''

- தன்னடக்கம் தவிர எதுவும் பேசாத ராஜாமணி அம்மாள், கண்தானம் செய்திருப்பதுடன், மரணத்துக்குப் பின் தன் உடலையே மதுரை, மெடிக்கல் காலேஜ் உடற்கூறியல் துறைக்குத் தர விண்ணப்பித்து உள்ளார்.
''நாம யாரும் அள்ளிக் கொடுக்கலைனாலும் கிள்ளியாவது கொடுக்கலாமே! பிறந்த நாள், திருமண நாள், கிரகப்பிரவேசம்னு விசேஷ தினங் களை ஆடம்பரமா கொண்டாடுறதை வேண்டாம்னு சொல்லல. அந்த நாட்கள்ல உறவுக்கும், நட்புக்கும் விருந்து கொடுக்கறது மாதிரியே... ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்துக்கோ, முதியோர் இல்லத்துக்கோ ஒருவேளை உணவு தரலாமே! நோட்டு புத்தகம், பழைய உடைகள், பாய், தலையணைனு அவங்க தேவை அறிஞ்சு ஏதாவது ஒண்ணு செஞ்சு கொடுக்கலாம்.
ஊரும், உறவும் கையில் கிஃப்ட் கொடுத்து, போட்டோவுக்கு போஸ் கொடுக்கற பகட்டு வாழ்த்தைத்தான் இதுவரை பார்த்திருப்பீங்க. ஆனா, ஆதரவில்லாத குழந்தைகளோட கண்ணுல ஊறுற சந்தோஷத்தையும், பெரியவங்க மனசுல ததும்புற நன்றியையும் ஒரு தடவை உணர்ந்துதான் பாருங்களேன். அதைவிடச் சிறந்த வாழ்த்து, ஆசீர்வாதம்... கடவுள்கிட்ட இருந்துகூட உங்களுக்குக் கிடைக்காது!''
- கண்களில் கருணை ததும்ப, உள்ளத்திலிருந்து கோருகிறார் ராஜாமணி அம்மாள்!
செய்வோமா..?!
- விஜிலா தேரிராஜன்
படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்
நீங்களும் நிருபர்தான் !
அசத்தலான, அற்புதமான, விஷயங்கள், சாதனை புரியும் பெண்கள்... இன்னும் பலதரப்பட்ட செய்திகள் உங்கள் அக்கம் பக்கத்தில் கொட்டித்தானே கிடக்கின்றன! அவற்றில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து, புகைப்படங் களுடன், கட்டுரையாக எழுதி அனுப்புங்கள்! பிரசுரமாகும் கட்டுரைகளுக்கு பரிசு உண்டு!
அனுப்ப வேண்டிய முகவரி... 'நீங்களும் நிருபர்தான்’, அவள் விகடன், 757 அண்ணா சாலை, சென்னை - 600 002. இ-மெயில்: aval@vikatan.com
பின்குறிப்பு : கட்டுரைகள் நூறு சதவிகிதம் உண்மையானவை யாக இருப்பது முக்கியம்.