She மெயில் !
கங்கிராட்ஸ் ஹிலாரி!

##~## |
இலக்கிய உலகில் சிறப்புமிக்க 'மேன் புக்கர் பரிசை’ இந்த ஆண்டதனது 'பிரிங் அப் தி பாடீஸ்’ என்ற சரித்திர நாவலுக்காக வென்றிருக்கிறார், இங்கிலாந்து பெண் எழுத்தாளர் ஹிலாரி மான்டெல். கூடவே, இந்த பரிசை இரண்டாவது முறையாக வென்ற முதல் பெண் எழுத்தாளர் மற்றும் முதல் இங்கிலாந்து எழுத்தாளர் என்கிற சாதனையையும் படைத்திருக்கிறார்!

சிக்கினா... சிக்ஸர்தான்!
இந்தியாவுக்கு சமீபத்தில் விசிட் அடித்த ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட், நம்முடைய ஜனாதிபதி மாளிகையில் ராணுவ அணிவகுப்பு மரியாதையை கம்பீரமாக ஏற்றார். இந்தியா, அவரிடம் எதிர்பார்த்தது... 'யுரேனியம் இறக்குமதி’க்கு பச்சைக்கொடி அறிவிப்பை! ஆனால், சாதுர்யமாக சமாளித்த ஜூலியா, ''சச்சின் டெண்டுல்கருக்கு 'ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா’ விருது வழங்கப்படும்'' என்கிற சர்ப்ரைஸ் அறிவிப்பை வெளியிட்டு, மீடியா மற்றும் இந்திய மக்களை வசீகரித்துவிட்டார்.

நவரசங்கள் தெரிகிறதா?
இந்தியா முழுவதும் களைகட்டிய நவராத்திரி விழாவின் வண்ணமயமான நிகழ்வுகள், வழக்கம்போலவே உலக அரங்கில் கவனத்தை ஈர்த்தன. நாட்டிய நிகழ்ச்சிகள் தொடங்கி, கொலு காட்சிகள் வரை அத்தனைக்கும் முக்கியத்துவம் தந்தன சர்வதேச செய்தி நிறுவனங்கள். அதில் ஒன்றுதான் நீங்கள் இங்கே பார்க்கும் அகமதாபாத் கலைஞர்களின் நடனக் காட்சி.

எல்லாமே 'ஹோம் வொர்க்’ மேஜிக்?!
அமெரிக்க அதிபர் தேர்தல் சூடுபறக்கிறது. முதலில் நடைபெற்ற பொது விவாதத்தில், குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் மிட் ரோம்னிக்கு, தற்போதைய அதிபர் ஒபாமா ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறினார். ஹோஃப்ஸ்ட்ரா பல்கலைக்கழகத்தில் நடந்த இரண்டாவது விவாதத்தில், வாக்காளர்களைக் கவரும் வகையிலான வாதங்களை முன்வைத்து சபாஷ் வாங்கிவிட்டார். விவாதத்தின் முடிவில், அந்த சந்தோஷத்தை மனைவி மிஷேலுக்கு முத்தம் தந்து கொண்டாடினார் ஒபாமா!

கிசுகிசு... இனி, புசுபுசு!
ஐந்து ஆண்டுகளாக காதலர்களாக பாலிவுட்டில் வலம்வந்த கரீனா கபூர்- சயீஃப் அலிகான் ஜோடி, ஒரு வழியாக கல்யாணம் கட்டிக் கொண்டுவிட்டது. மும்பையில் நடந்த இந்நிகழ்ச்சியில் நெருங்கிய உறவுகள் மட்டுமே கலந்துகொண்டன. மறுநாள் பால்கனியில் ஒய்யாரமாகக் கையசைத்த நட்சத்திர தம்பதியை வாழ்த்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்.

மீண்டு வா மலாலா!
பெண் கல்விக்காகக் குரல் கொடுத்துவரும் பாகிஸ்தானின் 14 வயது போராளிச் சிறுமி மலாலா யூசுஃப்ஸாய். இவருடைய தலையை தாலிபான் தீவிரவாதிகளின் துப்பாக்கிக் குண்டுகள் துளைக்க... உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக் கிறது இக்கொடூ நிகழ்வு. மேல் சிகிச்சைக் காக இங்கிலாந்து அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார் மலாலா.
அவர் மீண்டெழுந்து வருவதற்காக, இந்தியப் பள்ளி மாணவிகளின் பிரார்த்தனை.
தொகுப்பு: சரா