ஸ்டார் டிசைனர் அனுபவ தொடர்
##~## |
''சினிமாவில் ஸ்டார்களும், ஃபேஷன் ஷோக்களில் மாடல்களும் அணிந்து வரும் ஒவ்வொரு ஆடைக்குப் பின்னும், ஒரு ஃபேஷன் டிசைன ரோட உழைப்பு கொட்டிக்கிடக்கும். அதில் நானும் ஒருவன்!'' - சுருக்கமாகச் சிரிக்கிறார், விவேக் கருணாகரன். சென்னையின் ஹிட் ஹாட் ஃபேஷன் டிசைனர்களில் ஒருவர். ஃபேஷன் ஷோக்களில் தன் ஆடை ஆளுமை காட்டி அசத்திக் கொண்டிருந்தவர், 'அசல்’ படத்தில் அஜீத்துக்கு காஸ்ட்யூம் டிசைனர் ஆனதில், வெளியுலகுக்கு ஜம்மென்று அறிமுகமாகிவிட்டார்.
தொடர்ந்து தன்னுடைய கலக்கல் ஃபேஷன் வித்தைகள் மூலம்... விக்ரம், சூர்யா, தமன்னா, நயன்தாரா என்று பல ஸ்டார்களுக்கும் எக்ஸ்ட்ரா 'கெத்து’ கொடுத்து வருகிறார்.

ஃபேஷன், டிரெண்ட், டிசைனிங் உலகம் பற்றி உங்களுக்கு புரிய வைப்பதோடு... அந்த உலகத்திலிருந்து தான் பெற்ற அனுபவங்கள், செலிப்ரிட்டிகளுடனான தொழில் பயணம் என அனைத்தையும் கலந்துகட்டி, இங்கே உங்களை மெருகேற்றப் போகிறார் - இந்த 'ஃபேஷன் வேர்ல்டு' தொடர் மூலம். இனி ஓவர் டு விவேக்!
''கஷ்டப்படாம கிடைக்கற வெற்றியோட அருமையை உணர முடியாது. ஒரு மிடில் கிளாஸ் பையனான நான், இன்னிக்கு தமிழ்நாட்டுல குறிப்பிட்டுச் சொல்ற ஃபேஷன் டிசைனரா வளர்ந்திருக்கிற இந்த வெற்றியை... ஒவ்வொரு நிமிஷமும் தன்னம்பிக்கையோட நினைச்சுப் பார்த்துக்குறேன். அப்பா இன்ஜீனியர், அம்மா டீச்சர். கட்டுப்பாடான நடுத்தரக் குடும்பத்தில் இருந்து ’நிஃப்ட்’ கிராஜு வேட் ஆனேன்.

'பிள்ளைக்கு பாதுகாப்பான ஒரு வேலை, மாதச் சம்பளம்'னு யோசிச்சிஇருந்தாங்க எங்க அப்பா, அம்மா. எனக்கு ஃபேஷன் டிசைனர் ஆகணும்ங்கிறதுதான் விருப்பம். ஆனா, 'ஃபேஷன் டிசைனர்'னா என்னனு பலருக்கும் புரிய வைக்கிறதே சிரமமா இருந்த 2002-ம் வருஷ காலகட்டத்துல, நான் அந்த ஏரியாவுக்குள்ள போறதை அவங்க விரும்பல. 'நிச்சயம் ஜெயிப்பேன்!’னு சொல்லிட்டு, வேலையில் இறங்கினேன்!'' என்பவருக்கு அன்று முதல் இன்று வரை தொழிலிலும் வாழ்க்கையிலும் முதுகெலும்ப£க இருப்பவர், அவர் மனைவி ஸ்ரேயா கமாலியா.

''ஸ்ரேயா... நிஃப்டில் எனக்கு ஜூனியர். காதல் திருமணம். 2006-ல முதன் முதலா திருவான்மியூர்ல டேபிள் போடக்கூட இடம் பத்தாத ஒரு ரூம்ல எங்களோட 'வியா’ ஷோ ரூம் ஆரம்பிச்சோம். விவேக் - ஸ்ரேயா பெயர் காம்பினேஷன்தான் 'வியா’. ஃபேஷன் பத்தி பெரிய அவேர்னெஸ் இல்லாத அந்த நேரத்துல, எங்க பிஸினஸும் பிக்-அப் ஆகல. சரி ஃபேஷன் டிபார்ட்மென்ட்ல ஹையர் ஸ்டடிஸ் பண்ணலாம்னு, அதுக்கான பெஸ்ட் அகாடமியான இத்தாலி நாட்டின் மிலன் நகர்ல இருக்கிற 'டோமஸ் அகாடமி'க்கு அப்ளை பண்ணினேன். அந்த நேரத்துல 'லேக்மே ஃபேஷன் வீக் 2007' ஷோல கலந்துக்கிறதுக்கான வாய்ப்பும் கிடைச்சது. படிப்பை விட்டுட்டு ஃபீல்டுக்குள்ள வந்தேன்!'' என்பவருக்கு, இன்று இந்தியா முழுவதும் 12 ஃபேஷன் ஸ்டோர்கள் உள்ளன. சென்னையில் பற்பல சினிமா செலிப்ரிட்டிகள் இவரின் கஸ்டமர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஃபேஷன் ஷோக்களிலும் சார் செம

பிஸி.
''என்னைப் பொறுத்தவரை 'ஷோ ஸ்டாப்பர்'ங்கற இடத்துல ஒரு செலிப்ரிட்டியை வைக்கறதை பெருசா நம்புறது இல்லை. ஏன்னா... டிசைன் பண்ற டிரெஸ்ஸை அழகா பிரசன்ட் பண்ண... மாடல்ஸ் ஒரு ஸ்மார்ட் கருவியா இருப்பாங்க. ஆனா, 'ஷோ ஸ்டாப்பரா’ வர்ற ஸ்டார் எல்லா கவனத்தையும் தன் மேல கொண்டு வந்துடுவாங்க. இருந்தாலும் ஸ்பான்ஸர் கிடைக்கறப்ப கொள்கைகளை கொஞ்சம் மாத்திக்கத்தான் வேண்டியது இருக்கு!'' என்று சிரிக்கும் விவேக், நடிகர் சூர்யாவுடனான அனுபவங்களைப் பகிரும்போது மலர்கிறார்.
2011-ம் ஆண்டின் ஆரம்பத்தில் பிரபல போட்டோகிராபர் வெங்கட்ராம் தயாரித்த காலண்டர் ஒன்றின் போட்டோ ஷூட்டுக்காக சூர்யாவுக்கு டிசைன் செய்திருக்கிறார் விவேக்.
பார்த்துப் பார்த்து சூர்யாவுக்காக விவேக் உருவாக்கிய ஆடைகள், சூர்யாவின் பார்வையையே இவர் பக்கம் திருப்பிவிட்டது. அந்த அனுபவமும்... ஃபேஷன் பாடமும்... வந்து கொண்டே இருக்கிறது!
- மெருகு கூடும்...
படம்: ச.இரா.ஸ்ரீதர் சூர்யா
படங்கள் உதவி: ஜி.வெங்கட்ராம்