புண்ணியம் தரும் பெளர்ணமி வலம் ! விவேகநந்தா படங்கள்: ஜெ.வேங்கடராஜ்
##~## |
பௌர்ணமியன்று திருவண்ணாமலையில், மலையை வலம் வருதல் சிறப்பு! சென்னையிலோ... மூன்று கோயில்களை வலம் வருதல்... சிறப்பினும் சிறப்பு! அதுவும், வெள்ளிக்கிழமையும் பௌர்ணமியும் சேர்ந்து வரும் நன்னாளில் வலம் வந்தால், காசி - ராமேஸ்வரம் சென்றுவந்த புண்ணியம் எனப் பூரிக்கிறார்கள் பலனடைந்த பக்தர்கள்!
பல நூற்றாண்டுகளுக்கு முன்... சென்னை, மீஞ்சூர் பக்கமுள்ள மேலூர் திருமணங்கீஸ்வரர் கோயிலுக்கு அம்மன் சிலையை உருவாக்க, மலை மீதிருந்த பாறையைத் தேர்வு செய்தார் சிற்பி. அடிவாரத்துக்கு கொண்டு வரும்போது... திடீரென பாறை மூன்று துண்டுகளாக உடைய, 'அதற்குக் காரணம் இந்தக் கைதானே’ என்று கோபப்பட்ட சிற்பி, கையைத் துண்டிக்க முயன்றார்.
ஆதிபராசக்தியே அவர்முன் தோன்றி, ''கவலை வேண்டாம் பக்தா! இதுவும் என் திருவிளையாடலே! இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என மூவராக உருக்கொள்ளவே... பாறை, மூன்று துண்டுகளாகியிருக்கிறது. மூன்று உருவங்களையும் வடித்து, மூன்று கோயில்களில் நிறுவுவாயாக!' என்று அருளி மறைந்தாள்.

அதன்படியே.... மேலூரில் திருவுடைநாயகி (இச்சா சக்தி), திருவொற்றியூரில் வடிவுடைய நாயகி (ஞான சக்தி), திருமுல்லைவாயிலில் கொடியிடைநாயகி (கிரியா சக்தி) என ஸ்தாபித்தார் சிற்பி. அவருக்கு ஆதிபராசக்தி காட்சி தந்தது பௌர்ணமி தினம் என்பதால்தான், இந்த மூவரையும் அந்த நாளில் வழிபட்டு, அருள் பெறுகிறார்கள் பக்தர்கள். என்ன... நாமும் வலம் வருவோமா!
முதலில்... மேலூர் திருமணங்கீஸ்வரர் கோயில்: சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில், மீஞ்சூரில் இறங்கி, சென்னை சாலையில் 3 கி.மீ. பயணித்தால்... மேலூர், ஸ்ரீதிருவுடைநாயகி வீற்றிருக்கும் கோயில். சிவனாரின் திருநாமம், ஸ்ரீதிருமணங்கீஸ்வரர்.

'ஒருகாலத்தில் இப்பகுதியில் வாழ்ந்த செல்வந்தர் ஒருவரது பசு, இங்குள்ள காட்டுப்பகுதியில் ஒரு புற்றுமீது தானாக பால் சொரிந்து வருவது தெரிய வர... அங்கே சென்று பார்த்தனர் மக்கள். அந்தப் புற்று, லிங்க வடிவில் இருப்பதைப் பார்த்து வியந்தனர். பிறகு, அங்கே சிறிய கோயில் எழுப்பப்பட்டது. நாளடைவில் பெரிய கோயிலாக உருவானது' என்கிறது ஸ்தல வரலாறு.
கோயிலில் தரிசனம் செய்துகொண்டு இருந்த அமுல், ''திருமணமாகி, நான் வாழவந்த ஊர் இது. முதல்ல எனக்கு பெண் குழந்தை பிறந்தது. அடுத்ததா ஒரு ஆண் குழந்தை வேணும்னு இங்க விளக்கேத்தினேன். அம்மன் அருளால ஆண் குழந்தை பிறந்துச்சு. இவ ரொம்ப சக்திவாய்ந்த அம்மன்!'' என்கிறார் பரவசத்துடன்.
இவளை வழிபட்டால்... திருமணத்தடை நீங்கும், புத்திர பாக்கியம் கிடைக்கும், தீராத நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!
இரண்டாவது... சென்னையிலேயே இருக்கும் திருவொற்றியூர் ஸ்ரீவடிவுடைய நாயகி: தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் இது
20-ம் தலம். அம்பாள் வடிவுடைய நாயகியின் மணாளன்... ஸ்ரீஆதிபுரீஸ் வரர். இத்தலத்து ஸ்ரீதியாகராஜர் பிரசித்தி பெற்ற மூர்த்தி என்பதால், அப்பெயரிலேயே கோயில் அழைக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை இங்கே வழிபடுவது சிறப்பு என்பதால்... பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது. அப்படி வந்திருந்த கவிதா, ''திருமணம் ஆன புதுசுல... ரெண்டு முறை கரு கலைஞ்சுடுச்சு. கண்ணீரோட அம்மன்கிட்ட வேண்டினேன். அப்புறம்தான் கரு தங்கிச்சு. இப்போ எங்களுக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன். ஆரம்பத்துல வாடகை வீட்ல இருந்த நாங்க, இப்ப சொந்த வீட்டுல இருக்கோம். எல்லா சந்தோஷத்துக்கும் காரணம் அம்மன்தான்!'' என்று புகழ்மாலை சூட்டினார்.
பிராகாரத்தில் 27 நட்சத்திரங்களின் பெயரில் சிவலிங்கங்கள் இருக்கின்றன. ஜாதக தோஷம் உள்ளவர்கள், நட்சத்திர நாளில் சம்பந்தப்பட்ட லிங்கத்துக்கு தீபம் ஏற்றி வழிபட்டால்... தோஷ நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

நிறைவாக நாம் தரிசிப்பது... ஸ்ரீகொடியிடை நாயகி: அம்பாளின் இடை, கொடி போன்று மெல்லியதாக இருப்பதால் அப்படியரு பெயர். இறைவன்... ஸ்ரீமாசிலாமணீஸ்வரர். சென்னை - திருவள்ளூர் ரயில் மற்றும் பஸ் மார்க்கத்தில் அமைந்துள்ளது திருமுல்லைவாயில்.

இப்பகுதியை ஆண்ட தொண்டைமான் எனும் மன்னன், யானை மீதமர்ந்து சென்றபோது... யானையின் கால்கள் செடி, கொடிகளில் சிக்கிக்கொண்டன. கீழிறங்கி, தனது வாளால் செடி, கொடிகளை அவன் வெட்டியபோது... வாளில் ரத்தக்கறை! பதறிய மன்னன் தேடியபோது, அங்கு இருந்த சிவலிங்கத்தின் தலைப்பகுதியில் வெட்டுபட்டதே அதற்குக் காரணம் என்பது தெரிந்தது. அறியாமல் செய்த குற்றமாயினும், வாளாலேயே தன்னை மாய்த்துக் கொள்ள முயன்றான் மன்னன். அவனைத் தடுக்கும் பொருட்டு, சிவனார் அம்பாளுடன் அவசரமாக காட்சி தந்ததால், அவர்கள் இருவருமே இந்தத் தலத்தில் இடம்மாறி இருக்கிறார்கள். மன்னனின் வாளால் தலைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, இத்தலத்து சிவலிங்கத்துக்கு அபிஷேகம் கிடையாது. சந்தனக்காப்பு மட்டும்தான்.


தன் தாயாருடன் வந்திருந்த திருநெல்வேலியைச் சேர்ந்த ராஜி, 'என் வீட்டுக்காரர்தான் இந்த கோயில்களோட சிறப்பை சொன்னார். இங்கே வந்து, அம்மனை தரிசிச்சதும் எனக்கு இன்ப அதிர்ச்சி. எங்க ஊர் காந்திமதி அம்பாளைப் போலவே இருக்கா இந்த கொடியிடை நாயகியும்! அம்மன் கிட்ட நல்ல மழை பெய்யணும்னு வேண்டிக்கிட்டேன். அப்போதானே நாடு நல்லாயிருக்கும்!''
- கன்னங்களில் குழிவிழச் சொன்ன ராஜியை, பாராட்டி நகர்ந்தோம்.
இக்கோயிலில் ஸ்வாமி சந்நிதி முன்பு பெரிய அளவிலான 2 வெள்ளெருக்கம் தூண்கள் உள்ளன. இவற்றை தொட்டு, கண்களில் ஒற்றிக்கொண்டால் நினைத்த நல்ல காரியங்கள் சட்டென்று நடக்கும் என்கிறார்கள்.
ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் காலையில் மேலூர், மதியம் திருவொற்றியூர், மாலையில் திருமுல்லைவாயில் என மூன்று அம்மன்களையும் வழிபட வேண்டும் என்பதுதான் 'பௌர்ணமி கோயில் வலம்' என்பதன் சிறப்பு. என்ன வாசகிகளே... புறப்படலாமா!