ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
Published:Updated:

'அவளு’ம் நானும்... பேசுகிறார்கள் பிரபலங்கள்..!

'அவளு’ம் நானும்... பேசுகிறார்கள் பிரபலங்கள்..!

##~##

பதினைந்தாம் ஆண்டு கொண்டாட்ட தருணத்தில், அவள் விகடனுக்கும் தங்களுக்குமான உறவு, நெருக்கம் என்று பலவற்றையும் இங்கே பகிர்கிறார்கள் பிரபல பெண்கள்...

ஹரிணி, பாடகி

''கடந்த அஞ்சு வருஷமா, அவள் விகடன் படிக்கிறேன். இந்த அழகான பெண்களின் உலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தினது, அவள் விகடனின் தீவிர வாசகியான எங்கம்மா. சமையல் ரெசிபீஸ்ல இருந்து சட்டம் வரை அதில் அவங்க படிக்கிற விஷயங்களை எல்லாம் எனக்கும் சொல்லுவாங்க. 'எப்படிம்மா உனக்கு இவ்வளவு தெரிஞ்சிருக்கு..?’னு கேட்ட ஒரு மாலை வேளையில்தான், 'நீயும் தெரிஞ்சுக்கலாம்!’னு 'அவள் விகடன்’ எடுத்துட்டு வந்து என் கையில் கொடுத்தாங்க. பிரிச்சுப் பார்த்தா, 'இவளை இவ்வளவு நாள் மிஸ் பண்ணிட்டோமே’னு நினைக்க வெச்சுட்டா. அதில் இருந்து, இசை பற்றிய புத்தகங்கள் தவிர்த்து நான் படிக்கிற ஒரே மேகஸின்... 'அவள்’தான்.

'அவளு’ம் நானும்... பேசுகிறார்கள் பிரபலங்கள்..!

பல இடங்கள்ல, சந்தர்ப்பங்கள்ல என்னைச் சுத்தி இருக்கிறவங்களும் 'அவள்’ பெருமை பேசக் கேட்டிருக்கேன். எல்லா தரப்பு பெண்களையும் மனசுல வெச்சு, அவங்களுக்கு என்னவெல்லாம் தேவைனு உணர்ந்து, அதை நம்ம கைகளில் கொண்டு வந்து சேர்க்கிற 'அவள்’, எனக்கு ரயிலில் ஜன்னலோரப் பயணக் காற்றுபோல இதமானவள்!''

தமிழச்சி தங்கபாண்டியன், கவிஞர்

''ஆண்களும், பெண்களும் சமம்னு நினைக்கிறவ நான். 14 வருஷத்துக்கு முன்னால 'அவள் விகடன்’னு ஒரு பெண்கள் பத்திரிகை வெளிவந்தப்போ, 'பத்திரிகை உலகத்திலும், 'பெண்களுக்கு’னு கட்டம் கட்டி ஒதுக்குகிற ஒரு இதழ் தேவைதானா..?’னு யோசிச்சிருக்கேன். ஆனா அதைப் படிச்சப்போ, இது பெண்களுக்கான அவசியத் தேவைனு தெரிஞ்சுக்கிட்டேன். மருத்துவம், சட்டம், தொழில், தன்னம்பிக்கை, கவுன்சிலிங், கல்வி, வேலைவாய்ப்புனு ஒரு பெண்ணுக்குத் தேவையான எல்லா பக்கங்களையும் தன் அட்டைக்குள் உள்ளடக்கியிருக்கிற 'அவள்’, 'பெண்கள் பத்திரிகைனா சமையலும், கோலமும்தான்’னு நினைச்ச எல்லாரோட எண்ணத்தையும் பொய்யாக்கிச்சு.

'அவளு’ம் நானும்... பேசுகிறார்கள் பிரபலங்கள்..!

கதை, கட்டுரை, கவிதை, இப்போ 'நீங்களும் நிருபர்தான்’னு பல வாசகத் தோழிகளையும் படைப்பாளியாக்கி அழகுபார்ப்பாள் 'அவள்’. அந்த அங்கீகாரத்தின் மூலமே தன் திறமையைத் தானே முதல் முறை உணர்ந்த பெண்கள் பலர்!''

பாலபாரதி, எம்.எல்.ஏ

'அவளு’ம் நானும்... பேசுகிறார்கள் பிரபலங்கள்..!

''நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புறது... தலையங்கம். பொதுவா பெண்களுக்கு அட்வைஸ் பிடிக்காது. அதை நல்லா புரிஞ் சுட்டு, தட்டையான அறிரையா இல்லாம, சமீபத்தில் நடந்த சம்பவங்களைக் குறிப்பிட்டு, 'உஷார் தோழிகளே’னு சொல்லாமல் சொல்லும் தலையங்க ஸ்டைல் அருமை. கவிதைப் பகுதியை தொடர்ந்து அளிக்கலாம் என்பது என் விருப்பம். நிறைய படைப்பாளிகளை வெளியில் கொண்டுவரலாம். அதேநேரம், சினிமாவில், சீரியலில், விளம்பரங்களில், பத்திரிகை மொழிகளில் கையாளுவதில்னு பெண்களை நாகரிகமற்ற முறையில் சித்திரிக்கிறதை சுட்டிக்க£ட்டி குட்டற விமர்சனப் பகுதி இருந்தா நல்லா இருக்கும்.''

அஜிதா, வழக்கறிஞர்

'அவளு’ம் நானும்... பேசுகிறார்கள் பிரபலங்கள்..!

''ஒருமுறை நானும், வேறு பலதுறைகளைச் சார்ந்த பெண்களும், நிருபர்களும் என 6 பேர்... வரதட்சணை, பெண்ணுரிமைகள், வேலைக்கு போகும் இடத்தில் உள்ள பாகுபாடுகள், குடும்பத்தில் உள்ள பிம்பப்படுத்துதல், சமூகத்தில் பலதுறைகளில் பெண்களுக்கான அங்கீகாரம் என பல விஷயங்களை, அவள் விகடன் அலுவலகத்தில் அமர்ந்து விவாதித்தோம். அந்தக் கலந்துரையாடல் அழகான கட்டுரைகளாக வந்தது. எங்களின் கருத்துகள் சிதையாமல், மாறாமல் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து... 'அவளு’டனான என் உறவு இன்று வரை நட்புடன் தொடர்வதை திரும்பிப் பார்க்கிறேன். மிகச்சமீபத்தில் 14 நாட்களுக்கு 14 விதமான    3 நிமிட கருத்துக்களை பதிவு செய்து, ஒரு எண்ணுக்குத் தொடர்பு கொண்டால் அவற்றை வாசகிகள் கேட்கும்படி அமைத்தது அவளின் மற்றொரு மைல் கல்.

தேசிய அளவில் பெண்கள் இயக்கங்களில் பெண்கள் முன்னேற்றம், பின்னடைவுகள், புதிய முயற்சிகள், பழமையின் பின்னிழுப்புகள், நீதிமன்றத்தின் புதிய முத்தாய்ப்பான தீர்ப்புகள், ஆண் மைய சமூகத்தின் சாடல்கள் என கண்ணுக்குத் தெரியாத ஒரு பெண்ணியப் போராட்டம், வளர்ச்சி போக்குகள் போன்றவற்றையெல்லாம் பதிவு செய்வதற்கென பக்கங்களை அதிகரிக்க வேண்டும்!''

இந்துமதி, எழுத்தாளர்

'அவளு’ம் நானும்... பேசுகிறார்கள் பிரபலங்கள்..!

''சென்ற தலைமுறையையும் இந்தத் தலைமுறையையும் இணைக்கும் புதுமைகளை பூரணமாக்குற விதமா முதலில் வந்தது 'அவள் விகடன்’தான். அதனாலதான் அவள் விகடனின் முதல் இதழில் இருந்து இன்று வரை நான் அதற்கு நெருக்கமான வாசகி. ஒரு முறை பாரீஸ் போயிருந்தப்போ, அங்கே நிறைய கல்லூரிப் பெண்கள் புதிது புதிதா ஃபேஷன் ஜுவல்லரிகளுக்கான பொருட்களை வாங்கிக்கிட்டிருந்தாங்க. விசாரிச்சப்போ, 'நாங்களே செய்து விற்கிறோம்!’னு சொன்னாங்க. 'யார் கற்றுக் கொடுத்தா..?’னு கேட்டா, 'அவள் விகடன்!’னு சொன்னாங்க. இப்படி ஏதாவது ஒரு சுயதொழிலைக் கற்றுக்கொடுத்து, பெண்களோட பொருளாதாரப் பிடிமானத்துக்கு 'அவள்’ தொடர்ந்து அளித்து வரும் அக்கறை, உண்மையானது.''

'பத்மஸ்ரீ' கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
தலைவி, உழவனின் நில உரிமை இயக்கம் (LAFTI)

'அவளு’ம் நானும்... பேசுகிறார்கள் பிரபலங்கள்..!

''இந்த 88 வயதிலும், ஏனோ... கண்ணாடி போட்டுக் கொண்டு படிக்க பிடிக்காமலேயே போச்சு. படிக்கணும்னு எனக்கு தோணுறப்போ, வீட்ல இருக்குறவங்ககிட்ட, நியூஸ் பேப்பர், புத்தகங்கள் வாங்கிட்டு வரச்சொல்லி அனுப்புவேன். அதில் நான் இந்தந்த புத்தகம்னு பெயர் குறிப்பிட்டதெல்லாம் கிடையாது. ஆனால், என் கரம் சேரும் புத்தகங்களில் 'அவள் விகட’னும் ஒண்ணு இருக்கும். விரும்பிப் படிப்பேன்னு என்னைச் சுத்தி இருக்கறவங்க எல்லோருக்குமே தெரியும். பெண்கள் தங்களோட சக்தியை தேடி எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு அவள் விகடனில் நிறையவே இருக்கும். அப்போதும் சரி, இப்போதும் சரி... என் பயணங்கள் பெரும்பாலும் ரயில் பயணங்களாகவே அமைந்துவிடும். அப்போது எல்லாம் என்னை பார்த்து பேசுபவர்கள், பலரும்... ''உங்களை அவள் விகடன் பேட்டியில் பார்த்திருக்கேனே..!''னு அன்போடு பகிர்ந்து கொள்வார்கள்.

மறக்க முடியாத ஒரு விஷயம் இங்கே நினைவுக்கு வருகிறது. மதுரையில் இருக்கும் ஒரு பெண். அவளின் நலன் கருதி பெயரை தவிர்க்கிறேன். கணவரின் தொடர் கொடுமைகளுக்கும், இன்னல்களுக்கும் ஆளாகி இருந்தவள். ஒருவித புதுத்தெம்பு வந்து விழ, தன் கணவரால் தனக்கு நேர்ந்த இடையூறுகளை எல்லாம் சேர்த்து ஒரு புனைப்பெயரை வைத்துக்கொண்டு, அவ்வப்போது அவள் விகடனில் எழுதி வருவாள். அப்போது எல்லாம் அதை படித்துவிட்டு என் கருத்தையும் கேட்பாள். நானும், அதை விமர்சிப்பேன். கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மெருகேற்றிக் கொண்டு... தனித்துவமாக செயல்பட தொடங்கியவள், இன்று ஒரு வங்கியில் மேலாளராக பணியாற்றுகிறாள். அந்த 'தன்முயற்சி’ இப்போதும் எனக்கு ஆச்சர்யத்தைத் தரும்.

பதினைந்தாயிரம் பேர் கொண்ட ஒரு பட்டாளத்தையே கட்டுக்கோப்பாக நகர்த்திய அனுபவம் எனக்கு உண்டு. என்னைச் சுற்றி இருக்கும் பெண்களிடம்... சொல்வேன், 'வீ ஆர் நாட் ஆன் எம்ப்டி பாக்ஸ்!’ என்று. அதில் ஒரு சிறு ஒளி ஏற்றி வைத்தால் போதும். அந்த ஒளியை அவள் விகடனும், தன் பங்குக்கு இங்கே பெண்கள் மத்தியில் நிறையவே ஏற்றி வைத்திருக்கிறது!''

- அடுத்த இதழிலும் பேசுவார்கள்...

படங்கள்: ஆ.முத்துக்குமார், ரா.மூகாம்பிகை