சிலிர்க்கிறார் 'இங்கிலீஷ்... விங்கிலீஷ்' கௌரி
##~## |
'இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படம் மூலமாக 15 ஆண்டுகளாக நடிக்கா மல் இருந்த 'வெள்ளி விழா’ நாயகி, லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவியை, மீண்டும் வெள்ளித்திரையில் தோன்ற வைத்ததோடு இல்லாமல், 'இங்கிலீஷ் ஓர் இனிமையான, ஈஸியான மொழி. அதற்காக அஞ்சி நடுங்கி, தாழ்வு மனப்பான்மையில் சிக்கி, வாழ்க்கையில் தோற்றுப் போகாதீர்கள் தோழி களே..!’ என தன்னம்பிக்கை டானிக்கையும் தன் முதல் படத் திலேயே கொடுத்திருக்கிறார் இயக்குநர் கௌரி ஷிண்டே!
இந்தி, தமிழ், தெலுங்கு என திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம் படம் நல்ல பெயரை சம்பாதிக்க... வெற்றிச் செய்திகளால் கௌரியின் அலைபேசி, மின்னஞ்சல், ஃபேஸ்புக் எல்லாமே பூங் கொத்துகளால் நிரம்பி வழிகின்றன. மகிழ்ச்சியில் முகம் மலர்ந்து மத் தாப்பூ போல் சிரித்துக் கொண்டிருந்த இயக்குநர் கௌரி ஷிண்டேவை, இளம்காலைப் பொழுதொன்றில் பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம்.
''எதிர்பார்ப்புகள் இல்லாத அன்பு, நட்பு இவற்றில் கிடைக்கும் சந்தோஷத்தைப் போல, இந்த வெற்றி எக்கச்சக்க சந்தோஷத்தைக் கொண்டு வந்திருக்கிறது. ஆசை ஆசையாக ஒரு அழகான குழந்தை யைப் பெற்றெடுத்தது போலிருக்கிறது. எத்தனை எத்தனை விரக்தி, முயற்சி, தேர்வு, தோல்வி, அவமதிப்பு என எல்லாவற்றையும் தாண்டி... ஆறு மாதங்கள் ராத்திரி, பகலாக நேர்மையாக உழைத்ததற்கு கை மேல் பலன் கிடைத்திருக்கிறது. இந்த வெற்றிக்கு நான் மட்டுமே காரணம் எனச் சொல்ல என் மனசாட்சி இடம் தராது. என்னுடைய கணவர் பால்கி, ஸ்ரீதேவி, அமிதாப்பச்சன், அஜீத், 'இங்கிலீஷ் விங்கிலீஷ்’ மொத்த யூனிட் எல்லோருக்கும் என் மனப்பூர்வமான நன்றி!''

- கௌரியின் ஆங்கிலமும் புன்னகையும் அழகு!
''என்னுடைய பூர்விகம் மும்பை. படித்தது, வளர்ந்தது புனேவில். வாழ்க்கைப்பட்டிருப்பது அக்மார்க் தமிழ்க் குடும்பத்தில். ஆனால், பால்கி வீட்டில் அனைவரும் முழுமையான மும்பைவாசிகள். வீட்டில் அனைவரும் இங்கிலீஷே பேசுவதால் தமிழில் 'வணக்கம்’, 'நல்லா இருக்கீங்களா?’ மட்டும் தெரியும். ஆனால்... இட்லி, தோசை, பொங்கல் என தமிழ் சாப்பாடுதான் எங்கள் வீட்டில் தினமும். மும்பையிலேயே பொங்கல், தீபாவளி என எல்லா தமிழ் பண்டிகைகளையும் கொண்டாடுவோம். மொத்தத்தில், நானும் தமிழ்நாட்டு மருமகள்!'' என சந்தோஷப்பட்ட கௌரி, தன் வெள்ளித்திரை வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டார்...
''என் கணவர் பால்கி, அமிதாப் பச்சனின் 'சீனி கம்’, 'பா’ ஆகிய படங்களை எடுத்தவர். இசைஞானியின் மகா காதலர். மாஸ் கம்யூனிகேஷன் படித்த நான், பத்தாண்டுகளுக் கும் மேலாக விளம்பரத் துறையில் இருக்கிறேன். இதுவரை நூற்றுக்கணக்கான விளம்பரப் படங்களை இயக்கி இருக்கிறேன். பால்கியும் விளம்பரத் துறையில் இருந்த தால், எங்களுக்கு இடையில் நிகழ்ந்த ஓர் ஆச்சர்யமான சந்திப்பு... நட்பாக பூத்து, காத லாக காய்த்து, கல்யாணத்தில் கனிந்தது.

அவர் வெள்ளித்திரையில் தன் பயணத்தை தொடங்கிவிட்டாலும், நான் விளம்பரத்துறையிலேயே இயங்கினேன். ஏகப்பட்ட விளம்பரப் படங்கள் எடுத்ததால், சின்னதாக ஒரு அயற்சி இருந்தது. அதனால் 2003-ல் 'ஓ..மேன்!’ என்ற குறும்படம் ஒன்றை இயக்கி னேன். அதில் இந்திய சமூகத் தில் ஆணாதிக்கம் எப்படி தலைவிரித்தாடுகிறது என்பதை உண்மைக்கு நெருக்கமாக படமாக்கி இருந்ததால் கேன்ஸ், டொரோன்டோ என இன்டர் நேஷனல் திரைப்பட விழாக் களில் எல்லாம் அந்தப் படம் பரிசுகளை அள்ளியது. அந்த உற்சாகத்தில் 'ஒய் நாட்’ என்ற இன்னொரு குறும்படம் எடுத் தேன். அதிலும் என் ஸ்டைலில் சமூகத்தில் பெண் குழந்தைகள் மீது ஏவப்படும் வக்கிரங்கள் குறித்து படமாக்கினேன். அந்தப் படமும் உள்நாடு, வெளிநாடு என எல்லா திசைகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதிலிருந்தே... பார்க்கிற பிரபலங்கள் எல்லாரும், 'அடுத்து வெள்ளித்திரைதானே?’ என்றே கேட்டுக்கொண்டிருந்தனர். 'வெள்ளித்திரையில் இரண்டரை மணி நேரம் பார்வையாளர்களை என்டர்டெயின் பண்ணும் வகையில் நம்மால் படம் எடுக்க முடியுமா?' என்ற சந்தேகம் எனக்கு. ஆனால், பால்கி கொடுத்த தைரியத்தில், 'முடியும்...’ என்ற நம்பிக்கை எனக்குள் பிறந்தது!'' என கண்களைச் சிமிட்டியவர், 'இங்கிலீஷ் விங்கிலீஷ்’ கருவுற்ற கதையை அசைபோட்டார்.
''ஒரு வருடத்துக்கு முன், தனியாக நியூயார்க் போய் இருந்தேன். தூக்கம் தொலைத்த ஒரு தனிமையான இரவில், 'இங்கிலீஷ் தெரியாமல் இந்திய நடுத்தர குடும்பத்துப் பெண், நியூயார்க் கில் தட்டுத் தடுமாறி வாழ்க்கை நடத்துகிறாள்’ என்ற ஒற்றை வரி என் மனதில் ஸ்பார்க் ஆனது. உடனே பால்கிக்கு போன் போட்டேன். 'வாவ்... சூப்பர்! உடனே எழுது. நல்லா வரும்!’ என வழக் கம் போல எனர்ஜியோடு பேசினார். எழுதி முடித்ததும், படமாக்க முடிவு செய்தோம்.

அதன் பின்னர் ஒருநாள் போனி கபூர், ஸ்ரீதேவி யிடம் பால்கி பேசிக்கொண்டிருந்தபோது, 'என் மனைவி படம் பண்ணப் போகிறாள்’ என சொல்ல, 'என்ன கதை?’ என ஸ்ரீதேவி கேட்க, பால்கி அந்த ஒற்றை வரியைச் சொல்லி இருக் கிறார். ஸ்ரீதேவி அதில் ஏதோ ஒரு விதத்தில் இம்ப்ரஸ் ஆகி, என்னை அழைத்து கதை கேட்டார். நடுக்கத்துடன்தான் கதை சொல்லி முடித்தேன். 'சூப்பர்! இதை நான் பண்றேன்!’ என்று சர்ப்ரைஸ் கொடுத்தார் ஸ்ரீதேவி. 15 ஆண்டுகளாக குடும்பத்துக்காகவும், குழந்தைகளுக் காகவும் நடிக்காமல் இருந்த ஸ்ரீதேவியின் 'கம் பேக்’, அதை அழகாகப் பயன்படுத்த வேண்டும் என்பது கூடுதல் பொறுப்பானது. என் மீதும் என்னுடைய ஸ்கிரிப்ட்டின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்ததால், ஆறே மாதத்தில் படத்தை முடித்துவிட்டேன்!'' என்று சிரித்தவரிடம், அஜீத் பற்றிக் கேட்டோம்.
''படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் இந்தியில் அமிதாப் பச்சனும், தமிழில் அஜீத்தும் நடித்து இருக்கிறார்கள். நாங்கள் கேட்டவுடன், 'எங்கு, எப்போது ஷூட்டிங்?’ எனக் கேட்டு, நேராக ஸ்பாட்டுக்கு வந்து விட்டார் அஜீத். 'நான் ஏதாவது ஹெல்ப் பண்ணணுமா? லைட் பிடிக்கணுமா?’ என மிக எளிமையாகப் பழகினார். ஷூட்டிங் முடியும் வரை ஒருமுறைகூட கேர வனுக்கு போகவே இல்லை. அஜீத் ஷூட்டிங் முடிந்து 'பை’ சொல்லிக் கிளம்பியபோது... ஸ்ரீதேவி, நான், என்னுடைய அசிஸ்டென்ட்ஸ் எல்லாரும் அஜீத்தை சின்ஸியராக லவ் பண்ண ஆரம்பித்து விட்டோம். ரொம்பவே அன்பான, நேர்மையான, ஃப்ரெண்ட்லியான மனிதர். அஜீத்துக்கு 'சீனி கம்’ ஸ்டைலில் ஒரு கதை பண்ண ஆசை!'' என்றவர்,
''இங்கிலீஷ் விங்கிலீஷ்... யாரோ ஒரு பெண்ணின் கதையல்ல. நம் இந்திய இல்லத்தரசிகள் அனை வரின் பொதுக்கதை. எனக்கு இந்தப் படைப்புக்கு என் அம்மாதான் இன்ஸ்பிரேஷன். ஆங்கிலம் என்ற மொழி தெரியாமல் தாழ்வு மனப்பான்மை யில் சிக்கித் தடுமாறி, இந்தியாவில் எத்தனையோ பெண்களும் ஆண்களும் வாழ்க்கையையே கோட்டை விடுகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் கிராமப்புறத்து மாணவர்கள் இங்கி லீஷ் தெரியாததற்காக தற்கொலையே செய்து கொள்கிறார்கள். ஆங்கிலம் என்பது பூதம் அல்ல, அழகான மொழி. முயன்றால் யாரும் பேசலாம். சமூக அக்கறையுடன் இதைப் படமாக்கி இருக்கி றேன். நம் பெண்களின் பிரதிநிதியாக, சஷி கேரக்டரில் வாழ்ந்து காட்டியிருக்கிறார் ஸ்ரீதேவி. பல்வேறு பெண்கள் அமைப்பிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கின்றன. என் அம்மாவுக்கும், நம் அம்மாக்களுக்கும் சமர்ப் பணம்!''
- இமைகள் மூடி முடித்தார் கௌரி ஷிண்டே!
இரா.வினோத்
படங்கள்: சு.குமரேசன்