நமக்குள்ளே...
##~## |
'உங்களுக்கு யாதுமாகி நிற்கப்போகும் 'அவள்', என்றென்றும் உங்கள் தோழியாக அங்கீகாரம் பெறுவாள்...’
- இப்படியரு நம்பிக்கை விதையோடுதான், பதினான்கு ஆண்டுகளுக்கு முன், உங்களின் கைகளை அலங்கரிக்க வந்தாள் 'அவள்'. ஆண்டுகளாக ஆக அந்த நம்பிக்கை, ஆழமாக வேரூன்றிக் கொண்டேதான் இருக்கிறது என்பதற்கு சாட்சி... தொடர்ந்து அவள் விகடனை, தமிழ்க் குடும்பங்களின் தலைமகளாக நீங்கள் வைத்திருப்பதுதான்!

வழக்கமான பொழுதுபோக்கு அம்சங்களைத் தாண்டி, வாழ்க்கைக்கு கைகொடுக்கும் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் எங்கே இருந்தாலும் தேடிக்கண்டறிவதில் தமிழ்ப் பெண்களுக்கு நிகர், அவர்களே! அவ்வகையில், கடந்த பதினான்கு ஆண்டுகளில் ஒவ்வொரு காலகட்டத்திலும் உழைக்கும் மகளிர், கல்லூரிப் பெண்கள், இல்லத்தரசிகள் என்று பலதரப்பட்டவர்களையும், வாழ்க்கையில் புதிய நம்பிக்கைகளோடு உயரச் செய்யும் யுக்தியை தன் ஒவ்வொரு எழுத்திலும் அவள் பிரதிபலித்து வந்திருக்கிறாள்!
நேரடியாகவே உங்களை எல்லாம் சந்தித்து, கொண்டாட்ட தருணங்களை அமைத்து தருவதிலும், 'அவள்’ சளைத்ததில்லை.
ஜாலிடே கொண்டாட்டங்களில், பெண்கள் ஒவ்வொருவரும் அடைந்த மகிழ்ச்சி...
'காலேஜ் கேம்பஸில்', கற்பனை மற்றும் கைவண்ணம் காட்டி மாணவிகள் கலக்கிய வேகம்...
கோலப்போட்டி, காலேஜ் கல்ச்சுரல், மகளிர் திருவிழா என பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பெற்ற 'பிராக்டிகல் உற்சாகம்'...
'நீங்களும் தொழிலதிபர்தான்' பயிற்சி முகாம்களில் பெற்ற பலனுள்ள பயிற்சி...
'நீங்களும் நிருபர்'களாக மாறி, அவளை இன்னும் அலங்கரிக்கும் காட்சி...
இப்படி, இந்த பதினான்கு ஆண்டு கால ஓட்டத்தில், வாசகிகள் ஒவ்வொருவரும் பெற்ற... பெற்றுக் கொண்டிருக்கிற அனுபவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இந்த பதினைந்தாம் ஆண்டு துவக்க தருணத்தில், தன்னை இன்னமும் உங்களுக்கு மிகஅருகில் இருக்கும்படி மாற்றிக் கொண்டிருக்கிறாள் 'அவள்’. மகளிர் சார்ந்த விஷயங்களுக்கே முன்னுரிமை என்ற கண்ணோட்டத்திலிருந்து சற்று மாறி, உங்களுக்குப் பிடித்த எல்லா துறைகளிலிருந்தும் பயனுள்ள, ஆரோக்கியமான, சுவாரசியமான சங்கதிகளை 'புதுசுக்கெல்லாம் புதுசாக' இந்த இதழ் முதல் சொல்லப் போகிறாள்!
தானாக வந்த மாற்றமில்லை இது. நீங்களாக தொடர்ந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் வேண்டி விரும்பி கேட்டவைதான். குழந்தைகளோடும் வீட்டுப் பெரியவர்களோடும், சகதோழியரோடும்... ஏன், உங்கள் கணவரோடும்கூட பகிர்ந்து மகிழ்வதற்கான பல்சுவை செய்திகள், இனி தொடர்ந்து அணிவகுக்கும். அது, அதிவேக மாற்றம் காணும் இந்தப் புதுயுகத்துக்கு நீங்கள் ஈடுகொடுப்பதற்கு பக்கத் துணையாகவும் நிற்கும்!
பதினைந்தாம் ஆண்டு சிறப்பிதழை எதிர்பார்த்து, வெகுநாள் முன்பிருந்தே வாழ்த்துக் கடிதங்களை அனுப்பிக் குவித்த தோழிகளே... இதழைப் படித்த பின்பு உங்கள் விமர்சனங்களையும் மறக்காமல் அனுப்பிக் குவிப்பீர்கள்தானே..!
உரிமையுடன்

ஆசிரியர்.