மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி-காதலுக்கு மரியாதையில்லை !'

என் டைரி-காதலுக்கு மரியாதையில்லை !'

 என் டைரி -245

வாசகிகள் பக்கம்

என் டைரி-காதலுக்கு மரியாதையில்லை !'

பிரைமரி ஸ்கூல் ஆசிரியையாக பணிபுரியும் எனக்கு வயது முப்பது. இன்னும் மணமாகவில்லை. சிறு வயதில் இருந்தே அப்பாவும், அம்மாவும் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டேதான் இருப்பார்கள். திருமணத்துக்கு முன்பே ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்திருக்கிறார் அப்பா. திருமணத்துக்குப் பின் வெளி வந்துவிட்டாலும், அதைச் சொல்லியே குத்திகாட்டுவது அம்மாவின் வழக்கமாகிப் போக, அவரை அன்பால் சமாதானப்படுத்த தெரியாத அப்பா, ''ஆமாடி... என்ன பண்ணுவ..?'' என்று எகிற, சண்டை... சச்சரவுகள் என்பது எங்கள் வீட்டின் தினசரி நிகழ்வுகளாகிப் போயின.

அத்தனை சண்டைகளுக்கு இடையிலும், பெற்றோர் என் மேல் உயிராகவே இருந்தார்கள். ''உனக்காகத்தான் நான் உயிரோடயே இருக்கேன்... இல்லைனா இந்த மனுஷனை கட்டிக்கிட்டு அழறதுக்கு எப்பவோ செத்துருப்பேன்...'' என்று அடிக்கடி என்னிடம் அழுவார் அம்மா. ''இந்த ராட்சஸியோட கொடுமைகளை எல்லாம் தாங்கிட்டு உனக்காகத்தான் இந்த வீட்டுல இருக்கேன்... இல்லைனா எப்பவோ வீட்டை விட்டுப் போயிருப்பேன்...'' என்று மன பாரத்தை என்னிடம் கொட்டுவார் அப்பா. அப்படிப்பட்டவர்கள், இன்று என்னாலேயே பிரிந்துவிடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது. காரணம்... என் காதல்!

##~##

ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்தபோது, எந்த கெட்ட பழக்கமும் இல்லாத, அன்பான, பொறுப்பான அந்த மனிதரைக் காதலித்தேன். இருவருக்கும் வேலை கிடைத்து ஸ்திரமானபின், காதலை வீட்டில் சொன்னோம். அவர் வீட்டில் ஏற்றுக்கொண்டார்கள். நான் உயர் சாதி... அவர் தாழ்த்தப்பட்ட சாதி என்பதால் எங்கள் வீட்டில் கடும் எதிர்ப்பு! அத்தனை விஷயங்களிலும் ஆளுக்கொரு பக்கம் நிற்கும் அப்பாவும் அம்மாவும், என் காதலைக் கூட்டாக எதிர்க்கிறார்கள். அந்தளவுக்கு சாதி வெறி!

கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக, 'மனம் மாறுவார்கள்’ என்று காத்திருக்கிறோம். மாறியபாடில்லை. இவர்களை விட்டுவிட்டு காதலரைக் கைப்பிடிக்கவும் மனம் துணியவில்லை. காரணம், எனக்காகவே இதுவரை இணைந்திருக்கும் பெற்றோர், நான் விட்டுச் சென்றால் வாழ்க்கையில் வேறு எந்தப் பிடிப்பும் இன்றி திசைக்கொருவராக பிரிந்துவிடுவார்களே என்ற பயம்தான்!  

காதலுக்காக பெற்றோரை துறப்பதா... காலம் கனியும் என்று இனியும்கூட காத்திருப்பதா?

- ஊர், பெயர் வெளியிட விரும்பாத வாசகி

 என் டைரி 244ன் சுருக்கம்...

''சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவளான எனக்கு, மிலிட்டரி ஆபீஸரை மணமுடித்தனர். பெண் குழந்தை பிறந்து, இறந்துவிட... ஒட்டுமொத்த சந்தோஷமும் பறிபோனது. ஓவியங்களைத் தீட்டுவதில் தனிமையைப் போக்கிக் கொண்டிருந்த என்னிடம் ஒரு ஓவியரை அறிமுகப்படுத்தினாள் தோழி. அவர் மூலம் கண்காட்சி நடத்தினேன். நல்ல தோழனாக பழகியவரிடம், துக்கங்களையும் பகிர்ந்து கொண்டேன். ஆனால், கள்ளமில்லா நட்பில் புகுந்தவீட்டினர் புழுதி வாரித் தூற்ற, அதைக் கேட்டு, என்னை வீட்டோடு முடக்கிவிட்டார் கணவர். நல்ல நட்பை இழந்துவிட்டோமே என்று குமுறுகிறது என் மனம்!''

'நம்பிக்கையோடு காத்திரு!’

என் டைரி 244க்கான வாசகிகளின் ரியாக்ஷன்...

பொதுவாக, ஆண்  பெண் நட்புக்கே ஆயுள் கம்மிதான். அதிலும் திருமணமான பெண்ணுக்கு, ஆண் நட்பு என்பது... நித்யகண்டம்தான். அப்படியிருக்க, உன் நட்புச் செடியின் வேரில், புகுந்தவீட்டார் வெந்நீர் பாய்ச்சியதில் ஆச்சர்யப்படுவதற்கு ஏதுமில்லை. கணவர், புகுந்த வீட்டார் மீது வெறுப்பு கொள்ளாமல், அவர்களின் உதவியோடு, வீட்டிலேயே அக்கம் பக்கத்து குழந்தைகளுக்கு ஓவியம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியையாக மாறு. உன் மனம் நிம்மதி அடையும்!

 தஸ்மிலா அஸ்கர், கீழக்கரை

ஒரேமாதிரியான ரசனையுடைய தம்பதிகள் ஆயிரத்தில் ஒன்று இருந்தாலே அதிசயம்தான். அப்படி இல்லாமலிருப்பது ஒரு குறையல்ல. பிற ஆணிடம் (நண்பனாக இருந்தாலும்) துக்கத்தைப் பகிர்ந்து கொண்டேன் என்றதும் ஏற்புடையதல்ல. 'புத்தகத்தைப் போன்ற சிறந்த நண்பனில்லை’ என்பார்கள். நல்ல நண்பனாக, தூரிகையே உனக்குத் துணைஇருக்கிறதே!

 எல்.இந்திரா, சென்னை4

பணி நிமித்தம், பிரிந்து கிடக்கும் தம்பதிகள் இன்று ஏராளம். குடும்ப வாழ்க்கையின் நிம்மதியைக் காக்க, ஆண் நட்பை, தொடர்வது சரியல்ல. அது, தூய நட்பாக இருந்தாலும் துயரத்தைத்தான் தேடித் தரும். காரணம், நம் சமூக அமைப்பு அப்படி! நண்பரே, உணர்ந்து விலகிவிட்ட நிலையில், நீ ஏன் புலம்பித் தவிக்கிறாய். ராணுவத்தினருக்கு பணி ஓய்வு, சீக்கிரமே அளிக்கப்படுவதால், உன் தனிமையைப் போக்க சீக்கிரமே உன்னிடம் வந்து விடுவார். உன் சித்திர ஆர்வத்தைப் புரிந்து, உனக்கு உதவவும் செய்வார். நம்பிக்கையோடு காத்திரு!

 என்.ரங்கநாயகி, கோவை25